April 20, 2026
அரசியல் கட்டுரைகள்

போதைக்கு எதிரான நடவடிக்கை தேசியக் கொள்கையா? தென் இலங்கையின் அரசியலா?

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலை தீர்மானிக்கும் அதிகாரம் தமிழர் அல்லாத ஏனைய சக்திகளிடமே காணப்படுகிறது. அது தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் இல்லாத அரசியலாக மாறிவிட்டது. 2009க்கு பின்னான தமிழரின் அரசியல் தென்னிலங்கையும், பிராந்திய அரசும், சர்வதேச அரசுகளின் செல்வாக்குக்குள்ளும் அகப்பட்டுள்ளது. அத்தகைய சக்திகள் ஈழத்தமிழர்களின் அரசியலை தமது விருப்புக்கு ஏற்ற வகையில் பிரயோகப்படுத்தி நலன்களை அடைந்து வருகின்றனர். இலங்கையின் ஜனாதிபதி அநுர குமாரதிஸநாயக்கா குறுகிய காலத்தில் பல தடவை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களை நோக்கி தமது அரசியல் இலக்கை அடைய யாழ்ப்பாணத்தை பிரதான மையமாகக் கொண்டு இயங்குவதும் வளமையானதாக மாறஜவிட்டது. அத்தகைய இயங்கு திறன் பல அரசியல் நோக்கங்களைக் கொண்டது. அதனை நிர்ணயிப்பதற்கு ஈழத்தமிழர் மீது எல்லை இல்லாத குற்றச்சாட்டுகளையும் அவமதிப்புகளையும் முன்வைத்துக் கொண்டு தமது அரசியலை புனிதமாக்க முயற்சிக்கின்றனர். இக்கட்டுரையும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட தேசிய செயல்பாடு ஒன்றில் அமைச்சர் ஒருவரது உரையின் உண்மைத் தன்மையை தேடுவதாக கட்டமைக்கப்படுகிறது.

போதைக்கு எதிராக தேசிய மட்டத்தில் செயல்பாடு ஒன்றை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது. ஹம்பாந்தோட்டை, கொழும்பு பின்னர் யாழ்ப்பாணத்தில் என தேசியத் திட்டம் அங்குராட்பணம் செய்யப்பட்டது. அது ஒரு ஆரோக்கியமான அவசியமான அடிப்படையான செயல்பாடு என்பதில் எத்தகைய மாறுபட்ட கருத்தும் கிடையாது. அதனோடு சேர்ந்து பயணிப்பது அதனை முதன்மைப்படுத்துவது இலங்கை தீவில் உள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்துடைய பணியாகும். ஆனால் இத்தகைய செயல்பாடு மீது எதிர்க்கட்சிகள் பிற அரசியல் கட்சிகள் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைவதும் ஒன்றணையாமல் செயல்படுவதும் கட்சிசார் அரசியலில் அடிப்படையாகும். தேசிய மக்கள் சக்தி ஒரு கட்சிசார் நடவடிக்கையையே தேசியக் கொள்கையாகவும் அதன் செயல்பாடாகவும் பிரயோகப்படுத்துகின்றது. கிராமம் தோறும் தனது ஆதரவை விஸ்தரிக்க திட்டமிடுகிறது. ஆட்சியில் இருக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவ்வாறே செயல்படுவது மரபார்ந்த அரசியலாகும். மகிந்த சிந்தனை, இலங்கை மீளமைத்தல், பத்து இலட்சம் வீட்டு திட்டம், ஆயிரம் விகாரங்கள் கட்டுதல், என்றெல்லாம் ஒவ்வொரு அரசாங்கங்களும் அவற்றை தேசியக் கொள்கைகளாக முதன்மைப்படுத்துவது வளமையானதொன்றாகும்.

