April 24, 2026
அரசியல் கட்டுரைகள்

கூட்டமைப்பு – அரசாங்க பேச்சுவார்த்தையும் தமிழ் தரப்பின் இராஜதந்திரமற்ற செயல்பாடும்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கையின் ஜனாதிபதி பேசுவதற்கு அழைத்த ஒருவாரத்திற்கு பின்பு தென் இலங்கையில் ஏற்பட்ட அழுத்தத்தினால் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனாலும் பேச்சுக்களுக்கான திகதியும் நேரமும் பின்னர் தெரிவிக்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 08.06.2021 திகதி ஜனாதிபதி அலுவலகம் வழங்கிய அழைப்பினை ஊடகப் பரப்பில் கசியவிடாது பாதுகாத்ததுடன் எந்தவித உரையாலும் இன்றி தமது விரும்பத்திற்கு ஜனாதிபதியுடன் பேச திட்டமிட்டதாகவும் கடந்த காலத்தைப் போல் கூட்டமைப்பு இரகசிய உடன்பாடுகளையும் தனிப்பட்ட நலன்களை அடையவும் தமிழருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புக்களை மீண்டும் ஒரு தடவை தோற்கடிக்கவும் தயாராகிறது என அதன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் கூட்டமைப்பு கூறுவது போல் புதிய அரசியலமைப்பு பற்றியும், வடக்கு-கிழக்கின் அபிவிருத்தி பற்றி பேசுவதுடன் பொறுப்புக் கூறுதல் பற்றி உரையாடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய கருத்துக்களை விளங்கிக் கொள்ள இக்கட்டுரை முயலுகிறது.

கொரனோ தொற்றின் தீவிரம் எக்ஸ்பிரஸ் கப்பல் சிதைவுகளும் அதன் இரசாயன தாக்கங்களும் அதிகரித்துள்ளமை, எண்ணெய் விலை ஏற்றம், சுகாதார பணியாளரது வேலைநிறுத்தல் போராட்டம், பொருளாதார நெருக்கடி, அரசாங்க ஆதரவுக் கட்சிகளுக்கிடையே முரண்பாடு என பாரிய நெருக்கடியில் தென் இலங்கை அகப்பட்டுள்ள போது ஏன் கூட்டமைப்புடனான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது அனைவரது மத்தியிலும் எழுந்துள்ள கேள்வியாகும். அது மட்டுமன்றி கூட்டமைப்பு கூறுவது போல் புதிய அரசியலமைப்புக்கான எந்த முகாந்திரமும் தென் இலங்கையில் காணப்படவில்லை. அவ்வாறே இலங்கை முழுவதற்குமான நிவாரணம் அளிப்பதிலேயே அரசாங்கம் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் வடக்கு-கிழக்கு அபிவிருத்தி பற்றி ஜனாதிபதியுடன் பேசப் போவதாக கூறுவது சரியானதா? அப்படியாயின் இரு தரப்பிடமும் உள்ள உண்மையான காரணம் எதுவாக இருக்க வாய்ப்புள்ளது.

முதலாவது, அமெரிக்க காங்கிரஸ்ல் தமிழ் மக்கள் தொடர்பில் ஒரு முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. அதனை தடுக்கும் விதத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சரும் அமைச்சகமும் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அதற்கு அமெரிக்கா வெளிப்படையாக பதிலளிக்காத போக்கு ஒன்றினை அவதானிக்க முடிகிறது. அதேநேரம் அமெரிக்கா தடுப்பூசிகளையும் சுகாதார உதவிகளையும் நிதி உதவிகளையும் இலங்கைக்கு வழங்கிவருகிறது. முன்மொழிவை தீர்மானமாக உருவாகவிடாது தடுப்பதற்கு அனைத்து வழிகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதனால் அதிக மாற்றங்கள் ஏற்படாத நிலையில் திடீரென இரகசியமாக கூட்டமைப்பினை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவே தெரிகிறது. இதன் மூலம் உள்நாட்டில் தீர்வுக்கான நகர்வுகளை மேற்கொள்வதாக காட்டிக்கொள்ள அரசாங்கம் முயலுகின்றதாகவே விளங்கிக் கொள்ள முடியும்.

