ஒரு நாட்டின் வெளியுறவு கொள்கை என்பது அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சினைகளின் தீர்வாகவே வடிவமைக்கப்படுவது என்பது கோட்பாட்டு ரீதியான விபரணமாக காணப்படுகிறது. இந்தியாவின் இலங்கை நோக்கிய வெளியுறவும் அத்தகைய ஒரு நியமத்துக்குள்ளேயே உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு அரசியல் என்பது பிராந்திய பாதுகாப்பிலும் பிராந்திய உறுதித்தன்மையிலும் தங்கியிருக்கின்றது என்பது அதன் வெளியுறவில் காணப்படும் மாற்றங்களை கொண்டு அளவீடு செய்ய முடியும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பொறுத்து பலவீனமான வாதங்கள் காணப்படுகிறது குறிப்பாக ஈழத்தமிழர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் நிகழவில்லை என்று வாதங்களை முன்னிறுத்தி அதிகம் உரையாடிவருகின்றனர். இக்கட்டுரையும் இந்தியாவின் 77வது குடியரசு தினத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா முன்வைத்திருக்கும் வெளியுறவுசார்ந்த கருத்துக்களின் முக்கியத்துவம் பற்றியும் இந்தியாவின் நோக்கு நிலையையும் அடையாளப்படுத்த முயலுகின்றது.
இலங்கைக்கான இந்திய தூதுவர் இலங்கையின் ஆட்சியாளர்களின் முன்னிலையில் 77 வது குடியரசு தினத்தில் ஆற்றிய உரையின் சாராம்சம் நோக்குவது பொருத்தமானதாக அமையும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நோக்கில் இலங்கைக்கு விசேட இடம் உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவுகள் அயலவர்களுக்கிடையிலான பங்குடமை கூட்டுறவுக்கான உலகளாவிய மாதிரியாக வளர்ந்துள்ளது. இந்த பிரிக்க முடியாத பிணைப்பானது நாகரீகத் தொடர்புகள் மற்றும் புவியல் ரீதியான அமைவிடம் ஆகியவற்றினால் வலுவூட்டப்படுகிறது. நாம் இன்று நம்பிக்கை, நல்லெண்ணம், நட்புறவு ஆகிய அபரிமிதமான மட்டங்களை அனுபவிக்கிறோம். எதிர்காலத்திற்கு தயாராகும் ஒரு பங்குடமையை உருவாக்குவதற்காக நாம் பணியாற்றுகிறோம் என்றார்.
இவ்வாறு சந்தோஷ் ஜா முன்வைத்திருக்கும் கருத்தானது இந்தியாவின் வெளியுறவில் ஏற்பட்டிருக்கும் புதிய அணுகுமுறைகளை உள்ளடக்கியிருக்கின்றது. இந்தியா ஆரம்பகாலத்தில் இருந்து தென்னாசியப் பிராந்தியத்தில் வலுவான அரசியல் பொருளாதாரம் இராணுவ மற்றும் வளங்கள் சார்ந்தும் நிலப்பரப்பு சார்ந்தும் பாரிய அரசாக காணப்பட்டது. அதன் மக்கள் தொகை பொருளாதார ரீதியான சந்தை கட்டமைப்புக்கு வலிமையான பலத்தை கொடுத்துவருகிறது. இதனால் இந்தியாவின் அரசியல் பொறுத்து ஆதிக்க மனோநிலை ஒன்றை அது எப்போதும் பிராந்திய நாடுகள் மத்தியில் பின்பற்றுவதாக விவாதிக்கப்படுகிறது. அதனையே டீபை டீசழவாநச கொள்கையென உரையாடப்பட்டது. ஆரம்ப காலத்தில் அதாவது ஜவகர்லால் நேரு- இந்திராகாந்தி காலம் அத்தகைய ஆதிக்கத்தின் வடிவமாகவே வெளியுறவுக் கொள்கை காணப்பட்டது. வங்களாதேஷ் பிரிவினையோடு அத்தகைய வெளியுறவுக் கொள்கையின் போக்கு மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்திராகாந்தியின் வெளியுறவினால் ஏற்பட்ட பாரிய மாற்றம் ஒன்றை இலங்கை தீவும் அக்காலப் பகுதியில் அனுபவித்திருந்தது. இந்தியாவின் அண்டை நாடுகள் மீது காணப்படும் உள்நாட்டு விவகாரங்களில் குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைகள் மீதான கவனத்தை குவித்து அந்த நாடுகளின் அரசியலையும் அரசியலின் கொள்கைகளையும் கையாள தலைப்பட்டது. அதன் விளைவாகவே வங்காளதேஷ்ன் விடுதலையும், ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டமும் பிராந்திய ரீதியான அரசியலில் முனைப்பு பெற்றது. அதன் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சி நிலையம் ஐ.