இந்தியாவின் பிராந்திய அதிகாரம் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது இலங்கைத் தமிழரது அரசியலால் ஏற்பட்ட விளைவாக கருத முடியுமா என்ற கேள்வி தவிர்க்க முடியாததது. காரணம் இலங்கை இனப்பிரச்சினையில் தலையிட்டதன் மூலமே அதிக பாதிப்பினை இந்தியா எதிர்கொண்டதாக தெரியவருகிறது. குறிப்பாக வங்களாதேஷ் பிரிவினையைத் தொடர்ந்து இந்திய பிராந்திய வல்லரசு எனும் அந்தஸ்த்தை முடிவின்றி பெற்றுக் கொண்டது. பாகிஸ்தானுடன் 1947, 1952, 1965 ஆகிய ஆண்டுகளில் போர்களை எதிர்கொண்டாலும் 1971 ஆண்டுப்போரே அதன் முழுமையான பலத்தையும் போரின் தீவிரத்தையும் பிராந்திய நாடுகள் மட்டுமல்ல சர்வதேச நாடுகளும் வல்லரசுகளும் கண்டுகொண்டன. இந்திரா காந்தியின் தலைமைத்துவம் அதற்கொரு வலுவைக் கொடுத்திருந்தது. இக்கட்டுரையும் இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாத் தலையீடும் அது எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளையும் தேடுவதாக உள்ளது.
வங்காளதேஷ் பிரிவினைக்குப் பின்னர் பிராந்திய ரீதியில் இந்தியா ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் சார்பாக செயல்படும் நாடாக உலகளாவிய ரீதியில் கருதப்பட்டது. ஏறக்குறைய பாண்டுங் மகாநாடும் அணிசேராமைக் கொள்கையும் இந்தியாவின் சோவியத் யூனியன் சார்பு வெளியுறவும் அதனை மேலும் பலப்படுத்தியது. பனிப்போர்க் காலம் முழுவதும் தேசிய இனங்கள் சார்பான ஒர் அரசியல் வளர்ச்சியடைந்திருந்தது. அதில் தென்னாசிய நாடுகளின் தேசிய இனப்பிரச்சினைகளுக்கு இந்தியா தீர்க்கமான முடிபுகளை மேற்கொள்ளும் என்ற செய்தியை மட்டுமல்ல பாலஸ்தீன விடுதலைக்கு தேவையான ஆதரவை வெளிப்படுத்தியதன் மூலம் உலகளாவிய முக்கியத்துவத்தை இந்தியா ஏற்படுத்தியிருந்தது. இதனால் இலங்கையில் வாழ்ந்த ஈழத்தமிழர்கள் இந்தியா மீது அதிக ஈடுபாடும் பற்றுதியும் கொண்டவர்களாக விளங்கினர். இலங்கைத் தமிழரது மிதவாத அரசியல் தலமைகள் இந்திய ஆட்சியாளர் மீதான நெருக்கமும் புவியல் ரீதியில் ஈழத்தமிழருக்கும் இந்தியத் தமிழருக்கும் நெருக்கமான உறவு காணப்பட்டது. புவியல் ரீதியில் 32 கடல்மைல் தூரத்தால் பிரிக்கப்பமட்ட தமிழகத்துடன் ஈழத்தமிழர் கொண்டிருந்த நெருக்கம் இந்தியா மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
