April 19, 2026
அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழரின் அரசியல் நாகரீகத்தின் போக்கும் பலவீனமடையும் அரசியலும்?

ஈழத்தமிழர் அரசியல் நீண்ட பாரம்பரியத்தையும் மரபுகளையும் கொண்டது. முடியாட்சியை மரபிலிருந்து நவீன காலம் வரையும் அரசியல் நாகரீகத்தின் மீதான செல்நெறியை சொம்மையாக வரைந்து கொண்ட ஒரு இனமாக ஈழத்தமிழர்கள் காணப்பட்டனர். மத, மொழி இன வேறுபாடுகளைக் கடந்து சமமான வாய்ப்புகளுக்கும் பங்கீடுகளுக்காகவும் அரசியல் நாகரீகத்தை அடையாளப்படுத்திய ஒரு சமூகமாக 21 ஆம் நூற்றாண்டு வரையும் விளங்கியது. ஆயுதப் போராட்டம் அதில் அதிக உச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இக் கட்டுரையும் ஈழத்தமிழர்களின் அரசியல் நாகரீகத்தில் எழுந்திருக்கும் போக்குகளை தேடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் நாகரிகம் என்பது ஓர் இனத்தின் அல்லது சமூகத்தின் பண்பாட்டினாலும் கலாச்சார மரபுகளிலும் தனக்குள்ளே கொண்டிருக்கின்ற இயல்பான வடிவமாகும். அது பிற இனங்களையும் தேசங்களையும் தேசியங்களையும் அளவீடு செய்கின்ற தன்மையிலும் அங்கீகரிக்கின்ற முறைமைகளிலும் நாகரீகம் அடையாளப்படுத்தப்படும். உலகில் எந்த மூலையிலும் நெருக்கடிகள் ஏற்படுகின்ற போது அதற்காக நியாயத்தை முன் வைப்பதும் போராடுவதும் அடிப்படைக் கூறுகளாகும். இதுவே ஈழத்தமிழரின் அடிப்படை அம்சமாக கடந்தகாலத்தில் காணப்பட்டது. கடந்தகால வரலாறு முழுவதும் அவ்வகையான அரசியல் நாகரீகத்தை பின்பற்றியதோடு அகரீதியிலும் அவகை மரபுகளை பாதுகாத்தும் பேணியும் வந்துள்ளனர். ஆனால் சமகாலம் அதற்கான வாய்ப்புகளை அகரீதியிலும் பிற உலக ரீதியிலும் பலவீனமான தொன்றாகவே இனம் காணப்படுகிறது.

ஈழத்தமிழர் அகரீதியான பிற ரீதியான அரசியல் நாகரீகத்தை அதிகம் பேணிய அனுபவங்கள் உண்டு குறிப்பாக சீன இந்தியா போர் நிகழ்ந்த போது இந்தியாவுக்கு அனுசரணையாக ஈழத்தமிழர்களை அணிதிரட்டிய வரலாற்றைத் தேடுகிறபோது உணர முடிகிறது. அவ்வாறே இந்து சைவம் இஸ்லாம் கிறிஸ்தவம் என்ற வேறுபாடுகளைக் கடந்து வரலாறு முழுவதும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் தற்போது உலகத்தை நோக்கி குறைந்தபட்சம் அயல்நாடுகளை நோக்கி ஈழத்தமிழர் கொண்டிருக்கின்ற அரசியல் பிரமையும் உள்நாட்டில் பிரதேசசபைகள் நகர சபைகள் மாநகரசபைகள் அபிவிருத்திசபைக் கூட்டங்களில் கலந்துரையாடல்கள் பாராளுமன்ற உரைகள் என்பன அனைத்துமே அத்தகைய அரசியல் நாகரீகத்தை கொண்டிருக்காத மோசமான பலவீனங்களை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. இதற்கு வலுவான காரணங்கள் பல அடையாளப்படுத்தப்படுகிறது. போர் ஒரு காரணமாக அமைய முடியுமா? என்ற விவாதமும் நவீன தொழில்நுட்பம் பிரயோகம் இன்னொரு காரணமாக இருக்குமா? என்ற எண்ணங்களும் ஈழத்தமிழர் மத்தியில் உரையாடப்படுகிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து வேறு பல காரணங்களும் ஈழத்தமிழர்கள் மத்தியில் தீவிரமாக வளர்ந்து வருகிறது. அவற்றை விளங்கிக்கொள்வது அவசியமானது.

