December 7, 2022
அரசியல் கட்டுரைகள்

இலங்கை இராஜதந்திர ரீதியில் மினி-மிலேனிய உடன்பாட்டை அமெரிக்காவுடன் செய்துள்ளதா?

பொதுஜன பெரமுன அரசாங்கம், இலங்கை-சீனா உறவை நெருக்கமாக கட்டியெழுப்பும் பின்னணியில் இலங்கை-அமெரிக்க உறவு கடும் நெருக்குவாரத்துக்குள் தள்ளப்பட்டது. கடந்த காலங்களில் இலங்கை ஆட்சியாளர்கள் வெளியுறவுக்கொள்கையில் இராஜதந்திரரீதியில் செயல்பட்டமையானது பல நெருக்கடிகளை கச்சிதமாக கடந்து செல்ல உதவியுள்ளது. அவ்வரலாற்று அனுபவத்தில் அண்மையில் அமெரிக்காவுடனான உறவில் எற்பட்ட விரிசலை சீர்செய்யக்கூடிய இராஜதந்திரியாய் பசில் ராஜபக்ஷாவை தென்னிலங்கை களத்தில் இறக்கியது கவனிக்கப்பட் வேண்டிய விடயமாகும். பசில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற மீள்வருகை இலங்கை-அமெரிக்க உறவை சீர்செய்யும் என்ற கருத்தாடல் தென்னிலங்கையில் பெருமளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதனை வலுச்சேர்க்கும் வகையிலான அரசியல் நகர்வுகள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷாவால் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில், ‘அமெரிக்காவுடனான நெருக்கடியை இலங்கையின் இராஜதந்திரம் வென்றுவிட்டதா?’ என்ற தலைப்பில் எழுதிய முன்னைய கட்டுரையினை வலுப்படுத்தும் வகையிலேயே இக்கட்டுரை இலங்கை இராஜதந்திரம் அமெரிக்க நெருக்கடியை வென்று அமெரிக்க-இலங்கை உறவை சீர்செய்துள்ள விடயங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இன்று சர்வதேச அரசியல் சமுத்திரங்களையும் துறைமுகங்களை மையப்படுத்தியே சுழன்று கொண்டுள்ளது. சீனாவின் ஒரே சுற்று ஒரே பாதை முன்முயற்சி மற்றும் அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் தந்திரோபாயம் ஆகிய இரண்டிற்கும் அடிப்படையாக அமைவதும் சமுத்திரங்களும் துறைமுகங்களுமே ஆகும். இலங்கையுடனான அமெரிக்க நெருக்கடியும் இலங்கையின் துறைமுகங்கள் சீனாவிற்கு வழங்கப்படுவதை மையப்படுத்தியே கருக்கொண்டது. தற்போது, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இயற்கையாக அமையப்பெற்ற திருகோணமலை துறைமுகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை என்கிற அடிப்படையில் வழங்க இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் ஒரே சுற்று ஒரே பாதை முன்முயற்சிக்கு எதிராக அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்ட இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உத்திகளில் ஒன்றாகவே திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் இருந்து குத்தகைக்கு எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த தகவலை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வெளியிட்டுள்ளது. தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமொன்றினால் 3000 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுப் பெறுமதியாக இந்த உடன்படிக்கை செய்யப்படவுள்ளது என்று ஜீலை-12 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஊடாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார அம்பலப்படுத்தியுள்ளார். திருகோணமலை துறைமுகத்திற்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை முன்னெடுக்கவே அமெரிக்க நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் அவ்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுக உடன்படிக்கையானது, அமெரிக்க-இலங்கை இடையே 2019ஆம் அண்டுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை இலங்கை அரசாங்கம் சீராக கையாண்டுள்ள விடயமாகவே அவதானிக்கப்படுகின்றது. அமெரிக்காவுடனான இவ்இராஜதந்திர இலங்கையின் அரசியல் செயற்பாடுகளை நுணுக்கமாக நோக்க வேண்டும்.

