இந்திய-இலங்கை உறவின் போக்கினை சீனா முழுமையாகக் குழப்பியுள்ள காலப்பகுதியென்றை அவதானிக்க முடிகிறது. இலங்கையிலிருந்து இந்தியா முழுமையாக வெளியேறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது. ஆனால் புவிசார் அரசியலாக அவ்வாறான கணக்கினை போட முடியாதுள்ளது. காரணம் சமூகமாக பண்பாட்டுத் தளமாக மரபுரீதியாக இரு நாட்டுக்குமான உறவு நெருக்கமானதாக அமைந்துள்ளது. அதனால் இதனை அரசியல் பொருளாதார இராணுவ ரீதியாக இரு நாட்டுக்குமான உறவு தாழ் நிலையிலுள்ளது எனக் கூறுவது பொருத்தமானதாக அமைய வாய்ப்புள்ளது. ஊடகப்பரப்பில் இந்தியாவின் இலங்கை பொறுத்த கொள்கை தோல்வியடைந்துள்ளது எனக்கூறுதல் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தும். இது இலங்கை பொறுத்து மட்டுமானதல்ல முழு தென்னாசிய நாடுகள் சார்ந்தும் விவாதிக்கப்படும் விடயமாகும். இக்கட்டுரையும் இந்தியாவின் பிராந்தியக் கொள்கையின் தோல்வி பற்றி தேடுவதாக அமையவுள்ளது.
இந்தியாவை சுதந்திர தேசமாக மாற்றுவதற்கு போராடிய போதே அகிம்சை என்ற வரையறைக்குள் நகர்ந்துவிட்டது. மகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்டம் இந்தியாவுக்கு கற்றுக்கொடுத்தது வன்முறையற்ற அரசியலையே. அதனை தொடர்ந்த முதல் பிரதமரான ஜவர்ஹலால் நேரு ஆசியஜோதி பற்றியும், அணிசேராமை பற்றியும் அதிகம் இந்தியாவை மட்டுமல்ல ஆசிய ஆபிரிக்க நாடுகளை வடிவமைப்பதில் முனைப்புச் செலுத்தினார். ஆனால் அத்தகைய உலகம் அமெரிக்கா உட்பட்ட மேற்கினால் கையாளுவதற்கு இலகுவானதாகவும் அத்தகைய ஆட்சியாளரின் அவசியப்பாட்டை மேலும் தூண்டுவதாகவும் அமைந்திருந்தது. இதனால் தென்னாசியா இந்தியாவின் செல்வாக்கு பிராந்தியமாக அமைந்திருந்தது. அத்தகைய நேருவின் கொள்கை 1962இல் சீனா இந்தியாவுக்குள் புகுந்ததோடு முடிபுக்கு வந்திருக்க வேண்டும். இந்திரா காந்தி அதனை ஓரளவு கடைப்பிடிக்க முயன்றார். அவரது நடவடிக்கை அமெரிக்கா உட்பட்ட மேற்குக்கு சவாலானதாக இருந்தது. அதனால் அவரது கொலைக்கு வல்லரசு ஒன்று காரணமென கமிஷன் அறிக்கை தெரியப்படுத்தியது.
ஆனால் இந்திரா காந்தி முழுமையாக அணிசேராமையை நிராகரிக்கவும் முடியவில்லை தக்கவைக்கவும் முடியவில்லை. அது மட்டுமன்றி பாகிஸ்தான்-பங்களாதேஷ் பிரிவினையும் Big Brothers (பெரிய சகோதரர்) கொள்கை ஒன்றுக்குள் நகர்ந்தது. அதனால் இந்தியா பற்றிய தென்னாசிய நாடுகளுக்கு அச்சமும் காழ்ப்புணர்ச்சியும் ஏற்பட்டது. இந்தியாவுக்கு விரோதமான கொள்கையை பின்பற்ற தென்னாசிய நாடுகள் முனைந்தன. அதன் ஓரங்கமே சார்க் அமைப்பாகும். அத்தகைய கொள்கைகளால் இந்தியாவின் மீதான விரோதப் போக்கினைக் கொண்ட தென்னாசிய நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை பின்பற்றியதுடன் சீனாவின் நட்பினையும் நாடியிருந்தன. இதனால் சார்க் அமைப்பும் பெரிய சகோரதர் எனும் கொள்கையும் அணிசேராமை போன்று தோல்வியை நோக்கியது. இவை அனைத்துமே இந்திய காங்கிரஸ் தலைமையிலான மேல்தட்டு வர்க்கத்தின் கொள்கையாக அமைந்திருந்ததுடன் காந்தி-நேரு குடும்பத்தின் கொள்கையாகவே பார்க்கப்பட்டது. ஆரிய மனோநிலைக்குள்ளால் கட்டப்பட்ட இந்தியா சாதியாலும் மதத்தாலும் மொழியாலும் நன்கு பிரிநிலைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. எத்தனை கோடி மக்கள் இருந்தும் ஒலிம்பிக்கில் ஒரு தங்கப்பதக்கத்தை வெல்ல முடியாத தேசம் என்பது அதன் பல்லினத்தேசியத்திற்கும் மதச்சார்பின்மையின் போலித்தன்மைக்கும் கிடைத்துள்ள தோல்வியாகும். நரசிம்ராவ் மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியும் நேரு குடும்ப ஆதிக்கத்திற்குப் பின்னால் செயல்பட்டதுடன் மேலும் அதனை பலவீனப்படுத்தும் விதத்தில் அமெரிக்க அடிவருடித் தனத்தை வளர்த்துவிட்டுச் சென்றது. இவர்கள் இருவரும் பிராந்தியத்தை கடந்து மேற்குலகத்தையும் பிற பிராந்தியங்களுடனான உறவினைப் பலப்படுத்துவதில் கரிசனை கொண்டனர். இதனால் தென்னாசியப் பிராந்தியம் சீனா பக்கம் சாய ஆரம்பித்தது. இவர்கள் இருவரது அணுகுமுறையும் சீனா பக்கமான நகர்வை மேலும் அதிகரிக்க வழிவகுத்தது.
