August 10, 2026
அரசறிவியல் சொற்களஞ்சியம்

ஏகாதிபத்தியம் என்ற எண்ணக்கரு (Concept of Imperialism)

ஏகாதிபத்தியம் என்பது ஏகபோகம் (Monopoly) என்பதைக் குறிப்பதாகும். இது முதலாளித்துவத்தின்இன்னோர் பொருளாதார பரிமாணமாகவே உள்ளது. இது முதலாளித்துவத்தின் பொருளாதாரத்தின் ஒரு கட்ட பண்பு மாற்றமாகும். ஏகாதிபத்தியம் பற்றி லெனின் குறிப்பிடும் போது முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட வளர்ச்சி ஏகாதிபத்தியம் என்றுரைத்ததுடன் முதலாளித்துவத்தின் ஏகபோகக் கட்டமே ஏகாதிபத்தியம் என்றார். லெனின் ஏகாதிபத்தியத்தின் குணாதிசயம் தொழில்துறை மூலதனம் அல்ல நிதி மூலதனம் தான் என்கிறார். உற்பத்தியின் ஒன்றுகுவிப்பு அதிலிருந்து ஏகபோகம் எழுதல் வங்கிகள் தொழில் துறையுடன் இணைதல் அல்லது ஒன்றுகலத்தல்- இதுவே நிதி மூலதனம் உருவாவதற்கான வரலாறு. இதுவே நிதி மூலதனம் என்ற கருத்தின் உள்ளடக்கம். நிதி மூலதனம் என்பது வங்கிகளின் பிடியிலுள்ளதும், தொழிலதிபர்களால் உபயோகிக்கப்படுவதுமான மூலதனமாகும். முதலாம் உலக போரை லெனின் விளக்கும் போது, போட்டியிலும் இரு ஏகாதிபத்தியங்களுக்கிடையே இரு ஏகபோகங்களுக்கிடையே நிதி மூலதனத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையே நடைபெறும் போராகும் என்றார். முதலாம் உலக போரைத் தோற்றுவித்த அதே ஏகாதிபத்தியப் பொருளாதார முறைமையே இரண்டாம் உலக போரை தோற்றுவித்தது. ஏகாதிபத்தியம் சுதந்திரத்திற்கான முயற்சியைத் தோற்றுவிக்காது. மாறாக ஆதிக்கத்திற்கான முயற்சியையே எங்கும் புகுத்துவதில் கவனம் கொள்ளும். இதுவே நிதி மூலதனத்திற்கும் ஏகபோகங்களுக்குமான சகாப்தமாகும். இது இருவகையில் நிகழ்வதாக கருதப்படுகிறது. ஓன்று முன்னாள் சோவியத்யூனியனின் சோஸலிஸத்தை எதிர் கொள்வதற்கு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய அரசுகள் தமக்கிடையே ஒருவகை சமரசத்தை செய்திருந்தன. இரண்டு, சோவியத் யூனியனுடன் நேரடி போரில் ஈடுபடாது தமது ஏகாதிபத்திய விரிவாக்கத்தை உலகளாவிய ரீதியில் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த அனுபவமே அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளையும் ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான சமரசக் கூட்டையும் ஏற்படுத்துவதில் வெற்றிகண்டது. அதனை அடுத்துவரும் தசாப்தங்களில் தொடர்ச்சியானதாக பேணுவதில் கவனம் கொண்டு செயல்படுகிறது. சமகாலத்தில் நிலவும் ஏகாதிபத்திய சூழலை அமெரிக்கா தலைமையிலான அணி பாதுகாத்துவருகிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக உருத்திரண்டதாக கருதப்பட்ட போதே ஜோன் ஹப்ஷன் (John A. Hobson)என்ற இங்கிலாந்தின் பொருளியல் தத்துவஞானி 1902 ஆம் ஆண்டு எழுதிய Imperialism என்ற நூலில் தெளிவுபடுத்தப்பட்ட சிந்தனையே ஏகாதிபத்தியமாகும். முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பை விஞ்ஞானபூர்வமாக வியாக்கியானம் செய்த பொருளியல் தத்துவஞானியான அடம்ஸ் சிமித் விலைப்பொறிமுறை, நிறைபோட்டி ஆகிய பொருளாதார விதிகளை உடைத்துக் கொண்டு வெளிக்கிளம்பிய கோட்பாடே ஏகாதிபத்தியமாகும். கிரியா அகராதி சிறிய நாடுகள் மீது வலிமை படைத்த பேரரசுகள் செலுத்துகின்ற அரசியல், பொருளாதார ரீதியான ஆதிக்கம் ஏகாதிபத்தியம் எனக் குறிப்பிடுகிறது. ஹன்ஸ் மோகன்தோ குறிப்பிடும் போது, பொருளாதார நலன்களை அடைவதற்காக பலவீனமான நாடுகளின் மீது பேரரசுகள் செலுத்தும் கொள்கை ரீதியான ஆதிக்கத்தை ஏகாதிபத்தியம் என்கிறார். இது ஒரு அடிமைப்படுத்தலை குறிக்கிறதாகவே அவர் அளவீடு செய்கிறார். விளாடிமிர் லெனின் முதலாளித்துவ முறையின் ஒரு தனி உரிமைச்சட்டகம் ஏகாதிபத்தியம் எனக் குறிப்பிடுகின்றார்.
