இலங்கை -இந்திய புவிசார் அரசியல் மீண்டுமெரு பேசுபொருளாகியுள்ளது. கடந்த 16.06.2021 இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு-இந்திய தூதுவர் கோபால் பால்கே உடனான சந்திப்புடன் அத்தகைய அரசியல் களம் உருவாகியுள்ளது. அதே நேரம் கொழும்புத் துறைமுக நகரச் சட்டமூலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேறிய பின்பு இந்திய புலமையாளர்களும் முன்னாள் புலனாய்வு மற்றும் வெளிவிவகார மற்றும் இராஜதந்திர மட்டத்தில் பணியாற்றும் நிர்வாகிகளும் இந்தியாவின் இலங்கை பொறுத்த கொள்கைகளை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இதுவரையும் இலங்கைத் தமிழரும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவான தரப்புக்களாலும் விமர்சிக்கப்பட்ட இலங்கை-சீன உறவினை இந்தியத் தரப்பாலும் அவதானிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது இலங்கை தொடர்பான கொள்கை பொறுத்து இந்தியா மாற்றத்தை மேற்கொள்ளப் போவதாக இந்தியத் தமரப்வு கூறுகிறது. இக்கட்டுரையும் அத்தகைய மாற்றம் பற்றிய தேடலாக உள்ளது.
முதலாவது, இலங்கைக்கான இந்தியத் தூதுவர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படத்துவது என்பதே முதன்மையாக உரையாடப்பட்டதாக தெரியவருகிறது. ஏறக்குறைய 34 வருடங்களுக்கு பின்னரும் அதனையே கூறிவரும் இந்தியாவும் அதனையே வலியுறுத்தும் தமிழ் தரப்பும் இயலாமை அரசியலுக்குள் இயங்குவது போல் தெரிகிறது. மறுபக்கத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் பொலிஸ் மற்றும் காணி மட்டுமல்ல ஏனைய அதிகாரங்களையும் மாகாணசபை அமைப்பிலிருந்து பிடுங்கி எடுப்பதில் வெற்றி கண்டு வருகின்றது. அத்தகைய வெறுமையான மாகாணசபை தொடர்பில் உரையாடவா இந்தியத்தூதுவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை அழைத்தார் என்ற சந்தேகம் எழுகிறது. அது மட்டுமல்ல மாகாணசபை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தரப்பே பேசவேண்டும் எனவும் தேர்தல் பற்றி அரசாங்கத்துடன் பேசுமாறும் தூதுவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. அப்படியாயின் தூதுவர் ஏன் கூட்டமைப்பை அழைத்தார். இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் பங்கு எத்தகையது. இலங்கை-இந்திய ஒப்பந்தம் இலங்கைத் தமிழர் ஒப்பமிட்ட ஒரு பத்திரம் கிடையாதே. அப்படியாயின் அதன் நடைமுறையாக்கம் இந்தியாவினதும் இலங்கையினதுமே என்பதை தூதுவர் புரிந்து கொள்ளாமை கவனத்திற்குரியதாகும். மாகாணசபைக்கான பொறுப்புக் கூறும் கடப்பாடு இந்தியாவுக்குமுரியதாவே உள்ளது.
இரண்டாவது, கூட்டமைப்பினருடனான பேச்சுக்களில் சீனா பற்றிய விடயம் பேசப்பட்ட போது அதனை இந்தியா பார்த்துக் கொள்ளும் என இந்தியத் தூதுவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது மிக ஆரோக்கியமான பதிலாக அமைந்தாலும் 1962இல் இருந்து இந்தியா சீனாவைப் பார்த்துக் கொண்டே இருகிறது. அதாவது உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருகிறது. சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பது என்பது வல்லரசுகளது உபாயம் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் இந்தியா சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டதா அல்லது ஆளும் தரப்பின் நலனை மட்டும் கருத்தில் கொள்கிறதா என்ற குழப்பம் நிலவுகிறது. அவ்வகை ஆளும் தரப்பின் நலன்கள் இந்திய தேசியத்தின் நலனாக கருதமுடியாது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். அருணாசலப் பிரதேசத்தில் பார்த்தது போல் இலங்கையிலும் பார்த்துக் கொள்வார்களா என்பது தெரியவில்லை. அதுமட்டுமல்ல லடாக்கில் கொரகொராம் உயர்பாதையில் இமயமலைப்பகுதியில் மட்டுமல்ல கொழும்பு கிழக்கு முனையத்திலும் ஹம்பாந்தோட்டையிலும், நயினாதீவு, அனலதீவு, நெடுந்தீவிலும் சீனாவின் பிரசன்னத்தை பார்க்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்குரியது. இவை இந்திய தேசிய நலனுக்கானது. இதில் இலங்கை மட்டுமல்ல தென்னாசிய நாடுகளிலும் சீனாவின் பிரசன்னத்தை பார்க்க வேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உண்டென இந்திய தேசிய தளத்திலிருந்து புரிந்து கொள்ளப்படுகிறது.
