ஓர் அரசின் உயிர் வாழ்வு அந்தநாட்டின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்ததாக மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தின் விருத்தி பொருளாதார வளங்களை கைப்பற்றுவதற்கான போட்டி விதி என்பன ஒன்று சேர்ந்து நாடுகளை போட்டியாளர்களாக மாற்றியுயுள்ளது. தீவுகளாக இருக்கும் அரசுகளும் பின்தங்கிய சமூக வாழ்க்கையைக் கொண்டிருக்கும் தேசிய அரசுகளும் இப்போது தனித்து இயங்க முடியாத உலக ஒழுங்குக்குள் அகப்பட்டுள்ளன. இன்னோர் வகையில் கூறுவோமாயின் இன, நிற,மத வேறுபாடுகளைக் கடந்து ஒவ்வோர் அரசும், இன்னோர் அரசில் தங்கியிருக்கின்ற நியதி தவிர்க்க முடியாததாகிவிட்டது. இவ்வகைத் தங்கியிருப்பு நிபந்தனையுடனான நியமமான விதியை தருவித்துள்ளது. இவ்விதியின் இயங்குவிசை நேர்க்கணியத்தில்தான் செயற்பட வேண்டும் என்பதில்லை. மாறாக அரசுகளிற்கிடையே எதிர்க்கணியத்தில் செயற்படும்போது வெளித்தோன்றும் விளைவுகளைக் கொண்டு அதன் வெளியுறவுக் கொள்கையை அளவிட வேண்டியுள்ளது. சமகால உலக ஒழுங்கில் நாடுகளின் வெளியுறவானது வளங்களை நோக்கி உறவுகளை சரிசெய்வதும் மாற்றுக் கொள்கைக்குரிய நியமங்களை உருவாக்குவதும் விஸ்தரிப்பதும் வெளிநாட்டுக் கொள்கையாகிவிட்டது.
வெளிநாட்டுக் கொள்கையை வரையறை செய்தல் என்பது கடினமான இலக்காகத் தெரியவில்லை. காரணம் காலத்திற்கு காலம் தேசிய அரசுகளுக்கிடையே நிகழும் அரசியல் பொருளாதார இராணுவ மற்றும் வர்த்தக உறவானது குறித்த நாடுகளுக்குள்ளும் அவை சார்ந்துள்ள அமைப்புகளுக்கிடையிலும் மேற்கொள்ளப்படும் பரஸ்பர பரிமாற்றம் சார்ந்த விடயமாகிவிட்டது. இதனையே அனைத்து அரசுகளும் தேசிய அரசுகளும் பிராந்திய அரசுகளும் வல்லரசுகளும் எதிர் கொண்டு வருகின்றன. வெளிநாட்டுக் கொள்கை பற்றி அரசியல் அறிஞரான கரோல் நிக்கொல்சன் குறிப்பிடும்போது தந்திரமானதும், பிற நாட்டுடன் இணக்கப்பாடு உடையதுமான அரசியல், பொருளாதார, வர்த்தக, கலாசாரத் தொடர்பின் முழுமையான வெளிப்பாடே வெளிநாட்டுக் கொள்கை எனக் குறிப்பிட்டார். தேசிய அரசுகள் என்ற அமைப்பினுள் அவ்வரசின் கொள்கைத் தீர்மானங்களை எடுப்பதும் நடைமுறைப்படுத்துவதும் அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கையாக அமையும். பொருத்தப்பாடுடைய அரசுகளுடன் வளத்தை பகிரக்கூடிய அரசுகளுடன் இசைவான உறவைத் தெரிவு செய்வதும் வெளிநாட்டுக் கொள்கையாகப் பேசப்படுகின்றது. ஜோர்ச் மொடஸ்கி என்பவர் ‘வெளிநாட்டுக்கொள்கையானது ஒர் அரசு உலக சூழலுக்கேற்ப உள்நாட்டு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தவும் அதற்கு செயல்வடிவம் கொடுக்கவும் மேற்கொள்ளப்படும் முறையான நடைமுறை எனக்குறிப்பிட்டார். லிங்டன் என்பவர் ஒர் அரசு எல்லைக்குப்பட்ட பிரதேசத்தின் நலன்களை பாதுகாக்கவும் அதன் இலக்குகளை அடையவும், செயல்படுத்தவும், முயற்சிப்பதைக் குறிப்பதாகும் என்றார். உலகமயவாக்கம் வெளியுறவுக் கொள்கையின் வடிவத்திலும் கட்டமைப்பிலும் அதிக மாற்றங்களை தந்துள்ளதாக