தே.குஜரால் பிரதமராக இருந்த காலப்பகுதி நட்புறவு ஒத்துழைப்பு உரையாடல் போன்ற இராஜதந்திர செய்முறைகளுக்கூடாக அயல் நாடுகளுக்கு இடையிலான நட்புறவை இந்தியா உருவாக்கியது. இதனை குஜரால் கோட்பாடு (Gujral Doctrine) என அழைத்தனர். இதன் வளர்ச்சி கட்டமாகவே இந்திய தேசத்தின் வெளியிறவுக் கொள்கை 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை (Neighbourhoods First Policy) என்ற கொள்கையை பிரகடனப்படுத்திக் கொண்டது. அதே காலப்பகுதி தென்னாசிய பிராந்திய நாடுகள் மீது அமெரிக்காவில் செல்வாக்கை விட சீனாவின் செல்வாக்கு அதீதமாக வளர தொடங்கியது. சீனாவின் உபாயம் வலுவான ஒத்துழைப்பை தென்னாசிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தியதோடு முத்துமாலை திட்டம் (String of Pearls) ஒன்றை வகுத்து சீனா தனது பொருளாதார ஒத்துழைப்பு ஊடாக இந்தியாவை சூழ இருக்கிற தென்னாசிய நாடுகளின் உட்கட்டமைப்பு முறையை வலுப்படுத்தும் விதத்தில் துறைமுகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற உத்தியை முன்னிலைப்படுத்தியது. இது ஒரு வகையில் இந்தியாவை சுற்றி வளைப்பதாகவே அமைந்திருந்தது. இதன் விளைவுகள் இந்தியாவின் இருப்பின் மீதும் ஒருமைப்பாட்டின் மீதும் இறையாண்மை மீதும் அதிக குழப்பங்களை தோற்றுவிக்க கூடியதாக அமைந்தது. இதன்வாயிலாக ஊடுருவல்களும் தாக்குதல்களும் நிகழ்ந்து வந்தன. இதுவே இந்தியாவின் உள்நாட்டில் உள்ள மிகப் பிரதான பிரச்சினையாக மாறியது. அத்தகைய பிரச்சனைக்குரிய தீர்வை சீனாவின் அதே பாணியில் (Win-Win Strategic) சில தனித்துவங்களோடு இந்தியா அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை பிரகடனப்படுத்தியது. அதனுடைய வளர்ச்சி போக்கும் வலுவான நட்புறவை பிராந்திய நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தியதோடு கிழக்கு பார்வை (Look East Policy) மேற்குடனான(Link West Policy) நட்புறவு என ஆசியாவுக்குள்ளேயே அண்டை நாடுகளை அரவணைத்துக் கொள்வதன் மூலம் தனது வெளியுறவில் புதிய அத்தியாயங்களை வரைந்து கொண்டது. இதனுடைய உள்ளார்ந்த வலுவில் இலங்கைத் தீவு தென்னாசியாவுக்குள்ளும் அயல்நாடுகளுக்குள்ளும் மூலோபாய ரீதியிலும், தந்திரோபாய ரீதியிலும் தனித்துவமான அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனை இலங்கைக்கான இந்தியத் தூதர் குடியரசுதின நிகழ்வில் உரையாற்றுகின்றபோது வெளிப்படுத்தியுள்ளார்.
ஈழத் தமிழர்கள் இனவிடுதலைப் போராட்டத்தின் முடிவில் இருந்து எத்தகைய அனுபவங்களை பெற்றிருக்கிறார்கள் என்பது அடிப்படையான கேள்வியாக தெரிகிறது காரணம் இந்தியாவை விரோதிப்பதும் பகைமையாக்குவதும் இந்திய வெளியுறவு மீது குற்றச்சாட்டுவதும் மரபார்ந்த அரசியலாக உள்ளது. இது இந்தியா ஈழத்தமிழருக்கு எத்தகைய தீங்கும் இழைக்கவில்லை என்பதல்ல புரிதல். மாறாக ஈழத்தமிழர்கள் தமது இருப்புக்கான இறைமைக்கான வாய்ப்புக்களை உருவாக்க உழைக்க வேண்டும். ஒத்துழைப்பும் நட்புறவும் இன்மையினால் பல தேசிய இனங்கள் அழிவடைந்துள்ளன.