முதலாவது, அமெரிக்காவுடனான இலங்கை உறவு மீள சீர்செய்யப்பட்டதில் பசில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற மீள் வருகை பாரிய அளவில் செல்வாக்கு செலுத்துகிறது. பொதுஜன அரசாங்க முகாமுக்குள் மேற்குடன் உறவை கொண்டுள்ள முகம் பசில் ராஜபக்சாவிடமே காணப்படுகிறது. அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்ட பசில் ராஜபக்ஷாவிடம் அமெரிக்க நலனை முன்னிறுத்தி இலங்கை செயற்பட வேண்டிய தேவைப்பாடு உரையாடப்பட்டிருக்க வாய்ப்புடையதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பசில் ராஜபக்ஷாவின் அமெரிக்காவின் விஜயத்தின் போதே, இலங்கையில் பசில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற மீள் வருகை தொடர்பான உரையாடல்கள் பசில் ராஜபக்ஷாவின் அதரவாளர்களால் அதிகரிக்கப்பட்டது. பசில் ராஜபக்ஷா அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து தனிமைப்படுத்தல் ஒழுங்குகள் நிறைவடைந்த உடனடியாக பாராளுமன்ற தேசிய பட்டியல் உறுப்பினராகவும் உள்நுழைந்து நிதி அமைச்சுப்பதவியை பெற்றிருந்தார். பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்குச் சென்றிருந்த போதே திருகோணமலை துறைமுக உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

இரண்டாவது, நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் திட்டமிடப்பட்டு அமெரிக்காவின் மிலேனிய உடன்படிக்கை பொதுஜன பெரமுனா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட சூழலியே இலங்கையுடனான அமெரிக்க உறவும் பெரும் நெருக்கடிக்குள் நகர்ந்தது. அதனை அடுதட்தே இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக அமெரிக்காவின் நகர்வுகள் அமைந்திருந்தன. இந்நிலையில் திருகோணமலை துறைமுக உடன்படிக்கை தற்போது எட்டப்பட்டு;ளளது. இது மினி மிலேனிய உடன்டிபடிக்கையாக அமைய வாய்ப்பு அதிகமுள்ளது. திருகோணமலை துறைமுக தகவல்களை அம்பலப்படுத்திய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அறிக்கையில், ‘இலங்கை அரசாங்கம் செய்துகொள்ள உத்தேசித்துள்ள உடன்படிக்கையானது ரணில்-மைத்திரி தலைமையிலான அரசாங்கம் செய்துகொள்ளவிருந்த எம்.சி.சி உடன்படிக்கையை விடப் பயங்கரமானது எனக் குறிப்பிட்டுள்ளதது. இதனூடாக, 33 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்கா வசமாகப் போவதாகவும், அந்தக் காணிகளில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கே முதலீட்டு வாய்ப்பு வழங்கப்படவிருப்பதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மிலேனியம் நிராகரிக்கப்படும் போது பொதுஜன பெரமுன அரசாங்கம் கொழும்பு பல்கலைக்கழக புலமையாளர் தரப்பால் மிலேனியம் உடன்படிக்கையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை ஆய்வு செய்து நூலாக்கம் செய்துள்ளது. இந்நிலையில் திருகோணமலை துறைமுக உடன்படிக்கை மிலேனியத்துக்கான பதிலீட்டு உடன்படிக்கையாக அமைகின்ற போதிலும் அமெரிக்க பார்வை தவிர்க்கப்பட்ட இலங்கையின் பார்வையில் உருவாக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

