March 28, 2024
அரசியல் கட்டுரைகள்

சீன எதிர்ப்புவாதத்தினால் மீண்டுமொரு நெருக்கடிக்குள் தமிழ் மக்களை கூட்டமைப்பு அழைத்துச் செல்கிறதா?

உலகளாவிய தளத்தில் சீனா எவ்வளவுக்கு விமர்சிக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு இலங்கையிலும் சீனா விமர்சனத்திற்கு உள்ளாகிறது. ஆனால் ஆளும் தரப்பால் அத்தகைய விமர்சனங்கள் நிராகரிக்கப்பட்டாலும் தவிர்க்க முடியாது கடந்த கால ஆட்சியிலும் சீனாவின் பிரசன்னம் இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக மேற்குமயமான ஊடகங்களாலும் தகவல் மையங்களாலும் சீனா உலகளாவிய ரீதியில் விமர்சிக்கப்படுவது போல் அல்லாது இலங்கையில் ஆளும் தரப்பும் எதிர் தரப்பும் மாறி மாறி எதிரணியில் இருக்கும் போது அத்தகைய விமர்சனங்களை முன்வைக்கின்றன. ஆனால் தமிழ் தரப்பு ஏன் சீனாவை விமர்சிக்கிறது என்பதை தேடுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

வடக்கில் சீன நிறுவனங்கள் கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கௌதாரி முனையில் மக்களுக்கு தெரியாத மறைவிடத்தில் இத்தொழில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. குறித்த நிறுவனத்தினர் அரியாலையில் தமது அலுவலகத்தை வைத்துள்ளனர். சட்டவிரோதமான அனுமதியை கடற்தொழில் அமைச்சால் வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு ஒருவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு அப்பால் இந்த நாட்டிலே சீன ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சியாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இதுமட்டுமன்றி குடத்தனையில் வீதி திருத்தும் பணியில் சீனர்கள் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்த சுமந்திரன் அவர்கள் ஒரு போட்டோவை வெளியிட்டு பின்னர் அதனை விலக்கிக் கொண்டு மன்னிப்பும் கோரியிருந்தார். ஏனைய தரப்புக்களும் சீன எதிர்ப்புவாதத்தை ஒரு அரசியலாக கொண்டுள்ளனர். அதற்கு போர்காலம் முதல் ஜெனீவா வரை சீனாவின் அணுகுமுறை பிரதான காரணமாக அமைந்திருக்கின்றது. ஆனால் சீனாவின் ஆதிக்கம் என்பது அமெரிக்காவுக்கே சவாலானதாக மாறியுள்ளது. உலகளாவிய ரீதியில் சீனாவின் ஏகாதிபத்தியப்போக்கு மேற்கு ஏகாதிபத்தியத்திற்கே சவாலானதாக மாறியுள்ளது. உலகம் சீனாவின் சந்தைக் குண்டுக்குள்ளும் வூஹான் குண்டுக்குள்ளும் அகப்பட்டு திணறுகிறது. இத்தகைய நிலையில் கூட்டமைப்பு சீன எதிர்ப்புவாதத்தை ஏன் முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ளது. அத்தகைய அணுகுமுறை எந்தளவுக்கு சரியானதாக அமையவாய்ப்புள்ளது.

முதலாவது, கூட்டமைப்பின் சீன எதிர்ப்புவாதம் நியாயமற்றதென வாதிட முடியாது. ஆனால் கூட்டமைப்பு ஒர் ஆளும் தரப்போ/ எதிர்தரப்போ கிடையாது. பாதிக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரதிநிதிகள். அத்தகைய நிலையில் நாடுகளையும் நாடுகளது நலன்களுக்கு முன்னால் எப்படி செயல்படுவது. இலங்கையின் மீது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் தமது நலனுக்காக போட்டியிடுகின்றன. அவை ஒவ்வொன்றும் சீனா போன்று செயல்படுகின்றன. அதில் சீனா அரசின் ஆதரவுடன் அதீதமாக செயல்படுகிறது. ஏனைய நாடுகள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் போது இதே மாதிரியான நகர்வுகளை அந்த நாடுகள் மேற்கொண்டன. அது மட்டுமன்றி கூட்டமைப்பு உள்ளடங்கலாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் சீனா மட்டுமல்ல மேற்குறித்த அனைத்து நாடுகளும் வடக்கு கிழக்கில் மேற்கொண்டுள்ள பொருளாதார திட்டங்கள் தொடர்பில் இதே போன்ற தகவல்களை வெளியிடாதுள்ளமை பற்றிய கேள்விகளும் உண்டு. கௌதாரிமுனையில் மட்டுமல்ல வடக்கு-கிழக்கு முழுவதும் எத்தனையாயிரம் ஏக்கர் நிலம் எவ்வளவு தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன என்ற தகவல்களை திரட்டி பாராளுமன்றத்திலும் பொது வெளியிலும் தூதரகங்களிலும் பதிவுசெய்யப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது. அதனை உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய கடபட்பாடு அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் உண்டு. உள்ளூராட்சி மன்றம் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரையும் வடக்கு-கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இவற்றை கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும். ஏற்கனவே ஒரு சில உள்ளூராட்சி மன்றங்கள் செயல்பட்ட போதும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களது பிரதிநிதிகளுக்கும் அத்தகைய பொறுப்பு உண்டு. சீனாவை மட்டும் வெளிப்படுத்துவதல்ல. அனைத்து நாடுகளதும் தென் இலங்கையினதும் நடவடிக்கைகள் தெளிவான ஆதாரங்களுடன் வெளிப்படுத்த வேண்டும்.