தென் இலங்கை ஆட்சியாளர்களை பொறுத்தவரையில் இந்தியாவை அரவணைத்து செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவினால் ஏற்படுத்தப்படுகிறது. அதனை அவர்களது ஏற்றதன் மூலம் அரசியல் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உத்தரவாதத்தை கொண்டிருக்கின்றனர். நிர்ப்பந்தங்களை கடந்து அதனை கையாளுகின்ற விதத்தில் ஒத்துழைப்பையும் நட்புறவையும் பலப்படுத்தி வருகின்றனர். சமகாலத்தில் ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பி.இனர் ஆரம்பகால கொள்கையில் ஒன்றாக இந்திய எதிர்ப்பு வாதம் அமைந்திருந்தது. அதனை தற்போது கைவிட்டு இந்தியாவுடன் ஒத்துழைப்பதன் மூலமே ஆட்சியையும் அதிகாரத்தையும் பெற்றது மட்டுமல்ல அதனைத் தக்கவைத்துக் கொள்வதிலும் அதீத ஈடுபாடு கொண்டிருக்கின்றது. அது மட்டுமின்றி இந்தியாவுடன் முழுமையான ஒத்துழைப்பை சாத்தியப்படுத்துவதன் ஊடாகவே ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்ற திட்டத்தை தென்னிலங்கை ஆட்சியாளர்கள் கொண்டிருந்தனர். காரணம் ஈழத்தமிழர்களின் எழுச்சிக்கு பின்னால் இந்தியாவே காணப்படுகிறது என்ற தெளிவான முடிவோடு அத்தகைய உத்தி வகுக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டு புலமைத்தளத்தில் உரையாடப்பட்டு அரசின் கொள்கையாக அமுலாக்கம் செய்து வருகிறது. ஜே.வி.பி. அரசாங்கத்தின் வெளியுறவு என்பது முன்னைய ஆட்சியாளர் காலப்பகுதிகள் வரையப்பட்ட அல்லது திட்டமிடப்பட்ட கொள்கை வகுப்பின் நீட்ச்சியாகவே காணப்படுகிறது. மகாநாமரின் மகாவம்சத்திலிருந்து செல்ரன் கொடிகார வரையானவர்களால் வகுத்த வெளியுறவுக் கொள்கையின் பிரகாரமே இலங்கையின் வெளியுறவு காணப்படுகிறது. அதன் பின்வந்த ஆட்சியாளர்களும் அத்தகைய அணுகுமுறை பின்பற்றினர். அதனை ஜே.வி.பி. சிறப்பாக மேற்கொள்கிறது.
ஆனால் ஈழத்தமிழர்கள் இந்தியாவையும் பகைத்து தமிழக உறவையும் கைவிட்டு செயல்படும் போக்கானது அவர்களின் அடிப்படை கொள்கைகள் அனைத்தையும் இழந்து போவதற்கான நியமமாக இருக்கின்றது. இதற்கான அடிப்படையை கண்டறிவதும் அதிலிருந்து ஆரோக்கியமான நட்புறவை தமிழகம் ஊடாக இந்தியாவோடு வைத்துக் கொள்வதும் ஈழத்தமிழர்களின் அரசியலின் எதிர்காலத்தை கட்டமைக்க கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. இந்திய எதிர்ப்பு அரசியலின் அழிவுகளையும் சிதைவுகளையும் 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் நிதர்சனமான பதிவுகளைத் தந்திருக்கிறது அதிலிருந்து மீள் எழுவதற்கான உத்திகளை ஈழத்தமிழர்களின் அரசியல்வாதிகளும் அவற்றோடு சேர்ந்து பயணிக்கின்ற மக்களும் புரிந்து கொள்வது அவசியமானது.
எனவே இலங்கைத்தீவின் அரசியலில் மட்டுமல்ல இந்தியாவின் அண்டை நாடுகள் உடனான உறவின் முன்னுரிமையின் கீழ் இந்தியா தேசிய இனங்களை கையாளுவதை விடுத்து அரசுகளை கையாளுகின்ற மற்றும் அரசாங்கங்களை கையாளுகின்ற செய்முறைக்குள் வெளியுறவுப் பாரம்பரியத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே ஒத்துழைப்பும் நட்புறவும் பரஸ்பரம் செழிப்பான வளர்ச்சியையும் நோக்கி அண்டை நாடுகளோடு உறவு வைத்துக் கொள்ளுகின்ற நோக்கினை இந்தியா தனது வெளியுறவில் பின்பற்றி வருகிறது. இந்தியா மீதான மையவாத அணுகுமுறை என்பது பிராந்திய அரசுகளின் வளர்ச்சிக்கும் வாய்ப்புக்கும் உத்தரவாதம் வழங்குவதாக விளங்குகிறது. இது இந்திய வெளியுறவில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாறுதலாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