இரண்டாவது, ஜி.எஸ்.பி. வரிச்சலுகை ரத்தாகும் நிலை பாரிய பொருளாதார பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் இதே போன்ற ஒரு நெருக்கடியை 2010 இல் ஆட்சியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலத்திலும் ஏற்பட்டது. அதனால் அரசாங்கம் வரிச்சலுகை இல்லாது போய்விடும் என்பதை விட எதிர்கட்சியினர் அதனை ஒரு பிரச்சாரமாக கொள்ள முயலுவார்கள் என்பதனால் அதற்கு பதிலளிக்க வேண்டிய நெருக்கடிக்குள் உள்ளது. அதாவது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை புதிய வடிவில் கொண்டுவருவதற்கான உரையாடலை ஏற்படுத்த வேண்டிய நிர்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான உரையாடலை கூட்டமைப்புடன் மேற்கொள்ளவும் அதில் கூட்டமைப்பை அங்கமாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டிருக்கலாம். அதனையே கூட்டமைப்பு அரசியலமைப்பு பற்றி பேசப்போவதாக கூறுவதாக விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

மூன்றாவது, தென் இலங்கையில் ஆளும் தரப்புக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் எதிர் கட்சியின் நிலைப்பாடு என்பன ஆட்சில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்ற சந்தேகத்தை ஆளும் தரப்பிடம் உருவாக்கியுள்ளது. இதனை திசைதிருப்பவும் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை அரசியலாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டிருக்க வாய்ப்புள்ளது. அத்தகைய எதிர் கட்சியின் அணியில் கூட்டமைப்பு பணிபுரியவிடாது தடுக்கவும் நெருக்கடியை எதிர்கட்சிகள் மத்தியில் ஏற்படுத்தவும் முனைந்திருக்க வாய்ப்புள்ளது. காரணம் கூட்டமைப்பு ‘அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்’ என்றும் ‘வெளிப்படையாக ஆட்சிமாற்றத்துக்கு முயலப் போகிறோம்’ என்றும் கூறிவருகிறது. கடந்த காலத்தில் இத்தகைய நகர்வொன்றை கூட்டமைப்பு தலைமைதாங்கி ஜனநாயகத்தை நிலைநாட்டி ரணில் விக்கிரமசிங்ஹா அரசாங்கத்தை பாதுகாத்தது. அத்தகைய நிலை ஏற்படுவதற்கான புறச்சூழல் மீண்டும் ஏற்படுவதாக தென் இலங்கை புலமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் மேற்கு ஆதரவுள்ள ரணில் விக்கிரமசிங்ஹ மீண்டும் பராளுமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார். கூட்டமைப்பின் நெருங்கிய அரசியல் கூட்டாளியான ரணில் விக்கிரமசிங்ஹா மீண்டும் அரசாங்கத்திற்கு ஏதும் வழிகளில் நெருக்கடி கொடுத்துவிடுவார் என்ற சந்தேகம் ஆளும் தரப்புக்கு உண்டு. ஒரு பாராளுமன்ற ஆசனத்தால் எதனை அவர் சாதிக்க முடியும் என்பதுவும் நியாயமான வாதம் என்பதை தவிர்த்துவிட முடியாது. ஆனாலும் அவரது பிரவேசத்தை ஆளும் தரப்பு எச்சரிக்கையுடனே பார்க்கிறது. இதனை அரசாங்கம் கருத்தில் கொள்ளாது செயல்பாடாது என்பதை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