இரண்டாவது, சீன எதிர்ப்புவாதமானது இந்தியாவையும் அமெரிக்காவையும் திருப்திப்படுத்துவதாக அமையுமே அன்றி தமிழரது அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என விவாதிக்க முடியாது. அனைத்து அன்னிய நாடுகளும் நலன் அடிப்படையிலேயே இலங்கை மீதும் தமிழர் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றன. அத்தகைய நலனுக்குள் ஏதோ ஒரு பக்கத்தில் தமிழரது நலன் இருக்குமாக அமையுமாயின் அதனை தமிழ் தரப்பு முதன்மைப்படுத்தலாம். ஆனால் சீன எதிர்ப்பு வாதத்தினால் சீனாவுடன் பகைமை கொள்வதேயன்றி வேறு எதனையும் அடைய முடியாது. இலங்கைத் தமிழர் விடயத்தில் சீனா அதீத எதிர்பினைக் கொண்டுள்ளது. அல்லது இலங்கை அரசை திருப்திப்படுத்த முனைகிறது. அதே இயல்பினையே அமெரிக்காவும் இந்தியாவும் கொண்டுள்ளன. இந்நாடுகள் தமிழர்களை அரவணைத்து செயல்படுகின்றன. நல்லாட்சிக்காலத்தில் அதனை முழுமையாக காணமுடிந்தது. மீண்டும் அவர்களுக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 13வது திருத்தச்சட்டமூலமும் இந்தியாவின் நலனுக்கானதே. ஆனால் அதில் தமிழரது அதிகாரத்தேவையும் கலந்துள்ளது. அதனால் அது முக்கியமானதாக தமிழர்கள் கருதினர். அதே போன்றது தான் ஜெனீவாவும். இதனால் அனைத்து அரசுகளையும் சமதூரத்தில் வைத்துக் கொண்டு தமிழ் தரப்பு செயல்படுவது அவசியமானது. சீனாவை எதிர்பதுவும் இந்தியா அழைக்கும் போதெல்லாம் காலடியில் வீழ்வதுவும் அமெரிக்க நலன்களுக்காக உழைப்பதுவும் ஒரு தேசிய இனத்திற்கு தலைமை தாங்குபவர்களுக்கு உரிய நிலைப்பாடல்ல. அனைத்து அரசுகளையும் சமதூரத்தில் வைத்து கையாளுவதே அவசியமானது.

