இலங்கையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடைய ஆளுந்தரப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து ஒரு திரட்சியான நகர்வை கடந்த வாரம் (17.07.2021) முன்னெடுத்திருந்தது. சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் அத்தகைய சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினை எதிர்ப்பதோடு எரிபொருள் மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக அச்சந்திப்பில் உரையாடப்பட்டது. அச்சந்திப்பில் தமிழர் தரப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்த கருத்த கவனத்திற்குரியதாகும். இக்கட்டுரையும் அத்தகைய பேச்சின் உள்ளடக்கத்தையும் அது பின்னர் அடைந்த நிலையையும் அடிப்படையாக கொண்டு தமிழருக்கான அரசியல் வெளி எவ்வாறு நெருக்கடி அடைகின்றது என்பதை தேடுவதாக உள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் உரையாற்றும் போது இந்த நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் நீண்ட பிரச்சினையாக தமிழரின் தேசிய இனப்பிரச்சினை காணப்படுகிறது. இப்பிரச்சினையை சரிசெய்தல் அவசியமாகிறது. தமிழர் தேசிய இனப்பிரச்சினையே இந்நாட்டின் அடிப்படை பிரச்சினையாகும். இத்தகைய தமிழர் இனப்பிரச்சினைக்கு இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அதற்கு அவசியமான முக்கியத்தவத்தை வழங்கி வெளிப்படையான தீர்வொன்றை முன்வைக்க தவறுவோமாயின் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்துடன் தொடர்ந்து எம்மால் பயணிக்க முடியாது என கூட்டமைப்பின் பேச்சாளர் தெளிவான செய்தியை வெளிப்படுத்தினார். இத்தகைய கருத்து தமிழருடைய இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதை காட்டுகிறது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள் என்பதை அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளதோடு இராணுவ தீர்வை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இத்தகைய உரையாடலுக்கு பின்னால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் கலந்து கொண்டதோடு வாக்களிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். மேலே குறிப்பிட்ட கருத்தக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட விதத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செயற்பட்டதோடு கடந்த காலத்தை போன்று எதிர்காலத்திலும் செயற்படுமென்பதை இத்தகைய நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு தமிழர்களின் அரசியலில் தமிழ்த்தரப்பாக இருந்து செயற்படும் அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும்; கடந்த காலத்தில் மாத்திரமின்றி சமகாலத்திலும் செயற்படும் போக்கொன்றை அவதானிக்க முடிகிறது. சரியான உரையாடல்களை வெளியிடுவதும் பிழையான தீர்மானங்களை எடுத்தலும் என்ற அடிப்படையிலேயே தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகளால் கையாளப்படுகிறது. இதன் பின்னால் உள்ள அரசியல் காரணங்கள் என்பது விருப்பு வெறுப்புக்களை கடந்து கருத்துக்களாலும் எண்ணங்களாலும் தூரநோக்கு சிந்தனைகளாலும் கட்டமைக்கப்பட வேண்டியதொன்றாகும். எனவே, தமிழரசியல் வெளியில் கடந்த இரு தசாப்தகாலமாக எண்ணங்களுக்கும் முடிவுகளுக்குமிடையே பெரும் இடைவெளி ஒன்றை காண முடிகிறது. அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மட்டுமன்றி அனைத்து தமிழ் தரப்புக்களும் சரியான எண்ணங்களையும் தவறான முடிவுகளையும் செயற்படுத்தகின்றனர். அதனை விளைவுகளை தமிழ் மக்கள் எதிர்கொள்வதுடன் அதனை விரிவாக நோக்குதல் அவசியமாகும்.
முதலாவது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் முன் வைத்த எண்ணம் சரியானது. இலங்கை தீவில் 1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் போது திறந்த பொருளாதார கொள்கை அடிப்படை விடயமாகவும், இலங்கையின் சுபீட்சத்திறகான தீர்வாகவும் பார்க்கப்பட்டது. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இலங்கை தீவை குட்டி சிங்கப்பூராக மாற்றுவேனென சூழுரைத்தார். இறுதியில் அவரது ஆட்சி முடிவில் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் குண்டு தாக்குதல் ஏவுகணை மற்றும் விமானத்தாக்குதல்களால் குட்டிச்சுவராகவே காட்சியளித்தது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிடுவது போல் இனப்பிரச்சினையே இலங்கையின் அடிப்படை பிரச்சினை. அது தீர்க்கப்படுமாயின் இலங்கையின் சுபீட்சம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகும். அது அரசியல்ரீதியாக மட்டுமன்றி சமூக பொருளாதார பண்பாட்டு ரீதியில் துலங்கக்ககூடியதாக அமையும்.