ஏகாதிபத்திய கூட்டுக்கள் தற்காலிகமானதென்றும் அக்கூட்டுக்கள் போருக்கு போவதற்கு முன்னேற்பாடுகளை ஏகாhதிபத்தியத்தின் பொருளாதார குணாம்சமாக உள்ளதென லெனில் குறிப்பிட்டார். ஆனால் இரண்டாம் உலகப் போரின் அனுபவம் மற்றும் அரசியல் பொருளாதார நிலவரம் அரைநூற்றாண்டுக்கு மேலான கூட்டினை ஒன்றுசேர்ந்த ஏகாதிபத்தியங்கள் நிலைத்து நிற்கும் வடிவத்தை உருவாக்கின. சோவியத்யூனியனுக்கும் அதன் சோஸலிஸக் கொள்கைக்கும் எதிராக ஒன்று திரண்ட ஐரோப்பிய அமெரிக்க ஏகாதிபத்தியங்களுடன் ஆசியாவில் ஜப்பானையும் கூட்டுச்சேர்த்துக் கொண்டன. இத்தகைய ஏகாதிபத்திய நாடுகள் தமக்குள்ளே சமரசம் செய்து ஒன்றுபட்டுக் கொண்டன. முதலாளித்துவம் எதிர் புரட்சியிலிருந்து தம்மை தக்கவைத்துக் கொள்ள சமூக நலன்பேண் அரசுகள் என்ற விட்டுக் கொடுப்புக் கொள்கையை முதன்மைப்படுத்தின. அவ்வாறே ஏகாதிபத்தியம் தம்மிடையே எழுந்த பகைமுரண்பாடுகளை கைவிட்டு விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு சமரசம் செய்யும் நிலையை உருவாக்கின. ஏகாதிபத்தியம் வெறுமனையே ஒரு யாந்திரீக அணுகுமுறையைக் கொண்டதல்ல. தனது உயிர்வாழ்வுக்கு ஏற்ப காலகட்ட நிலமைகளுக்கு ஏற்றவகையில் விட்டுக் கொடுப்புகளைச் செய்து தம்மை தக்கவைத்துக் கொள்ளும் இயல்பைக் கொண்டது. ஏகாதிபத்தியம் சூழலுக்கு அமைவாக தம்மை தகவமைக்கும் திறன் கொண்டது.
ஏகாதிபத்தியத்தை ஹாபஷன் இரு பிரிப்புகளாக்குகின்றார். அதனை லெனின் முதன்மைப்படுத்துகின்றார். அதாவது புதிய ஏகாதிபத்தியம், பழைய ஏகாதிபத்தியம் என்பதாகும். முதலாவது வளர்ந்துசெல்லும் ஓரேயொரு சாம்ராச்சியத்துக்கான ஆசைக்குப் பதிலாக அரசியல் ஆதிக்க விஸ்தரிப்பு வாணிப ஆதாயமுமாகிய ஒத்த வேட்கைகளினால் ஒவ்வொன்றும் உந்திவிடப்பட்டு போட்டியிடும் சாம்ராஜ்யங்களது தத்துவமும் நடைமுறைமாக இருப்பதுமாகும். இரண்டாவதாக வாணிப நலன்கள் மீது நிதி அல்லது முதலீட்டு நலன்கள் ஆதிக்கப் பெறுவதாகும்.ஆனால் பனிப்போர் முடிபடைந்த பின்னர் தெளிவாகவும் துல்லியமாகவும் மேற்குறித்த போக்குக்கு புறம்பாக உள்ளதை உணரமுடிகிறது. அரசியல் அர்த்தத்தில் அமெரிக்கா தலைமையில் ஓர் உலகளாவிய ஏகசாம்ராச்சியம் தோன்றியிருந்தது.இது சில அம்சங்களில் பழைய ஏகாதிபத்தியத்தைப் போல் இருப்பதுடன் சில அம்சங்களில் புதிய ஏகாதிபத்தியத்தை கொண்டதாகவும் காணப்படுகிறது.