மூன்றாவது, அமெரிக்காவுடனான உறவை ஒரு குறுங்கால தேவையாகவே இலங்கை ஆட்சியாளர்கள் கையாள முற்படுகின்றனர். இலங்கையின் ஆட்சியாளர்கள் சீன – இலங்கை உறவை நீண்ட பரிமாணமிக்கதொன்றாக உருவாக்க திட்டமிடுகிறார்கள். அதுவே இலங்கையின் இறைமையையும் பொருளாதார செழிப்பையும் உலகளாவிய நெருக்கடியிலிருந்து மீள உதவுமென கருதுகின்றனர். மாறாக அமெரிக்காவுடனான உறவை தற்கால நெருக்கடிகளுக்கு தீர்வினை பெறக்கூடிய குறுகியகால நோக்கங்களை உடையதாகவே வடிவமைக்கின்றனர். அமெரிக்காவுடனான திருகோணமலை துறைமுக உடன்படிக்கையும் அதனையே உறுதிப்படுத்துகின்றது. சீனாவுடன் 99 ஆண்டு கால குத்தகைக்கு உடன்பட்ட இலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்காவோட 5 வருட குத்தகைக்கு மட்டுமே உடன்பட்டுள்ளார்கள். இது ஏறக்குறைய 5தொடக்கம் 10 ஆண்டுகளுக்குள் இலங்கை மீதான அமெரிக்காவின்; செல்வாக்கு முற்றாக நீங்கிவிடுமென்ற தென்னிலங்கை ஆட்சியார்களின் கணிப்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

நான்காவது, ஜெனிவா, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் என சர்வதேச ரீதியில் ஏற்பட்ட நெருக்கடிகளை இலங்கை அரசாங்கம் சாதுரியமாக உதறி தள்ளியுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு சார்பான அமெரிக்க அணுகுமுறை இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் நெருக்குவாரத்தை சர்வதேச அரங்கில் உருவாக்குவதாக அமைந்தது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா அங்கம் வகிக்காத போதும், கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகமாகவே உள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரிலேயே இலங்கைக்கு எதிராக உருவாக்கப்பட உள்ள சாட்சியங்களை திரட்டும் குழுவிற்கு நிதியிடல் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் அமெரிக்க நெருக்கடியை இலங்கை சீர்செய்துள்ளமை தீர்மானத்தின் கனதியை குறைக்க வாய்ப்பாகும். மேலும், இலங்கையின் இராஜதந்திர முயற்சியால் அமெரிக்க காங்கிரஸில் முன்மொழியப்பட்ட தீர்மானம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானமும் வலுவிழக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது மீளவும் சர்வதேச அரங்கில் தமிழர்களின் நலன்களை பாதிக்கும் செய்முறையாக தெரிகிறது.
ஐந்தாவது, அமெரிக்க குடியுரிமை உடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராகுவதென்பது அமெரிக்க-இலங்கை உறவு சீர்செய்வதில் இலங்கையின் இராஜதந்திர செயற்பாடகாவே அவதானிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுனா அரசாங்கத்தின் 20வது சீர்திருத்தம் என்பது பசில் ராஜபக்ஷாவின் இரட்டை குடியுரிமை அங்கீகாரத்துடன் பாராளுமன்ற வருகையை உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும். தற்போதைய ஆட்சியாளர்கள் சீனாவுடன் பேணும் நெருக்கமான உறவு நிச்சயம் அமெரிக்க இந்தியாவிடமிருந்து நெருக்கடியை உருவாக்குமென்பது அனுபவத்துடன் நிகழும் பதிவுகளாகும். இச்சூழலில் அமெரிக்காவின் நெருக்கடிகளை தவிர்க்க தற்போதைய ஆட்சியாளர்களது முகாமுக்குள் வளர்க்கப்படும் அமெரிக்கசெல்வாக்கு தற்காலிகமானதே.

எனவே, திருகோணமலைத் துறைமுகம் தொடர்பிலட் அமெரிக்க- இலங்கை உறவு தற்காலிகமாக சீர் செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய உலக ஒழுங்கில் சீனாவின் ஏகாதிபத்திய இலக்கை கணித்து மிகவும் சாதுரியமாக நிலைமாறுகாலப்பகுதியில் அமெரிக்காவில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் இலங்கையின் இராஜதந்திரம் மினி மிலேனிய உடன்படிக்கையை (திருகோணமலை துறைமுக உடன்படிக்கை) நிறைவேற்றி உள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)