வெளியுறவுக் கொள்கை தொடர்பிலான ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக அங்கீகரிக்கப்படாத அரசுகள் உயர் அரசுகள் அரசசார்பற்ற அமைப்புக்கள் என்பனவற்றின் பிரவேசம் அல்லது செல்வாக்கு நாடுகளின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறன. அதிலும் தகவல்வெளி உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கை வரைபில் அரசுகளதும் ஆட்சியாளரதும் கட்டுப்பாட்டில் இல்லாது மீள மீள தாக்கத்தை செலுத்துகிறது. அதாவது அரச கட்டுப்பாட்டில் வடிவமைந்த வெளியுறவுக் கொள்கை தகவல்வெளியினால் உலக பொதுசன அபிப்பிராயத்தினை சம்பந்தப்படுத்தும் ஒன்றாக வெளிநாட்டுக் கொள்கையில் அங்கீகரிக்கப்படாக மாறியுள்ளன. இது அரசுகளின் செல்வாக்கினையும் அவற்றின் பயன்களையும் தொடர்பாடலையும் பிரயோகிக்க வழிவகுத்துள்ளது. இதிலிருந்து விளங்கிக் கொள்ளக் கூடிய அம்சமாக வெளிநாட்டுக்கொள்கை அரசுகளின் இருப்புக்கும் உயிர்வாழ்வுக்கும் அவசியமானதென்றாக விளங்குகிறது.
இலங்கையின் வெளியுறவானது பிரதானமானதாக போட்டி அரசுகளை கையாளும் உத்திகளை அதிகம் கொண்ட கொள்கையை அதிகம் பிரதிபலிக்கிறது. பொதுவாகவே அரவணைத்தல், விட்டுக் கொடுத்தல், இணைங்கிப் போதல் எனும் நிலைக்குள்ளேயே காணப்படுகிறது. குறிப்பாக இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற மூன்று சக்திகளையும் சரிவர கையாளும் திறனைக் கொண்ட போக்கினை வெளியுறநவில் பின்பற்றி வருகிறது.
இலங்கை ஆட்சியாளர்களை பொறுத்தவரையில் இந்தியாவை அரவணைத்து செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவினால் ஏற்படுத்தப்படுகிறது. அதனை அவர்களது ஏற்றதன் மூலம் அரசியல் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உத்தரவாதத்தை கொண்டிருக்கின்றனர். நிர்ப்பந்தங்களை கடந்து அதனை கையாளுகின்ற விதத்தில் ஒத்துழைப்பையும் நட்புறவையும் பலப்படுத்தி வருகின்றனர். சமகாலத்தில் ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பி.இனர் ஆரம்பகால கொள்கையில் ஒன்றாக இந்திய எதிர்ப்பு வாதம் அமைந்திருந்த கொள்ளையை கைவிட்டு இந்தியாவுடன் ஒத்துழைப்பதன் மூலமே ஆட்சியையும் அதிகாரத்தையும் பெற்றது மட்டுமல்ல அதனைத் தக்கவைத்துக் கொள்வதிலும் அதீத ஈடுபாடு கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. அது மட்டுமின்றி இந்தியாவுடன் முழுமையான ஒத்துழைப்பை சாத்தியப்படுத்துவதன் ஊடாகவே இந்தியாவுக்கும் ஈழத்தமிழருக்குமான உறவை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். காரணம் இலங்கைத் தீவில் ஒரு ஆயுதப் போராட்டம் உருவாவதற்கு பின்னால் இந்தியாவே காணப்பட்டது என்ற தெளிவான முடிவோடு முறியடித்துள்ளனர். ஜே.வி.பி. அரசாங்கத்தின் வெளியுறவும் முன்னைய ஆட்சியாளர் காலப்பகுதிகள் வரையப்பட்ட அல்லது திட்டமிடப்பட்ட கொள்கை வகுப்பின் நீட்ச்சியாகவே காணப்படுகிறது. மகாநாமரின் மகாவம்சத்திலிருந்து செல்ரன் கொடிகார வரையானவர்களால் வகுத்த வெளியுறவுக் கொள்கையின் பிரகாரமே இலங்கையின் வெளியுறவு காணப்படுகிறது. அதன் பின்வந்த ஆட்சியாளர்களும் அத்தகைய அணுகுமுறை பின்பற்றினர். அதனை ஜே.