பழைய பிரித்தானிய ஏகசாம்ராச்சியம் போல் தற்போதைய ஏகாதிபத்தியம் மாற முயலுகிறது. புதிய ஏகாதிபத்தியத்தில் பல சாம்ராச்சியங்கள் எழுச்சி பெற்றன. பல ஏகசாம்ராட்சியங்கள் மத்தியில் ஏற்பட்ட ஏகபோகத்திற்கான போட்டிகள் பகைமுரண்பாடுகளாக திரட்சி பெற்று போர்களைத் தோற்றுவித்தது. இன்றைய ஏகாதிபத்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான ஏகசாம்ராச்சியப் பின்னணியில் அரசுகளுக்கிடையிலான வர்த்தக ஆதிக்கப் போட்டியானது பகைமுரண்படாய் மாறி போராய் வெடிக்காது தடுத்துக் கொள்வதற்கான நிறுவன கட்டமைப்புக்கள் தோன்றி அவற்றுக்கிடையே நியமங்களுக்கு அமைவான வலையமைப்புக்களையும் கொண்ட வடிவம் ஒன்று ஏகாதிபத்திய அரசுகளுக்கிடையே ஏற்பட்டுள்ளது. அதாவது ஒர் ஏகசாம்ராச்சியத்திற்குள் பல ஏகாதிபத்திய அரசுகள் என்ற புதிய பரிமாணம் தோன்றியுள்ளது. அவற்றுக்கிடையே போட்டிகள் நிலவுகின்ற போதும் அவை அவற்றுக்கிடையே போர் வெடிக்காமல் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு சமரச கூட்டுக்கட்டுமானத்தை கொண்டதாய் ஏகாதிபத்தியம் பரிமாணமடைந்துள்ளது. இன்றைய சமூக பொருளாதார முறைமை என்பது உலகளாவிய அர்த்தத்தில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகால தொடர்ச்சியைக் கொண்ட ஓர் அமைப்பென்று குண்டா பிரங் (Gunda Frank) மற்றும் பரி கிப்ஸ் (Bari Gills) போன்றவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இதனை ஐந்நூறு ஆண்டுகால உலகளாவிய அரசியல் பொருளாதாரத்தின் நீட்சி என்று சமீர் அமீன் (Samir Amin) மற்றும் வோலர்ஸ்ரெயின்(Wallerstein) போன்றவர்களும் விவாதிக்கின்றனர். கடல்வழி வர்த்தக யுகம் தொடங்கிய(Columbus-Vasco da Gama- Vas-Bus Epoch) பின்னரே அத்தகைய உலக அரசியல்-பொருளாதார ஒழுங்கு உதயமாகியதென அவர்கள் வரையறை செய்கின்றனர்.(கொலம்பஸ்-வாஸ்கோ டா காமா சகாப்தம், 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நவீன உலகளாவிய கடல்வழிப் பயணத்தின் விடியலைக் குறிக்கிறது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492 இல் மேற்கு நோக்கி அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார், வாஸ்கோடா காமா 1497-1498 இல் ஆப்பிரிக்காவைச் சுற்றி கிழக்கு நோக்கி இந்தியாவிற்குப் பயணம் செய்தார். இந்த இரட்டைப் பாதைகள் உலக வர்த்தகம், பேரரசுவாதம் மற்றும் உலகளாவிய இணைப்பு ஆகியவற்றை மறுவடிவமைத்தன).