இரண்டாவது, சமகாலத்திலும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக பொருளாதார சுபீட்சம் முனைப்பான அம்சமாக காணப்படுகிறது. சீன, அமெரிக்க, இந்திய கம்பனிகளும் உற்பத்தி முதலீட்டாளர்களும் பொருளாதார ரீதியிலான நிதி மற்றும் தொழில்நுட்ப முதலீடுகளை வடக்கு கிழக்கு நோக்கி அதிகரித்து வருகின்றனர். ஏனைய நாடுகளை விட சீனா வடக்கு கிழக்கு நோக்கி பாரிய முதலீட்டு திட்டங்களை முன்னெடுத்த வருகிறது. இதனால் வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரத்தை வளம்படுத்துவதன் மூலம் அவர்களது தேசிய இனப்பிரச்சினையை தீர்த்து விடலாமென இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். அத்தகைய தீர்வானது நிலமற்ற நிலையையே தொடர்ச்சியான வாழ்விடமற்ற சூழலையும் மொழியையும் பண்பாட்டையும் நிராகரிக்கும் மனோநிலையையும் கட்டிவளர்க்க உதவுவதாக கருத முடியும். இங்கும் எண்ணங்கள் சரியாக இருக்கின்ற போதும் முடிவுகள் தவறாதனதாகவே அமைகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினை தோன்றிய காலத்திலிருந்து இதனை பொருளாதாரமாக தீர்த்துவிட முயன்ற பல ஆட்சியாளர்களை கடந்த காலத்தில் அவதானிக்க முடிந்தது. அதன் நீட்சியே தற்போதைய ஆட்சியிலும் காணப்படுகிறது.இனப்பிரச்சினைகட்கான தீர்வு பொருளாதாரத்தை இயல்பாகவே கட்டிவளர்க்கும்.
மூன்றாவது, தமிழ்த்தேசிய அரசியலில் நல்லாட்சி அரசாங்க காலப்பகுதி மேற்குறித்த எண்ணங்களுக்கும் முடிவுகளுக்குமிடையிலான இடைவெளியினாலேயே தோற்கடிக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தோடு கூட்டிணைந்த பயணிக்கின்ற போது கிடைத்த அனைத்து வாய்ப்புக்களையும் கூட்டமைப்பு நம்பிக்கையின் அடிப்படையில் இழந்ததோடு இதயபூர்வமான ஒப்பந்தங்களால் ஏமாற்றப்பட்டதையே காண முடிந்தது. அதுமட்டுமன்றி எதிர்க்கட்சி என்ற தலைமைத்துவம் கிடைக்கப்பெற்ற போதும் அதனை சரியான முறையில் பயன்படுத்த தவறியமையின் விளைவுகளே ஏமாற்றுத்தனத்துக்கான அடிப்படைகளாகும். தென்னிலங்கை பற்றியும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் பற்றியும் நீண்ட அனுபவங்களை கற்றிருக்கும் தமிழ்த்தரப்பு அவையனைத்தையும் கைவிட்டு விட்டு இதயபூர்வமான உடன்படிக்கை மீது கொண்ட நம்பிக்கை நிரந்தரமான அரசியல் பலவீனமாக மாறியது.தென் இலங்கையுடன் சேர்ந்து பயணிப்பது ஒன்றும் தவறான விடயம் கிடையாது ஆனால் அடிமையாக செல்லாது தமிழரது அரசியல் அபிலாசையை கைவிடாது செயல்கபடுவதே அவசியமானது. இலங்கையின் சுபீட்சம் தமிழ் அரசியல் தலைமைகளது முடிபுகளிலும் தங்கியுள்ளது.