ஆனால் 2009 க்கு பின்னான வடக்கு கிழக்கு மீதான அரசியல் குற்றவாளிகள் மீதும் குற்றம் இழைத்தவர்கள் மீதும் புனிதர்கள் அரசியல் செய்வது போன்று உரையாடல்களும் கட்டளைகளும் பிறப்பிக்கப்படுகிறது. தென் இலங்கையின் அரசியல்வாதிகள் கூடுகின்ற மேடையில் இருக்கும் சாதாரண மக்கள் அரசியல்வாதிகளின் உரைகளை புரிந்து கொள்ளாத வரையில் கூட்டங்களும் கூட்டங்கள் மீதான காட்சிகளும் திரட்சி மிக்கவையாக இருக்கும். காரணம் வடக்கு கிழக்கு தமிழ் இளையோர்கள் போதை பொருளின் மீதான ஈடுபாட்டை அதிகம் கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துக் கொண்டு அவர்கள் மீதான அரசியலை தமக்கு சாதகமான அரசியலாக காட்சிப்படுத்த முனைகின்றனர். குற்றச்சாட்டுவதும் தமிழர்களை பலவீனப்படுத்துவதும் தமிழர்கள் திறனற்றவர்கள் என்று கூறுவதும் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் குற்றவாளிகள் போன்றும் அவர்கள் மீது குற்றம் சாட்டிவிட்டு தமது அரசியல் மேலாதிக்கத்தை செய்ய முயலுகின்றனர். இதனையே தென்னிலங்கையின் அரசியல்வாதிகள் தமிழர்கள் மீது அரங்கேற்றுகின்ற ஆதிக்க அரசியலின் வடிவமாக உள்ளது. தமிழர்களின் மனோநிலையை சிதைத்து இயலாதவர்கள் பலவீனமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் திருட்டவர்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்றெல்லாம் வார்த்தைகளை கொட்டிவிட்டு தமிழர்கள் மீது அரசியல் செய்ய தென்னிலங்கை சக்திகள் விளைகின்றன. அது மட்டுமல்ல ஊழலை ஒழிக்கும் அரசாங்கம் ஊழல்வாதிகளையும் அரசியல்வாதிகளைப் பயன்படுத்துபவர்களையும் நிறைவேற்று அதிகாரிகளாக்கிவிட்டு வடக்கு கிழக்கில் அரசியல் செய்கின்ற காட்சியொன்று நிகழுகிறது.

இதன் மூலம் போதை பொருள் பாவனை தொடர்விலான உண்மையான பக்கங்களை தென் இலங்கை அரசியல்வாதிகள் மறைப்பதற்கு முயல்கிறார்கள் என்பதே அதன் அடிப்படையாகும். அவ்வாறு குற்றஞ்சாட்டுகின்ற அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தென்னிலங்கை அதிகார வர்க்கத்தினர் போதைப் பொருள் வடக்கு கிழக்கில் பரவுவதற்கு காரணத்தை அடிப்படையில் கண்டுகொள்ளாது அதனை அழிக்க முடியுமென தமிழ் மக்களுக்கு உபதேசம் செய்கின்றனர். குறிப்பாக வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனையை தூண்டியவர்கள் யார் என்று கேள்வி முக்கியமானது. பாடசாலைகளையும் இளைஞர்களையும் இலக்கு வைத்து போதை வியாபாரத்தை ஊக்குவித்தவர்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆயுதப் போரின் முடிவின்போது மீண்டும் ஓர் ஆயுதப்போர் மட்டுமல்ல சுயநிர்ணயம் பற்றி எந்த உணர்வும் தமிழ் மக்களிடம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்குடனே வடக்கு கிழக்கு இளைஞர்களுக்காக அப்போதைய ஆட்சியாளர்கள் இறக்குமதி செய்தும் உற்பத்தி செய்தும் போதைப் பொருளை விநியோகம் செய்ய அனுமதித்தனர். அதுவே காலப்போக்கில் தென் இலங்கையை விழுங்கும் என்று சற்றும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. போதைப்பொருள் வடக்குக் கிழக்கில் அதீதமாகியுள்ளது என்பது உண்மையானது. அதற்கு காரணமானவர்கள் இன்றும் அதனை மேற்கொண்டு செயல்படுகின்றனர்.