நான்காவது, ஜெனீவா அமுலாக்கம் பற்றி செய்திகளை உலகத்திற்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் இலங்கை அரசாங்கம் உள்ளது என்பதும் மேலதிகமான தகவலாகும். அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் ஜெனீவாவின் தீர்மானங்களை தாம் மேற்கொள்வதாகவும் பெரும் பயங்கரவாத அமைப்பினை தாம் அழித்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு இரு நாட்டின் பிரதிநிதிகளுடன் உரையாடிவருகிறது. அதனால் அத்தகைய செய்திக்கான நடைமுறையை காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனை கூட்டமைப்பூடாக மேற்கொள்வது இலகுவானதாக அரசாங்கம் கருதியே செயல்பாட்டை ஆரம்பித்துள்ளது.

எனவே, இலங்கை அரசாங்கத்தின் நோக்கங்கள் மேற்குறித்தவற்றுடன் வேறும் காரணங்கள் இருக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் இத்தகைய இரகசிய சந்திப்பினை ஏன் கூட்டமைப்பு மேற்கொள்ள திட்டமிட்டது என்பது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கேள்வியாகும்.

ஒன்று, வெளியாகும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் முயற்சியின் பிரகாரமே பேச்சுவார்த்தைக்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருக்கும் அதிக பங்குண்டு என்பதை அத்தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தற்போதைய பிரதமர் ஜனாதிபதியாக இருந்த போது 17 தடவைகள் கூட்டமைப்பு அப்போதைய அரசாங்கத்துடன் பேசியிருந்தது. இறுதியில் எந்தவித முடிபும் எட்டப்படாது பேச்சுவார்த்தை முறிவடைந்தது என்பது மிகப்பிந்திய கால அனுபவமாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டை கூட்டமைப்பு எதிர் கொள்ளும் போது கடந்த கால அனுபவத்தை பரிசீலித்திருக்க வேண்டும். அதனையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு பேசத் தயாராகியிருக்கிறார்கள் என்றால் இரகசிய சந்திப்பிலும் இரகசிய உடன்பாடு ஒன்று இருப்பது போல் தெரிகிறது. தமிழ் மக்கள் அவ்வாறு ஊகிப்பதில் தவறு ஏதும் இல்லை என்றே தெரிகிறது. ஜனநாயகத்தில் மிகச்சிறந்த பண்பு வெளிப்படைத் தன்மை. அதற்காக கூட்டமைப்பு கடந்த காலத்தில் போராடியுமிருக்கிறது.

இரண்டு, புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் முன்னெடுத்துவரும் நகர்வுகளை பாதிக்கும் விதத்தில் கூட்டமைப்பின் நடவடிக்கை அமையும் என்பதை தெரியாது மேற்கொண்டார்கள் என்று இலகுவில் கூறிவிட முடியாது. பேச்சுக்களுக்கு செல்வதற்கு முன்பு சர்வதேசத்துடனான கலந்துரையாடலையும் புலம்பெயர் தரப்புடனான கலந்துரையாடலையும் ஏற்படுத்தியிருக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பு உண்டு.குறைந்தபட்சம் ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவை முன்வைத்த தீர்மானம் தொடர்பில் ஆதரவளித்த தரப்புடன் பேசியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாது செயல்பட்டதன் மூலம் அவை அனைத்து முயற்சிகளையும் கூட்டமைப்பு தோற்கடிக்க விளைகிறது என்ற கேள்வி தமிழ் மக்களிடம் எழுவது தவிர்க்க முடியாதது. அமெரிக்க காங்கிரஸ் முன்மொழிவையும் ஐரோப்பிய யூனியனது தீர்மானத்தையும் கூட்டமைப்பு நிராகரிப்பது போன்றதெரு எண்ணப்பாங்கு தமிழ் மக்களிடம் எழுவது ஒன்றும் தவறானதாக தெரியவில்லை. ஏற்கனவே இரு விடயங்களிலும் வரவேற்கிறோம் என்று கூறிவிட்டு இருக்கும் தமிழ் தரப்பின் அரசியல் செயலற்றுள்ளது போல் அதனை தோற்கடிக்கவும் முயலுகிறது.