இவை அனைத்தையும் கடந்து பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு அதிக மாற்றங்களை எதிர்பார்த்த போதும் அதனால் தெளிவான பிராந்தியக் கொள்கையை கட்டமைக்க முடியவில்லை. வாஜ்பாய் தலைமையில் மேற்குலகத்தின் மேற்குக்கு சேவகம் செய்யும் நிலையையே இந்தியாவில் வளர்த்து விட்டுச்சென்றார். அதனையே நரேந்திர மோடி அரசாங்கமும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் மோடி தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் தென்னாசியாவை முதலிடமாகக் கொள்ளும் வெளியுறவுக்கொள்கையை வரைந்தது. அதாவது சகார் (SAGAR – Security And Growth for All in the Region) எனும் பிராந்தியக் கொள்கையை முன்வைத்தது. இது பிராந்திய நாடுகளுடனான உறவை முதன்மைப்படுத்தும் விதத்தில் வரையப்பட்டதாகும். அதன் பிரகாரம் கொரனோ தடுப்பூசியை தென்னாசிய நாடுகளுக்கு வழங்கி அதன் முக்கியத்துவத்தை இந்தியா வெளிப்படுத்தியது. ஆனால் அத்தகைய வெளிப்பாடு இந்தியாவுக்குள்ளும் உலகளாவிய விஞ்ஞானிகள் மத்தியிலும் அதிக அதிருப்தியை உருவாக்கியது. இந்தியா தமது Formula கொண்டு கொண்டு தயாரிக்கப்பட்ட கொரனோ தடுப்பூசியை விற்பனை செய்வதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் குற்றம்சாட்டினர். இந்தியாவுக்குள் கொரனோவின் இரண்டாவது அலை எழுச்சியடையும் போதே இந்தியாவின் கொரனோ தொடர்பான கொள்கையின் பலவீனம் அம்பலமானது. அது மட்டுமல்ல பாகிஸ்தான் தவிர வேறு எந்த நாடும் இந்தியா கொரனோவால் பாதிக்கப்படும் போது உடனடியாக உதவ முன்வரவில்லை. பாகிஸ்தானுடையதை இந்தியா ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. எனவே நரேந்திர மோடி அரசாங்கத்தின் சகார் கொள்கை அரசியல், பொருளாதார, இராணுவ, மருத்துவம் அடங்கிய துறைகளில் மட்டுமல்லாது சமூக பண்பாட்டு, பாதுகாப்பு அடிப்படையிலான அனைத்து திட்டங்களும் வலுவற்றதாகப் போனது. பிராந்திய நாடுகளுடனான நெருக்கத்தை முதன்மைப்படுத்த இந்தியா ஆரம்பித்த காலம் மிக பிந்தியதாகவே தெரிந்தது. காலம் தாழ்த்திய கொள்கையால் இந்தியாவால் எந்த மாற்றத்தையும் அடைய முடியவில்லை. இந்தியா அகிம்சை என்று கூறிக் கொண்டு பாகிஸ்தான் மீதும் பின்பு இலங்கை, மாலைதீவு மீதும் படையெடுத்த போது அதன் பிராந்தியக் கொள்கையின் போலித்தனம் தெரிந்தது. ஈழத்தமிழர் மீதான அணுகுமுறை இந்தியாவின் முகத்தை அம்பலப்படுத்தியது.
இதன் அடிப்படையிலேயே கொழும்புத் துறைமுக நகரத்தை சீனாவுக்குரியதாக சட்டரீதியாக இலங்கை மாற்றிய போது இந்தியாவின் ஆய்வாளர்களும் அரசியல்வாதிகளும் மௌனமாக காணப்படுகின்றனர். இத்தகைய மௌனத்திற்கான அடிப்படைக்காரணத்தை விளங்கிக் கொள்ளுதல் அவசியம்.