பிரித்தானியருடைய குடியேற்ற காலப்பகுதியிலும் அதிலிருந்து விடுபட்டு விடுதலை பெற்ற காலப்பகுதியிலும் வடக்கிலும் கிழக்கிலும் முழு இலங்கைதீவில் குற்ற செயல் மிகக் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று இலங்கை தீவிலேயே அதிக குற்றச்செயலை கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் தென்னிலங்கை ஆட்சியாளர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது. இதற்கு பின்னால் தென்னிலங்கை அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரமும் அதனை தாங்கி இருக்கும் அதிகார கட்டமைப்புகளும் பாதுகாப்பு தரப்பினரும் பிரதான பங்காளிகள் என்பதை தென்னிலங்கை ஆட்சியாளர்களோ அதன் பிரதானிகளோ தெரியாதவர்கள் அல்ல. திட்டமிட்டு யாழ்ப்பாணத்தின் அல்லது வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தை சிதைக்க வேண்டும் என்பதற்காக கட்டமைக்கப்பட்டதே போதை வியாபாரம். அத்தகைய போதை வியாபாரத்தின் பிரதான பங்காளர்களாக வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற பாதுகாப்பு தரப்பினர்களும்; புலனாய்வாரள்களும் பங்கு உடையவர்கள் என்பதை மறுக்க முடியாது. வடக்கு கிழக்கு நோக்கி கேரளாவில் இருந்து தருவிக்கப்படும் கஞ்சாவுக்கும் உள்நாட்டு கரையோரப் பாதுகாப்புக்கும் அதிக தொடர்புண்டு. அப்படியாயின் அத்தகைய மையங்களை நோக்கி படையினரும் பாதுகாப்பு தரப்பினரும் ஏன் செயல்பட முடியவில்லை என்பதும் கேள்வி எழுப்பப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

ஒரு சமூகத்தை அழிப்பதற்கு அதன் பண்பாட்டை, பொருளாதாரத்தை, மொழியை, வாழ்வியலை மட்டுமல்ல அவர்களது சுய கௌரவத்தையும் அழிப்பதன் ஊடாக அந்த இனத்தை கூனிக்குறுக வைத்து அதன் மேல் தமது அரசியலை சாத்தியப்படுத்த முடியும் என தென் இலங்கை ஆட்சியாளர்கள் கணித்து செயல்படுகின்றனர். கொழும்பிலும் ஹம்மாந்தோட்டையிலும் இவ்வகையான உரையாடலை எந்த அரசியல்வாதியும் முன்வைப்பதில்லை. மாறாக நீண்ட ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்திய மக்கள் முன் வந்து போதைக்கு நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர்களை குற்றவாளி ஆக்கிவிட்டு அவர்கள் மீது தமது அரசியலை நகர்த்துவது வடக்கு கிழக்கில் மட்டுமே நிகழ்கிறது. ஈழத்தமிழர்கள் தமது அரசியல் இருப்பை கட்டமைப்பதற்கு சுய கௌரவத்தை நிலை நிறுத்துவதன் ஊடாகவே சாத்தியப்படுத்த முடியும் என்பதை உணருகின்ற போது மட்டுமே இத்தகைய செய்முறையில் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது. ஈழத் தமிழரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளே ஈழத்தமிழரின் சுய கௌரவத்திற்க்கு இழுக்கை இழைக்கின்றபோது எதிர் தரப்பினர் அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தமது அரசியல் இலாபங்களை அடைவதற்கு முனைவது இயல்பானதே. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழர்களுக்கு உரியது. ஈழத்தமிழ் ஊடகங்களும், ஊடகத்தினரும், ஆய்வாரள்களும், சமூகநலன் விரும்பிகளும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.

ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்கள் தம்மீது நிகழ்த்தப்படும் அவமதிப்புகளுக்கும் அடிமைத்தனத்துக்கும் அதற்கான உரையாடல்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய தேவைப்பாடு தவிர்க்க முடியாதது. இவ்வாறு செயல்பட்டு விட்டு இந்த அரசியலை சாபக்கேடான அரசியல் என்று விளக்கம் வேறு முன்வைப்பது ஆட்சியாளரின் அடையாளம். அவர்களின் ஆதிக்கம் என்பதையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும். இடதுசாரித்துவம் என்பது இடதுசாரிகள் அணியும் ஆடையின் நிறங்களில் அல்ல. அவர்களது அறிவிபூர்வமான எண்ணத்திலும் மனோநிலையிலும் செயலிலுமே தங்கியுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: யாழ் தினக்குரல்)