முதலாவது ஈழத்தமிழர்கள் தமது அரசியலை அறிவியல் பூர்வமாக கட்டமைக்க தவறி இருந்தனர். மிதவாத அரசியல் போராட்டமும் ஆயுதப்போராட்டமும் சில விதிவிலக்குகளை கொண்டிருந்தாலும் ஆழமாக அறிவியல் ரீதியில் மக்களை அரசியல் மயப்படுத்தத் தவறியதன் விளைவுகளை தந்திருக்கின்றது. போர் வறுமையையும் சுமையையும் அதிகம் ஏற்படுத்திய போதும் உலகத்தின் வடிவங்களையும் அதன் இருப்புக்களையும் தரிசிக்கின்ற தொலை தொடர்பையும் அதற்கான உளரீதியான அவாக்களையும் ஈழத்தமிழர் மத்தியில் போருக்கு பின்னரான காலம் ஏற்படுத்தி உள்ளது. இதனை நோக்கிய ஈழத்தமிழரின் அறிவியல் கட்டமைக்கப்படவில்லை. அரசியல் அறிவியலாக காணப்படவில்லை. இது ஒரு வகையில் அரசியல் அறிவு சார்ந்த குறுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட விவாதங்களையும் விவரிப்புகளையும் திட்டமிடல்களையும் செய்ய வேண்டிய ஓர் இனம் அறிவியல் வறுமையினால் தனது எண்ணங்களை பெரிதாகவும் புரிதலை மிகக் குறுகியதாகவும் வடிவமைத்துள்ளது. இதனால் பெரிய எண்ணங்களுக்கு முன் குறுகிய சிந்தனைகள் மோதலையும் பகைமையும் அகரீதியான அவமதிப்புகளையும் மேற்கொள்ள தயாராகிறது. இதுவே எல்லை கடந்த பகைமைக்கும் அகத்தின் தோல்விகளுக்கும் வழி வகுத்து விடுகிறது.

இரண்டாவது அரசியல் தலைமைகளும் கட்சி அரசியலும் ஈழத்தமிழ் மக்களை அரசியல் ரீதியில் பயப்படுத்துகின்ற செய்முறை ஒன்றை கடந்த பல தசாப்தங்களாகவே கட்டமைத்துவருகிறது. மக்களின் துயரத்தை விட நெருக்கடிகளை விட வாக்குகளும் வாக்குகளை பெறுவதற்கான வேட்பாளர்கயும் கட்சிகளின் அரசியல் விளம்பரப்படுத்துகிறது. அவர்களுடைய அரசியல் அறிவின்மையும் தேடலுக்குரிய அவாயின்மையும் நீண்ட அறிவியல் பூர்வமான புரட்சிகரமான எண்ணம் இல்லாத தனிமனித நலன்களும் இதற்கான அடிப்படை காரணமாக காணப்படுகிறது. தூரநோக்கற்ற அரசியல் தீர்மானங்களும் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளும் அபாயகரமான சூழலை ஈழத்தமிழர் முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. ஈழத்தமிழர்கள் கட்சி நலன்களுக்கும் தனிப்பட்ட தலைவர்களின் அவாக்களுக்கும் அகப்பட்டுள்ளனர். அதுவே பெருமளவுக்கு முகநூல் பக்கங்களையும் அரசியல் பிரச்சார மேடைகளையும் நிரப்பீடு செய்கிறது. இதுவே இன்றைய அவமதிப்பு அரசியலின் அடிப்படையாக மாறி உள்ளது. அதற்காக பழக்கப்பட்ட மக்கள் கூட்டமும் அதனை பயன்படுத்தும் அரசியல் தலைமைகளும் ஈழத்தமிழர் மத்தியில் அதிகரித்துள்ளனர்

மூன்றாவது போரின் வடுக்களில் இருந்தும் அதன் அவிலாசையிலிருந்தும் ஈழத்தமிழர்கள் அடுத்து வரும் காலத்தை கணிப்பீடு செய்யவில்லை. மாறாக கருநிலை அரசு பற்றிய விம்பத்துடன் காணப்படுகின்ற ஈழத்தமிழர் அதனை ஒரு பிரமிப்பாக உரையாடி காலத்தை கடத்துகின்றனர். அதிக உரையாடலின் வெளிப்பாடும் இன்றைய காலத்திற்கு அப்பாற்பட்ட முன்னைய கால அரசியலின் வெளிப்படாகவே உள்ளது. அத்தகைய சூழலுக்குள் எல்லோரும் அகப்பட்டு உள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களும் அரசியல் கட்சி தலைமைகளும் தமது அபிலாசைகளை அடைவதற்கு கருநிலை அரசுக்கு சார்பானவர்களாக காட்டிக் கொள்ள அதிகம் முனைகின்றனர். அத்தகைய பிரமிப்பில் இருக்கின்ற மக்களை அதிலிருந்து வெளியே வராமல் தடுத்து உணர்வுகளை மட்டும் மையப்படுத்தி வாக்குகளை அடைந்து அதன் ஊடாக தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களை எட்டிக்கொள்ள முயலுகின்றனர். இதுவே ஈழத்தமிழர் அரசியல் பிரதிபலிக்கும் நாகரீகங்களை தொலைத்து விட்ட அரசியல் எண்ணங்களுக்கும் வழி வகுத்திருக்கின்றது.