ஒன்று, அமெரிக்காவின் உலகாதிக்கம் அதிக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. சீனாவின் எழுச்சியை அமெரிக்காவால் முடிபுக்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் வூஹானில் அமெரிக்க இராஜதந்திரம் மையங்கொண்டுள்ளது. ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்கு பின்னரும் சீனாவை எதிர்கொள்ள எத்தகைய துரும்புமின்றி வூஹானை ஜோ பிடன் கையில் எடுத்துள்ளார். அவ்வாறே அமெரிக்க புலனாய்வுத் துறையை நம்பி 2003 இல் ஈராக் மீதான படையெடுப்புப் போன்று வூஹான் தொடர்பில் அமெரிக்கா நகருகிறது. அத்தகைய அமெரிக்காவை பின் தொடர்ந்த இந்தியாவுக்கும் அமெரிக்கா போன்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நட்புச்சக்திகளான ஜப்பான், இத்தாலி, அவுஸ்ரேலியா, தென் கொரியா போன்ற நாடுகள் சீனாவுடன் அதிக முரண்பாட்டை தவிர்க்க முனைகின்றன. ஜி-7 நாடுகளின் செயலாளர்களது சந்திப்பில் காணமுடிந்தது. அமெரிக்கா கூட சீனாவுடன் சமரசம் செய்ய முயலலாம் ஆனால் இந்தியா சீனாவின் எல்லை நாடு மட்டுமல்ல எதிரி நாடும் கூட. இலங்கை விடயத்தில் இந்தியாவின் மௌனம் இயலாமையையே காட்டுகிறது.
இரண்டு, இந்தியாவின் சீன-இலங்கை உறவு தொடர்பில் அதிக அதிருப்தியை வெளியிடுபவர்கள் தமிழகத்தை சேந்து ஈழத்தமிழர் ஆதரவு சக்திகளாகவே உள்ளனர். அவர்களால் மத்திய அரசை மாற்றிவிட முடியாது. வட இந்தியர்களின் ஆதிக்கத்திற்குள்ளே டில்லி அரசாங்கத்தின் இருப்பு காணப்படுகிறது. இலங்கை விடயத்தில் தமிழகத்தலைவர்களால் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக எந்த மாற்றத்தையும் செய்ய முடியாத நிலையிலேயே உள்ளனர். இந்தியாவின் மௌனம் நீண்டது. முள்ளிவாய்காலின் போதும் மௌனம். ஹம்பாந்தோட்டை 99 வருட குத்தகைக்கும் விடப்பட்ட போதும் மௌனம். தற்போது கொழும்புத் துறைமுக நகரம் சட்டரீதியாக ஒப்படைக்கும் போதும் மௌனம். இது இந்தியா பிராந்திய வல்லரசு என்ற இலக்கத்தை இழந்து விட்டது என்பதே அர்த்தமாகும்.
மூன்று, கொவிட் தொற்றிலிருந்து இந்தியா மீளமுடியாதுள்ளது. ஏற்கனவே அதிக நெருக்கடிக்குள் இருந்த இந்தியா தற்போது மீளமுடியாத நிலைக்குள் தள்ளப்படுகிறது. இதற்கு மூலகாரணமே கொள்கை வகுப்பாளர்களும் ஆட்சியாளர்களுமேயாகும். இத்தகைய சந்தர்ப்பத்தை சீனா சரியாகப் பயன்படுத்தி வருகிறது. எப்போதும் அரசுகளின் தந்திரம் தலைமைகளினது உபாயமும் அவ்வாறே சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து இலக்கை அடைவதாகும். இதற்கு பின்னர் இந்தியாவினது மீட்சி எதனையும் ஏற்படுத்தப்போவதில்லை காரணம் இலங்கை ஏற்கனவே சீனாவின் செல்வாக்குக்குள் உள்ள நாடாக மாறிவிட்டது. இது இலங்கைக்கு மட்டுமுரியதல்ல தென்னாசியாவுக்கும் உலகத்திற்கும் பொருந்தும். சீனா ஒர் உலக வல்லரசாக எழுச்சி பெற்று விட்டது என்பதே இந்தியாவின் மௌனத்திற்கான காரணமாக அமைய வாய்ப்புள்ளது.
எனவே, இந்தியாவின் பிராந்தியக்கொள்கை அனைத்தும் தோல்வி கண்டுவிட்டது. தற்போதும் இந்தியா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது என கூறுவது வேண்டுமானால் சாதாரண மக்களை ஏமாற்றுவதற்கான மொழியாக இருக்கலாமே அன்றி நடைமுறை சாத்தியத்திற்கானதல்ல. இந்தியா தனது அரசியல் தத்துவத்தை மாற்ற வேண்டும். நேர்த்தியான சிந்தனைத்தளம் உருவாக வேண்டும். வேதங்களும் உபநிடதங்களும் வர்ணக்கோட்பாடுகளும் இந்தியாவை மிளிர வைக்காது. 21ஆம் நூற்றாண்டுக்கான சிந்தனையும் சிந்தனையாளனும் இந்தியாவுக்கு வேண்டும். நவீன சிந்தனைகளால் இந்தியா கட்டமைக்கப்பட வேண்டிய நிலைக்குள் உள்ளது. அதுவரையும் இந்தியாவால் இந்தியாவை ஆளுவதென்பதோ தென்னாசியாவை ஆளுவதென்பதோ பொய்யான விடயமாகவே அமையும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