மூன்றாவது, சீன எதிர்ப்புவாதம் கூட்டமைப்பின் இருப்பை பலப்படுத்துவதுடன் அதன் எதிர்காலத் தலைமைத்துவத்திற்கான ஆசிர்வாதத்தை ஏற்படுத்தக் கூடிய தரப்பான இந்தியாவை திருப்திப்படுத்த உதவும். இந்தியாவின் விருப்புக்களை நோக்கிய நகர்வுகளை கூட்டமைப்பு செயல்படுத்துவதாக அதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு நிராகரிக்க கூடியதொன்றல்ல என்பது கவனிக்கத்தக்கது. காரணம் இந்தியா அழைக்கும் போதெல்லாம் சரணடையும் கூட்டமைப்பு தமிழருக்காக எதனையும் கோராத நிலையிலேயே உறவு தொடர்கிறது. இந்தியாவுக்கும் புலிகளுக்குமே முரண்பாடு அதீதமாக இருந்தது என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளால் இந்தியப் பிரதமர் ஒருவர் கொல்லப்பட்டார். பதிலுக்கு புலிகள் தலைமையை இந்தியாவின் உதவியுடனும் சீனா உட்பட்ட சர்வதேச அனுசரணையுடன் அழிக்கப்பட்டுவிட்டது. 2009 பின்பு இந்தியாவுக்கு விரோதமான ஏதாவது தரப்பு இலங்கையின் வடக்கு கிழக்கிலிருந்து எழுச்சி பெற்றிருக்கிறது என்று கூறமுடியுமா? அவ்வாறான எந்த சூழலும் இல்லாத போது தமிழ் மக்களது பிரச்சினையை ஏன் இந்தியா தீர்க்க முயலவில்லை? போருக்கு அனுசரணை கொடுத்த தரப்பில் இந்தியா பிரதானமானது. அதனால் இனப்பிரச்சினை தீர்க்க முடியாதா? என்ற கேள்வி நியாயமானதே.எனவே தான் சீன எதிர்ப்புவாதம் கூட்டமைப்பையும் அதன் அடுத்தகட்ட தலைமைகளை பாதுகாக்கவும் உதவக்கூடியதாக அமையும் என கருத இடமுண்டு. இதில் கூட்டமைப்பினர் மட்டுமல்ல அனைத்து தமிழ் தரப்புக்களும் இந்தியாவுடன் இணைந்து பயணிக்க முயலுகின்றனர். இதனால் எல்லோரும் சீன எதிர்ப்புவாதத்தை கையில் எடுத்துள்ளனர். குறிப்பாக பாராளுமன்றத்தில் இலங்கை-சீன நட்புறவு அமைப்பில் உறுப்பினராகவும் நிறைவேற்று உறுப்பினராகவும் பணிபுரிந்து கொண்டு வடக்கு கிழக்கில் சீன எதிப்பினை தமிழ் பிரதிநிதிகள் முன்னெடுப்பது அவர்களது அரசியலாகவே தெரிகிறது.

எனவே, தமிழ் தரப்பு தனது நலனுக்கு செயல்படுவதை கைவிட வேண்டும். உலகிலுள்ள அனைத்து நாடுகளும் இலங்கைத் தமிழரது பிரச்சினைக்கு தீர்வை எட்டும் வரை அவசியமானவை. எந்த அரசையும் நிராகரித்துவிட முடியாது. இலங்கை தீவானதே அவ்வகையான கொள்கையையே கடந்த காலத்தில் கடைப்பிடித்து வெற்றி கண்டது. இலங்கை அரசே அவ்வாறு செயல்படும் போது ஒரு தேசிய இனம் அதிக நெருக்கடிக்குள் அகப்பட்டிருக்கும் இனம் தனது எதிர்காலம் கருதி அனைத்து நாடுகளையும் சமதூரத்தில் வைத்து கையாள வேண்டும். இந்தியா புவிசார் அரசியலை கொண்டிருந்த நாடு. ஆனால் தற்போது அதற்கான வகிபங்கினை இழந்துள்ள நாடு. புவிசார் அரசியல் என்பது அமைவிடத்தினதால் மட்டுமல்ல அதனை பிரயோகிக்கக் கூடிய அதிகாரத்தினாலும் ஆதிக்கத்தினாலும் ஏற்படக் கூடியது. இவை எதனையும் கொண்டிராத இந்தியாவை புவிசார் அரசியல் சக்தி எனக்கூறுவது கடினமானது. தற்போது சீனாவே தென்னாசியப் பிராந்தியத்தின் புவிசார் அரசியலை பிரயோகிக்கும் சக்தியாக மாறியுள்ளது. அதனைப் புரிந்து கொண்டு செயல்படுவது பொருத்தமானது. எந்த நாட்டையும் பகைக்காது சமதூரத்தில் அனைத்து நாடுகளையும் கையாளுவதே பொருத்தமானது. அதிலும் தமிழ் தரப்புக்கு மிகப்பொருத்தமானது. தமிழரது உலகம் சார்ந்தும் பிராந்தியம் சார்ந்தும் அத்தகைய கொள்கையே பாதுகாப்பானது. இத்தகைய நாடுகள் மீதான எதிர்ப்பு வாதத்தினால் தமிழ் மக்களது எதிர்காலத்தை வெற்றி கொள்ள முடியாது. சீன-இலங்கை உறவு ஒர் அரசியலானது. அதனை அரசியலாக நோக்குவதும் கையாளுவதும் வேறு சீனா மீது எதிர்புக்களை உருவாக்குவது வேறு. சீனாவின் பிரசன்னம் நல்ல அரசியல் வாய்ப்பினை தமிழ் அரசியல் தலைமைகளுக்கு தந்துள்ளது. அதனை நோக்கி நகர்வதே தற்போதைய அவசியமாகும். அதனைவிடுத்து இந்திய அமெரிக்க நலன்களுக்கு சீன எதிர்ப்பு வாதத்தை மேற்கொள்வது ஆபத்தானதாக அமையும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)