வி.பி. சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின் வெளியுறவில் ஏற்பட்டிருக்கும் புதிய அணுகுமுறைகளை ஜே.வி.பி. அரசாங்கம் மிகத்p தெளிவாக புரிந்து வைத்துள்ளது. இந்தியா ஆரம்பகாலத்தில் இருந்து தென்னாசியப் பிராந்தியத்தில் வலுவான அரசியல் பொருளாதாரம் இராணுவ மற்றும் வளங்கள் சார்ந்தும் நிலப்பரப்பு சார்ந்தும் பாரிய அரசாக காணப்பட்டது. அதன் மக்கள் தொகை பொருளாதார ரீதியான சந்தை கட்டமைப்புக்கு வலிமையான பலத்தை கொடுத்துவருகிறது. இதனால் இந்தியாவின் அரசியல் பொறுத்து ஆதிக்க மனோநிலை ஒன்றை அது எப்போதும் பிராந்திய நாடுகள் மத்தியில் ஏற்படுத்திவருவதாக விவாதிக்கப்படுகிறது. அதனையே (Big Brother) பெரிய சகோதரர் கொள்கையென உரையாடப்பட்டது. ஆரம்ப காலத்தில் அதாவது ஜவகர்லால் நேரு- இந்திராகாந்தி காலம் அத்தகைய ஆதிக்கத்தின் வடிவமாகவே வெளியுறவுக் கொள்கை காணப்பட்டது. 1972 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து வங்களாதேஷ் பிரிவினை சாத்தியமானதோடு அத்தகைய வெளியுறவுக் கொள்கையின் போக்கு மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்திராகாந்தியின் வெளியுறவினால் ஏற்பட்ட பாரிய மாற்றம் ஒன்றை இலங்கை தீவும் அக்காலப் பகுதியில் அனுபவித்திருந்தது. இந்தியாவின் அண்டை நாடுகள் மீது காணப்படும் உள்நாட்டு விவகாரங்களில் குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைகள் மீதான கவனத்தை குவித்து அந்த நாடுகளின் அரசியலையும் அரசியலின் கொள்கைகளையும் கையாள தலைப்பட்டது. அதன் விளைவாகவே வங்காளதேஷின் விடுதலையும், ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டமும் பிராந்திய ரீதியான அரசியலில் முனைப்பு பெற்றது. அதன் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சி நிலையம் ஐ.தே.குஜரால் பிரதமராக இருந்த காலப்பகுதி நட்புறவு ஒத்துழைப்பு உரையாடல் போன்ற இராஜதந்திர செய்முறைகளுக்கூடாக அயல் நாடுகளுக்கு இடையிலான நட்புறவை இந்தியா உருவாக்கியது. இதனை குஜரால் கோட்பாடு (Gujral Doctrine) என அழைத்தனர். இதன் வளர்ச்சி கட்டமாகவே இந்திய தேசத்தின் வெளியிறவுக் கொள்கை 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை (Neighborhoods First Policy) என்ற கொள்கையை பிரகடனப்படுத்திக் கொண்டது. அதே காலப்பகுதி தென்னாசிய பிராந்திய நாடுகள் மீது அமெரிக்காவில் செல்வாக்கை விட சீனாவின் செல்வாக்கு அதீதமாக வளர தொடங்கியது. சீனாவின் உபாயம் வலுவான ஒத்துழைப்பை தென்னாசிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தியதோடு முத்துமாலை திட்டம் (String of Pearls) மற்றும் பாதை மற்றும் பட்டி முன்முயற்சியை (BRI) முதன்மைப்படுத்தி இலங்கை உட்பட தென்னாசிய நாடுகளை அரவணைக்க ஆரம்பித்தது. அதாவது சீனா தனது பொருளாதார ஒத்துழைப்பு ஊடாக இந்தியாவை சூழ இருக்கிற தென்னாசிய