மூன்றாவது, யூன் 17 இல் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக் குறித்து இலங்கை அக்கறையுடன் செயல்படுமென எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சரின் பேச்சாளர் பக்ச்சி அரின்டம் கருத்து தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் யூன் 11 இல் இந்தியத் தூதுவர் இலங்கை இராணுவத் தளபதிகள் நிலையிலுள்ளவர்களுடன் உரையாடியுள்ளார். இதில் பிராந்தியத்திலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பற்றி ஆராயபட்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இத்தகைய முயற்சியானது மிகப் பொருத்தமான நகர்வாகவே இராஜதந்திர வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. அத்துடன் யூன் 10 2021இல் இந்தியக் கடலேர காவல் கப்பலது கொழும்புத் துறைமுகத்திற்கான வருகையும் கவனிக்கப்பட வேண்டியதாகும். கடலேரத்தில் காணப்படும் மாசினை நீக்குவதற்கான நகர்வை இந்தியக்கடலேரக் கப்பல் மேற்கொண்டதாகவும் அதற்கு இலங்கை கடற்படை நன்றி தெரிவித்ததாகவும் அச்சந்திப்பில் இந்திய தூதுவர் கலந்து கொண்டமையும் குறிப்பான விடயங்களாகும். ஆனால் இலங்கையின் கேந்திர நிலைகளில் சீனா வர்த்தக மற்றும் பொருளாதார நோக்கங்களுடன் செயல்பட்டு வருவதாகவும் அதற்கான உடன்பாடுகளை இலங்கை செய்துள்ளதும் தெரிந்த விடயமே. தற்போது திசமகாராமய வாவி புணரமைப்புப் பணியில் சீனா இராணுவம் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நான்காவது, 21.06.2021 இல் தொலைபேசி மூலம் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவுடன் உரையாடியதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காளவிரிகுடா முன்முயற்சி பற்றியும் (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation- BIMSTEC) இந்துசமுத்திர விழிம்பு ஒத்துழைப்புக் (The Indian Ocean Rim Association- IORA) குறித்தும் இதர இரு நாட்டு இராஜதந்திர விடயங்கள் உரையாடியதாகவும் அவரது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இத்தகைய உரையாடல்களை பிராந்திய மற்றும் சர்வதேச இராஜதந்திர உரையாடலாக மட்டுமே கணிப்பிட முடியும் எனவும் அவை நேரடியாக அன்றி மறைமுகமாக இந்திய இலங்கை மீது செல்வாக்குச் செலுத்த முயல்வதாகவே புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் பிம்ஸ்டெக் ஒரு பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு. இரண்டாவது சர்வதேச ஒத்துழைப்பு அமையம். அதில் பிரான்ஸ் ஒரங்கத்துவ நாடு என்ற வகையிலேயே பார்க்கப்பட வேண்டும். இது மட்டுமல்ல இத்தகை நகர்வுகளை இலங்கை பெரும் நெருக்கடியாகக் கருதும் நிலையை கடந்து விட்டது. இத்தகைய முயற்சிகள் இலங்கை இராஜதந்திரத்திற்கு முன்னால் தோற்றுப் போய்விடும். கடந்த கால அனுபவங்கள் அதற்கு ஆதாரங்கள்.
ஐந்தாவது 22.06.2021 நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் சீனாவின் செயல்பாடுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலானது என்றும் இதனால் இலங்கையை அண்மித்த பகுதிகளில் டிரோன் கமாக்கள் மூலம் இந்தியா கண்காணிக்கப் போவதாகவும் எதிர்காலத்தில் ஆளில்லாத விமானங்கள் மூலம் இந்தியா நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அது தொடர்பில் இந்தியாவுடன் வெளியுறவு அமைச்சர் மட்டத்தில் இராஜதந்திர உரையாடல் நிகழ்வதாகவும் அது தீர்த்துக் கொள்ளப்படும் எனவும் ஹெகலிய ரம்புகவெல தெரிவித்துள்ளார்.