இதில் இந்தியப் பொருளாதார முன்னணி நிபுணரும் பேராசிரியருமான பிரதாப் பட்நாயக் (Prabhat Patnaik) சமகால ஏகாதிபத்தியம் பற்றிய விவாதத்தில் லெனினுக்கு பின்னர் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கினை தெளிவாக விபரிக்கின்றார். இது மார்க்கிஸத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கான விவாதமாக அமைந்தாலும் நடைமுறையில் ஏகாதிபத்தியங்களின் வளர்ச்சியையும் அவற்றில் ஏற்பட்ட மாறுதலையும் அடையாளப்படுத்துகின்றார். அதாவது,மூலதனம் மையப்படுத்துகின்ற போக்கானது லெனின் கூறியதைவிட பலமடங்கு முன்னோக்கி நகர்ந்துவிட்டது. ஒரு நாட்டின் மூலதனமானது இன்னோர் நாட்டின் மூலதனத்துடன் மையப்படுத்தப்பட்டு முரண்பட்டு பகைமையுடன் செயல்படுவதாக குறிப்பிடுவதை மறுதலிப்பதாகவும் எல்லா நாட்டு மூலதனத்தையும் உள்ளடக்கிய ஒரு உலகமயப்படுத்தப்பட்ட மூலதனமாக உருவெடுத்துள்ளது என்கிறார். லெனின் காலத்தைப் போல் அல்லாது மூலதன மையப்படுத்தல் என்பது வெறும் அளவுரீதியானதல்லாது தன்மைரீதியாகவும் நடைபெறும் மாற்றமாகவும் ஆகிவிட்டது எனக்குறிப்பிடுகின்றார். ஏகாதிபத்திய நாடுகள் குறிப்பிட்டளவு ஒன்றுமையுடன் செயல்படும் சூழலில் செயல்படுகின்றன. அதற்காக அவற்றுக்கிடையே பகைமை நீங்கிவிட்டது என்று அர்தமாகாது என்கிறார் பட்நாயக்.
அவரது மேலும் விபரிக்கும் போது, எந்தவொரு மூலதனத்திற்கும் அரசின் ஆதரவு அவசியமாகிறது. சர்வதேச அளவில் இடம்பெறும் மூலதனத்திற்கும் சர்வதேச அளவில் செல்வாக்குச் செலுத்தும் ஏதாவது ஒரசின் ஆதரவு தேவைப்படுகிறது. உலகளாவிய அரசின் அத்தகைய ஆதரவு கிடைக்க வேண்டுமாயின் அம்மூலதனம் உலகளாவிய ரீதியில் திரட்டப்பட்ட மூலதனமாக இருக்க வேண்டும். எனவே நிதி மூலதனம் மாறுபட்ட கலவையாக, பலநாடுகளிலிருந்து திரட்டப்பட்ட கூட்டாகச் செயல்பட வேண்டி இருப்பதால் ஏகாதிபத்திய உட்பகை மட்டுப்படுத்தப்பட்டு ஒன்றுமையுடன் செயலாற்ற வேண்டி இருக்கின்றது. அதுவும் ஏதோவொரு நாட்டின் தலைமையில் செயலாற்ற வேண்டும். அது அமெரிக்கா என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்.
உலகம் முழுவதற்கும் பொதுவான ஒரோயொரு ஏகாதிபத்திய வர்த்தக நிதி மூலதன ஒழுங்கு உண்டு. அத்தகைய உலக ஏகாதிபத்திய ஒழுங்குக்கு அமெரிக்க அரசு தலைமை தாங்குகிறது. தற்போதைய உலக ஏகாதிபத்திய வர்த்தக ஒழுங்கின் பங்குதாரராக ஜப்பான, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ரஷ்சியா, பிறேசில் என்பன காணப்படுகின்றன. உலகளாவிய ரீதியில் எந்த அரசு வர்த்தகத்தில் ஈடுபட்டாலும் அந்த அரசு ஏகாதிபத்தியத்தின் பங்குதார அரசாகவே திகழும். இவ்வகையான உலகம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய அரசுகளுக்கிடையே பங்குபோடப்பட்டுள்ளது என்பதைக் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. இதன் அடுத்த கட்டம் 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது சதாப்தத்தில் எழுச்சி பெற்றுள்ளதாகவே தெரிகிறது. உலகளாவிய ரீதியில் பொருளாதார பாசிஸம் வலுவான ஒன்றாக மாறியுள்ளது. அதற்குள் சீனா உலகளாவிய ஏகாதிபத்தியத்தின் கட்டமைப்புகளை விருத்தி செய்ய முனைவதுடன் அமெரிக்காவின் அணுகுமுறை பலவீனமடைவதையும் மாற்றத்திற்குள்ளாவதையும் காணமுடிகிறது. இவை அனைத்தும் மூலதனம் சார் பரிமாணத்தினால் கட்டமைக்கப்படும் வடிவமாக உள்ளது. உலகளாவிய நிதிப் பரிமாணத்தின் திரட்சிக்குள் சீனாவை மையப்படுத்திய குவிவென்று நிகழ்கிறது.

(ஆதாரம்: திருநாவுக்கரசு. மு, (2007). ஒற்றைiமைய உலக அரசியலில் போரும் சமாதானமும், தமிழியல், இலண்டன், காலச்சுவடு பப்ளிகேசன்).