நாடுகளின் உட்கட்டமைப்பு முறையை வலுப்படுத்தும் விதத்தில் துறைமுகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்ற உத்தியை முன்னிலைப்படுத்தியது. இது ஒரு வகையில் இந்தியாவை சுற்றி வளைப்பதாகவே அமைந்திருந்தது. இதன் விளைவுகள் இந்தியாவின் இருப்பின் மீதும் ஒருமைப்பாட்டின் மீதும் இறையாண்மை மீதும் அதிக குழப்பங்களை தோற்றுவிக்க கூடியதாக அமைந்தது. இதன்வாயிலாக ஊடுருவல்களும் தாக்குதல்களும் நிகழ்ந்து வந்தன. இதுவே இந்தியாவின் உள்நாட்டில் உள்ள மிகப் பிரதான பிரச்சினையாக மாறியது. அத்தகைய பிரச்சனைக்குரிய தீர்வை சீனாவின் அதே பாணியில் (Win-Win Strategic) சில தனித்துவங்களோடு இந்தியா அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை பிரகடனப்படுத்தியது. அதனுடைய வளர்ச்சி போக்கும் வலுவான நட்புறவை பிராந்திய நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தியதோடு கிழக்கு பார்வை (Look East Policy) மேற்குடனான (Link West Policy) நட்புறவு என ஆசியாவுக்குள்ளேயே அண்டை நாடுகளை அரவணைத்துக் கொள்வதன் மூலம் தனது வெளியுறவில் புதிய அத்தியாயங்களை வரைந்து கொண்டது. இதனுடைய உள்ளார்ந்த வலுவில் இலங்கைத் தீவு தென்னாசியாவுக்குள்ளும் அயல்நாடுகளுக்குள்ளும் மூலோபாய ரீதியிலும், தந்திரோபாய ரீதியிலும் தனித்துவமான அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளது.
மறுபக்கத்தில் இந்தோ-பசுபிக் உபாயம் அமெரிக்காவின் ஒத்துழைப்போடு இலங்கை நகருகின்றது. 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் (14) தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் (ஜே.வி.பி) அமெரிக்காவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினை (U.S.-Sri Lanka State Partnership Program -SPP) கைச்சாத்திட்டுள்ளது. அத்தகைய உடன்பாடு இராணுவ ரீதியில் இரு நாட்டுக்குமான ஒத்துழைப்பினை பலப்படுத்தக் கூடியது. அதன் அடிப்படையிலேயே இலங்கையின் அமெரிக்க சார் வெளியுறவை அளவீடு செய்வது அவசியமானது. சீனாவின் இலங்கை தீவுக்கான போட்டியும் இந்தியாவின் அரவணைப்பும் அமெரிக்காவுடனான உடன்பாடுகளும் இலங்கையின் வெளியுறவின் உள்ளடக்கமாகும். எனவே அமெரிக்காவின் நகர்வு என்பது அத்தகைய போட்டியாளர்களை அல்லது அமெரிக்காவுக்கு சமமான ஏகாதிபத்திய சக்திகளை எதிர் கொள்வதாக இருந்தாலும் இலங்கை அத்தரப்புக்களை அரவணைத்துக் கொள்ளும் அணுகுமுறையை கைவிடாது உள்ளது.
எனவே இலங்கைத்தீவின் அரசியலில் வெளியுறவானது வல்லரசுகளை கையாளும் கலையை நன்கு தனதாக்கியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகள் மட்டுமல்ல பெரு வல்லரசுகளையும் எதிர் கொள்ளும் திறன் கடந்த அரசாங்கங்களைப் போன்று ஜே.வி.பி. அரசாங்கத்திற்கும் உரியதாகியுள்ளது. இந்தியா அமெரிக்கா சீனா பக்கம் என்று செயல்படாது மூன்று தரப்புக்களையும் கையாளும் வலிமையை அரசாங்கம் கொண்டுள்ளன.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினகரன்)