இவற்றை அவதானிக்கும் போது கூர்மை இணையத்தளம் குறிப்பிடுவது போல் இந்தியாவுக்கும் -சீனாவுக்கும் இடையில் அதீதமான வர்த்தக உறவு நிலவுகிறது. அதனால் இரு நாடுகளும் இலங்கை விடயத்தில் முரண்பட்டுக் கொள்வதற்கான வாய்ப்பு மிக குறைவானதே. அது மட்டுமன்றி இந்திய தரப்பில் சீனா இலங்கையில் வர்த்தக நோக்குடனேயே செயல்படுவதாக வாதம் ஒன்றுண்டு. ஆனால் தயாமாஹன் எனும் அமெரிக்க கடற்படை உருவாக்கியும் கருத்துநிலையாளர் குறிப்பிடும் போது வர்த்தகமே கடற்படையையும் இராணுவத்தையும் வளர்க்கும் என்று தெரிவித்துள்ளார். அவ்வாறே அமெரிக்கா உலகம் முழுவதும் கடற்படையையும் அதற்கான தளங்களையும் அமைத்துவைத்துள்ளது. அதாவது தனது வர்த்தகக் கப்பல்களையும் வர்த்தக நகரங்களையும் பாதுகாக்க படைகளது ரோந்தும் பிரசன்னமும் அவசியமானது என குறிப்பிட்டுக் கொண்டு உலகளாவிய ஆதிக்கத்தை சாத்தியப்படுத்தியது. அவ்வாறே சீனா நகருகிறது என்பது இந்தியாவுக்கோ அல்லது அதன் புலமைத்தளத்திற்கோ தெரியாதது அல்ல. மாறாக சீனாவை இந்தியா எதிர்கொள்ள முடியாத நிலையே அதற்கான காரணம். அத்தகைய இயலாமை என்பது ஆளும்வர்க்கத்தின் நலன்கள் சார்ந்தது. அதானிக்கம்பனிக்காக மேற்குமுனையத்தையாவது பெற்றுவிட வேண்டும் என்று இந்திய ஆளும் வர்க்கம் கருதியதே அன்றி கிழக்கு முனையத்தை இழந்த போது அதற்கு எதிராக சரியான அழுத்தம் எதனையும் மேற்கொள்ள முனையவில்லை. பல்தேசியக் கம்பனிகளால் இந்தியா ஆளுகை செய்யப்படுகிறது.கம்பனிகளது நலன் இலாபமீட்டுவது மட்டுமேயாகும். கொவிட் தடுப்பூசிகளுக்கும் அதுவே நடந்ததாக மேற்கு ஊடகங்களும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இந்தியா மீது குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
எனவே, இந்தியா பிராந்திய ரீதியில் புவிசார் அரசியல் வகிபங்கினை(Role) இழந்துவிட்டதாகவே தெரிகிறது. ஒர் அரசு புவிசார் அரசாக இருக்கலாம் என்பதில் அல்ல புவிசார் அரசியல். அத்தகைய புவிசார் நிலைப்பாட்டைக் கொண்டு புவிசார் அரசியல் நகர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். அதாவது புவிசார் அரசியல் நகர்வினை கொண்ட அரசாக (Political Actor) இருத்தல் வேண்டும். அரசியல், இராணுவம், பொருளாதாரம், இராஜதந்திரம், விஞ்ஞானம், தொழிநுட்பம் போன்ற விடயங்களில் ஆதிக்கமும் செல்வாக்கும் தீர்மான சக்தியாகவும் விளங்குதல் வேண்டும். அவ்வப்போது வெங்கடேஸ்வரன் போன்று சில இராஜதந்திரிகளும் தூதுவர்களும் வெளியுறவுத் துறையினரும் முயலுகின்றார்களே அன்றி ஒட்டுமொத்தமான இந்தியா தேசம் புவிசார் பலத்தை வெளிப்படுத்தவோ கையாளவோ முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. அணிசேராமை முதல் சகார் திட்டம் வரை இந்தியாவினது பிராந்திய அரசியல் கொள்கையை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கான வாய்ப்பு மிகக்குறைவானதாகவே தெரிகிறது. ஏற்கனவே அதற்கான வாய்ப்புக்களை இழந்திருப்பதுடன் சர்வதேச அளவில் இந்தியா கொண்டுள்ள கொள்கையிலும் அதிக நெருக்கடி ஏற்பட்டுவருகிறது. அது மட்டுமன்றி இந்தியாவை விடுத்து சீனாவுடனும் அமெரிக்காவுடனும் தென்னாசிய பிராந்திய நாடுகள் நகர்கின்றன. இலங்கை அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் நேரடியாகக் அணுகி கையாள திட்டமிட்டுள்ளது. அதற்கான நகர்வுகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேபாளப் பிரதமர் யோகா தினத்தில் வெளிப்படுத்திய செய்தி இதனை மேலும் வலுப்படுத்துகிறது. மொத்தத்தில் இலங்கை விடயத்தில் இந்தியா எடுக்கும் அனைத்து நகர்வுகளும் நெருக்கடியானதாகவே அமையும். எத்தகைய கொள்கையை முன்னெடுத்தால் மாற்றம் ஏற்படும் என்ற விவாதமே இன்றி மீண்டும் பழைய மரபார்ந்த அணுகுமுறைக்குள்ளேயே இந்தியத் தரப்பு மூழ்கிக் கொண்டு கொள்கை மாற்றம் செய்யப் போவதாக கூறுகிறது. அதனால் எத்தகைய மாறுதலும் நிகழப் போவதில்லை.
-பேராசிரியர் கேரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