வங்காளதேஷ் மாதிரியிலான பிரிவினைக்கான வாய்ப்புள்ளதாக இலங்கைத் தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழக தீவிர அரசியல் தலைமைகளும் கருதினது மட்டுமன்றி அதன்மீது அதிக நம்பிக்கையை கட்டி வளர்த்தனர். இதனால் ஏற்பட்ட விளைவாகவே மிதவாதம் சாத்தியமற்றதென்ற நிலை ஏற்பட இந்தியாவே இலங்கைத் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுததளபாடங்களை வழங்கி ஆயுதப் பயிற்சியையும் கொடுத்தது. இதனால் இலங்கைத் தமிழர் மத்தியில் இந்தியா பற்றி மேலும் நம்பிக்கை வலுவடைந்தது. அப்போதிருந்த புவிசார் அரசியலில் இந்தியா வலுமிக்க சக்தியாக அமைந்ததுடன் பூகோள ரீதியில் சோவியத் யூனியன் சார்பு நிலை எடுத்ததனால் அமெரிக்காவுக்கு எதிரான போக்கினை இந்தியா கொண்டிருந்தது. அணிசேராமை எனக்கூறிக் கொண்டாலும் இந்திரா காந்தி தலைமையில் இந்தியா சோவியத் யூனியன் சார்பான கொள்கையையே கொண்டிருந்தது. இதனாலேயே இந்திரா காந்தியின் மரணம் பொறுத்து அதிக சந்தேகம் நிலவுகிறது. ஜெயின் கமிஷன் இந்திரா காந்தி படுகொலை செய்யப்டபட்டது பற்றி கொடுத்த அறிக்கையில் இந்திராவின் படுகொலைக்கு உலக வல்லரசு நாடொன்றுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்திருந்தது. அத்தகைய நாடு எதுவொன வெளிப்படையாக தெரிவிக்காது விட்டாலும் படுகொலையின் முறைமையை வைத்துக் கொண்டு அளவிடும் போது அது எத்தாகை நாடு என்பது இலகுவாக கண்டு கொள்ளலாம். அப்படியாயின் இந்திரா காந்தியின் படுகொலைக்கு இலங்கை இனப்பிரச்சினை ஏதோ ஒருவகையில் செல்வாக்குச் செலுத்தியிருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அடுத்து இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட முரண்பாடு ரஜீவ்காந்தியின் படுகொலைக்கு காரணமாக அமைந்திருந்தாது. இதுவும் ஏதோ ஒருவகையில் இலங்கை இனப்பிரச்சினையினால் ஏற்பட்ட முரண்பாடாக கருதுவோமாயின் இலங்கை தமிழரது இனப்பிரச்சினையே இந்தியா ராஜீவ் காந்தியை இழக்க காரணமாகியது. எனவே இருவரது படுகொலைகளும் பிராந்திய ரீதியில் இந்தியாவின் வல்லரசுப் பலத்தை அழித்ததுடன் படிப்படியாக தென்னாசியா முழுவதும் அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கம் செய்ய வழிவகுத்தது. ஆரம்பத்தில் புதிய உலக ஒழுங்கு உருவான போது இந்தியா அடிப்படையில் அமெரிக்க சார்புக்குள் நுழைந்தது. தேசிய இனப்பிரச்சினையில் சோவியத்தின் வீழ்ச்சியுடன் இந்தியாவும் கரிசனையின்றி கைவிட்டது. பிராந்திய நாடுகள் மீது கடைப்பிடித்துவந்த கொள்கைகளை கைவிட்டு இந்தியா அமெரிக்க சார்பு கொள்கைக்குள் நகர்ந்தது. அமெரிக்க நலனுக்கு இசையும் கொள்கை வகுப்பினை திட்டமிட்டு நகர்த்தியது. அமெரிக்க நலனுக்கு செயல்படும் இந்தியாவாக மாறியது. இதனாலேயே தென்னாசியாவை இந்தியா இழக்க வேண்டிய நிலைக்குள்ளானது.