நான்காவது சமூக வலைத்தளங்களும் அவற்றின் மீதான ஆசுவாசப்படுத்தாலும் ஈழதமிழரிடம் அதீதமான தாக்கத்தை தந்திருக்கிறது. உணர்வுரீதியிலும் கற்பனையிலும் அதிகம் கடத்தப்படும் எண்ணங்களை அரசியலுக்கும் அரசியல் சார் அறிவுக்கும் முதலீடு செய்கின்றனர். இலக்கியங்களில் பேசப்படுவதும் சினிமாவில் சித்தரிக்கப்படுவதும் குறிப்பாக கீழைத்தேச சினிமாவில் சித்தரிக்கப்படும் அம்சங்களையும் மீதேற்றம் செய்து அரசியலுடனும் அரசியல் தலைமைகளோடும் கடந்த கால அரசியல் நாகரீகமான மனிதர்களோடும் மையப்படுத்தி ஈழத்தமிழர்கள் தமது அரசியலை வடிவமைக்க முனைகின்றனர். அதன் அறுவடைய முற்றிலும் மாறுபட்ட ஏற்றுக் கொள்ளப்பட முடியாத அறிவுக்கும் யதார்த்தத்திற்கும் தொடர்பற்ற ஓர் அரசியல் வறுமைக்குள் தமிழர்களுடைய அரசியல் போக்கு மாறியிருக்கின்றது. அறிவியலை முழுமைப்படுத்தக் கூடிய வேலைத்திட்டங்களும் அது சார்ந்திருக்க கூடிய அறிவியல் நுட்பங்களும் அதீதமாக குவிந்திருக்கிற வலைத்தளங்களை காணமுடிகிறது. இன்றைய உலகத்தில் அறிவியலின் அடிச்சுவடுகளாக வலைத்தளங்கள் தேடப்படுகின்ற யுகம் இருக்கிறது. கற்பனையோடும் நாகரீகமற்ற தனத்தோடும் மோதிக்கொள்வதும் அசிங்கப்படுவதும் பிறரை அசிங்கப்படுத்துகின்ற எண்ணத்தில் இனத்தையும் அதன் அடையாளங்களையும் பண்பாட்டையும் அசிங்கப்படுத்துவது ஈழத்தமிழரிடம் அதீதமாக வளர்ந்திருக்கிறது. அதனை பேண வேண்டிய தேவையும் நிர்பந்தமும் வரையறைக்கு உட்படுத்தப்பட்ட வேண்டும் என்ற எண்ணம் ஈழத்தமிழரிடம் இல்லாதுள்ளது. எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்களே அதன் மீது ஈர்ப்பு கொண்டு அரசியலில் இருந்தும் சமூக செய்முறைகளில் இருந்தும் ஒதுங்கி இருக்கின்ற ஒரு நிலையை தந்திருக்கின்றது.

எனவே அரசியல் என்பது நாகரிகத்தின் வடிவங்களை அதிகம் கொண்டிருப்பது. நாகரீகங்களால் கட்டப்படுவது. அரசியலின் அடிச்சுவடு மிகத் தெளிவாக ஈழத்தமிழர்களின் மூதாதையர்களால் வடிவமைக்கபட்டிருந்தது. அத்தகைய அரசியல் நாகரீகத்தை அவர்கள் கொண்டிருந்தனர். அதனை நோக்கி ஈழத்தமிழர்கள் திரும்புகின்ற தேவை உலகின் அறிவியலின் நுட்பங்களை அரசியல் ரீதியில் எவ்வாறு முதன்மைப்படுத்தி தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டு முடிவுகள் அடிப்படையப்படுகிறது என்பது அவசியமானது. அத்தகைய செய்முறைக்குள் பிரவேசிக்க தவறுகின்ற ஈழத்தமிழர்கள் தங்களுக்குள் மோதி அழிந்து போகும் துயரத்தை அடைகின்ற நிலை ஏற்படும். ஈழத்தமிழர்க்கு எதிரிகள் தேவையில்லை என்ற நிலையை சமகால அரசியல் செல்நெறி உணர்த்தியுள்ளது. இதிலிருந்து மீளவேண்டியது அவசியமானது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: யாழ் தினக்குரல்)