நான்காவது, தமிழ்த்தேசிய அரசியல் தரப்பில் பயணிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்திருக்கும் ஏதாவொரு தீர்மானத்தை முன்னெடுத்த வெற்றி கொண்டதாக வரலாற்றில் இடம்பெறவில்லை. மக்களை ஏமாற்றவும், அவர்கள் மீது அவர்களது உணர்வுகள் மீது செல்வாக்கு செலுத்தவும் நம்பிக்கையை ஏற்படுத்தவும் தொடர்ச்சியான பிரச்சாரங்களையும் பிரகடனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இதுவே தமிழர் அரசியல் தோல்விக்கான பிரதான காரணமாகும். தீர்வின்றி பிரச்சினை நீடிப்பதற்கும் இத்தகைய செய்முறையே மிகப்பிரதான காரணமாகும். சரியான எட்டக் கூடிய தேர்தல் பிரகடனங்களை முன்வைத்து அதற்காக செயல்படுவதை தமிழ் அரசியல் தலைமைகள் மேற்கொள்வார்களேயானால் தீர்வு விரைவில் எட்டுவதுடன் இலங்கை சுபீட்சத்தை அடையும்.
ஐந்தாவது, தமிழ்த்தேசிய அரசியலில் தலைமை தாங்கும் சக்திகளின் எண்ணங்களுக்கும் முடிவுகளுக்குமிடையில் தத்தளிப்பதற்கான காரணம் அவர்கள் மீதான தலையீடுகளாகும். அதிலும் குறிப்பாக தென்னிலங்கை சக்திகள், பிராந்திய சக்திகள், சர்வதேச தரப்பில் தலைமை தாங்கும் சக்திகள், புலம்பெயர் சக்திகள் என பட்டியல் நீள்கிறது. தமிழ்த்தேசிய பிரச்சினையை தமது நலன்களுக்காக பிரயோகிக்கும் சக்திகள் ஒவ்வொன்றும் தமது நலன்களை தமிழ்த்தேசிய தலைலவர்களுடாக நகர்த்த முற்படுகின்றனர். இத்தகைய தலையீடுகளே தமிழ்த்தேசிய அரசியலின் தோல்வியாகிறது. தமிழ்த்தேசிய பரப்புக்குள் இயங்கும் ஒவ்வொரு தலைமைகளும் ஏதொவொரு சக்தியின் முகவர்களாகவே செயற்படுகின்றனர். அத்தகைய முகவர் பணியை புரிந்து கொண்டும் சிலர் புரியாமலும் பிரயோகப்படுத்துகின்றனர். அவ்வாறு செயல்படுவது அரசியலாக இருந்தாலும் அந்ந அந்த நாடுகளது நலனுக்கு அடிபணிகிறார்களே அன்றி தமிழரது அரசியலை முன்னெடுத்து செல்லாத தெரியவில்லை.
எனவேதான், தமிழருடைய இனப்பிரச்சினை அடிப்படையானது என்றும் நீண்டதானது என்றும் இராணுவ தீர்வு பொருத்தமற்றது என்றும் விவாதிக்கும் தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகள் தென்னிலங்கையோடும் பிராந்திய அரசோடும் சர்வதெச அரசோடும் இசைந்த பயணிப்பதில் கவனம் கொள்கின்றனர். அது அவர்களது முன்பின் முரணான முடிவுகளை தருவதோடு ஒரு தேசிய இனத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகின்றது என்பதையே அவர்கள் புரிந்து கொள்ள தவறுகின்றனர். இலங்கை ஆட்சியாளர்கள், பிராந்திய சர்வதேச சக்திகள் மட்டுமன்றி தமிழ்த்தெசிய அரசியல் தலைமைகளும் நீடித்த அடிப்படையான இனப்பிரச்சினைக்கு காரணமாகும். உபாயங்களையோ திட்டமிடல்களையோ கொள்ளாத அரசியல் தலைமைகள் முன்பின் முரணான முடிவுகளை எடுப்பதுவும் பின்னர் அவற்றுக்காக வருந்துவதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. மாறாக தீரவற்ற அரசியல் என்பது நிலையானதொன்றாக மாறுவதற்கான வாய்ப்பையே அதிகம் கொண்டுள்ளது. எனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரின் எண்ணம் சரியாகிற போதிலும் முடிவுகள் தவறாகவே அமைகிறது. இது ஒட்டுமொத்த தமிழ் அரசியல் தலைமைகளின் பலவீனமாய் காணப்படுகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