மூன்று, கடந்த பண்டா-செல்வா உடன்படிக்கையிலிருந்து சமகாலம் வரை இனப்பிரச்சினை தீர்வுக்காக எத்தனை பேச்சுக்களையும் உடன்பாடுகளையும் தென்னிலங்கையுடன் தமிழ் தரப்பு மேற்கொண்டது என்பது சொல்ல வேண்டிய விடயமல்ல. அனைத்து முயற்சிகளையும் அவதானித்தால் தென் இலங்கை அரசியல் தரப்பு தமது ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் அல்லது தமிழரது அரசியல் மாற்றத்திற்கான நகர்வுகள் நிகழும் போது தமிழரது பிரச்சினையை முதன்மைப்படுத்துவதும் அதற்கு தீர்வு காண முயல்வதுவும் வழமையான இராஜதந்திர செய்முறையாக கொண்டுள்ளனர். இதனை எல்லாம் தமிழரசுக் கட்சியின் வெள்ளிவிழா மலரிலும் சுதந்திரன் பத்திரிகையிலும் மட்டுமல்ல தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் எழுத்துக்களால் பொறித்து வைத்துள்ளனர். இத்தகைய அனுபவங்கள் எதனையும் கருத்தில் கொள்ளாது செயல்பட்டிருப்பது கூட்டமைப்பின் வேறு நோக்கத்தையே வெளிப்படுத்த முயல்கிறது என்பதை தமிழ் மக்கள் எண்ணுவதில் தவறு ஏதும் தெரிவதாக தோன்றவில்லை. அதாவது தனது தனிப்பட்ட நலனை முதன்மைப்படுத்தியே கூட்டமைப்பு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு நியாயமானதே. தமிழ் மக்களது பிரச்சினைக்கு பேச தயாராகும் போது அதனை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அவ்வமைப்புக்கு உண்டு. அது தமிழ் மக்களின் ஜனநாயக விண்ணப்பம். அது தொடர்பில் புலமைசார் உரையாடல் அவசியமானது. ஊடக உரையாடல் அவசியம். கடந்த கால அனுபவங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். பேச்சுக்களை கண்காணிக்கவும் முரண்பாட்டை நகர்த்தி செல்லவும் இன்னோர் தரப்பு வேண்டும். இவ்வாறு முரண்பட்ட தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. தற்போது திட்டமிட்டிருப்பது பேச்சுவார்த்தை அல்ல. இரு தரப்புக்களுக்கிடையிலான தனிப்பட்ட உரையாடல் என தமிழ் மக்கள் கருதுவதில் தவறு ஏதும் தெரியவில்லை. இது தென் இலங்கையுடன் சேர்ந்து தமிழ் மக்களை பேச்சுவார்த்தை என ஏமாற்றுவதாகவே தெரிகிறது.

எனவே இது கூட்டமைப்பின் பலவீனத்தை மேலும் அதிகரித்துள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பு மட்டுமல்ல அனைத்து தரப்பும் தேர்தல் குழுக்களாக மாறிவருகின்றன. தேர்தலை இலக்கு வைத்து கோசங்களை எழுப்புவதும் நிவாரணங்களை வழங்குவதும் பிரச்சாரங்களை செய்வதும் மட்டுமே பணியாகக் கருதுகின்றனர். இதில் மாற்றுக்களும் உதிரிகளும் தமிழ் மக்களுக்கு ஒன்றாகவே தெரிய ஆரம்பித்துள்ளன.அனுபவத்திலிருந்து பாடங்களை கற்காமலும் விளைவுகளை கருத்தில் கொள்ளாத செயல்களையும் கைவிடுவது அவசியமானது. பேச்சுவார்த்தை என்பது ஒர் இராஜதந்திர செய்முறை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)