இந்திய அரசியல் குடும்ப அரசியலாக அமைந்தாலும் ஓரளவு பலமான இந்தியாவாக அப்போது காணப்பட்டது.உயர்வர்க்க அரசியலாக அமைந்திஜருந்த போதும் இந்தியா உறுதியான அரசியலாக அமைந்திருந்தது. இந்திராகாந்தியின் படுகொலை அதனை கணிசமான அளவு பலவீனப்படுத்தியது போல் ரஜீவ்காந்தியின் படுகொலை முழுமையாக பலவீனப்படுத்தியது. நரசிம்மராவ் வாஜ்பாய் போன்றவர்கள் ஓரளவு பலமான அரசியலை உருவாக்க முயன்றாலும் நடைமுறையில் அதிக சவால் மிக்க சூழலையே ஏற்படுத்தியிருந்தது. அவர்களால் இந்திராகாந்தி போல் சோபிக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் அமெரிக்க நலனுக்குள் இந்தியாவை கொண்டு செல்லவிடாது தடுக்க முடியாத நிலையை உலகம் கொண்டிருந்தது. இந்தியாவும் அணிசேராமை எனக்கூறிக் கொண்டு பலமான உறுதியான கொள்கையினை கட்டிவளர்க்க முடியாது இருந்தது. அது நேரு காந்தி காலத்திலிருந்தே அத்தகைய பலவீனத்துக்குள் இந்தியா செயல்பட்டிருந்தது. அதனால் புதிய உலக ஒழுங்குக்குள் தனித்துவமாக இந்தியா செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.
அதற்கு பிரதான இன்னோர் காரணம் இந்தியாவின் பொருளாதாக் கொள்கையாகும். தங்கியிருக்கும் பொருளாதாரக் கொள்கையால் கட்டப்பட்ட இந்தியா தனித்துவமான பொருளாதாக் கொள்கையை கட்டியெழுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. நரசிம்ராவ் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையில் மறுசீரமைப்பினை ஏற்படுதினாலும் அதில் அமெரிக்காவினதும் மேற்கினதும் நலன் சார்ந்திருந்தது. நிதி முதலீட்டையும் தொழில்நுட்ப முதலீட்டடையுடம் மேற்கும் அமெரிக்காவும் தற்போதும் தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளன. அதனை முறியடித்த ஒரே ஆசிய நாடு சீனா மட்டுமேயாகும். ஏனைய நாடுகள் மேற்குக்கு கட்டுப்பட்டே செயல்படும் நிலை காணப்படுகிறது. இதில் இந்தியா முதன்மையான தேசமாக உள்ளது.
ஒருகாலப்பகுதியில் அமெரிக்காவின் தலையீடு இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிரானதாகம் அமைந்தது போல் தற்போது சீனா இந்தியாவுக்கு எதிரானதாக இலங்கைக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது. இரண்டுமே இந்தியாவுக்கு எதிரானது. இரண்டுமே இலங்கைக்கு ஆதரவானது. இரண்டுமே இலங்கை தமிழரது இனப்பிரச்சினை சார்ந்து மேற்கொள்ளப்படுவதாகும். காரணம் இலங்கை இந்தியாவுக்கு எதிரானதாக கொள்கை வகுக்கும் போது அது இலங்கை தமிழருக்கு இந்தியா ஆதரவான நாடு என்றடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது. அதற்காகவே இலங்கை ஒரு காலப்பகுதியில் அமெரிக்காவுடனும் தற்போது சீனாவுடனும் கைகோர்த்துள்ளது.
எனவே தான் தென்னாசியாப் பிராந்தியம் வேறு வல்லரசுகளிடம் கைமாறுவதற்கும் இந்தியா தனது வலுவை இழந்து போவதற்கும் இலங்கை இனப்பிரச்சினை முக்கிய காரணமாகும். இரு ஆளுமைமிக்க அரசியல் தலைமைகளது படுகொலையும் இனப்பிரச்சினையால் நிகழ்ந்தாலும் அதன் விளைவுகள் மேற்குக்கும் சீனாவுக்கும் இலாபகரமானதே. ஏனைய தலைமைகளை இலகுவாக கையாளலாம் என்பதனாலும் சந்தையாலும் வர்த்தக பரிமாற்றத்தாலும் இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும் என மேற்கும் சீனாவும் கருதுவதனாலேயே இந்திய ஐக்கியம் நிலவுகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
