கொழும்புத்துறைமுக நகரம் தொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இலங்கை சீனாவின் காலனித்துவமாகிறது என்ற உரையாடல் அதிகரித்துள்ளது. காலனித்துவ யுகம் முடிவடைந்து ஏறக்குறைய எழுபது வருடம் நிறைவு பெற்ற போதும் இன்னுமே அத்தகைய வரைபுக்குள் நிலப்பரப்புக்கள் காணப்படுகின்றன. ஆனால் பின்காலனித்துவ அரசுகளும் அவற்றின் ஆளுகைத் தோல்விகளும் நவகாலனித்துவ ஆட்சிக்கு வழிவகுத்திருந்தது. அக்காலப்பகுதியிலேயே நெப்போடடிஸ அரசுகளும் போனப்பாட்டிஸ அரசுகளும் கீழைத் தேசங்களில் எழுச்சி பெற்றன. அத்தகைய ஆட்சிகள் மேற்குலகத்திற்கு நலனைக் கொடுக்கும் உயர்வர்க்கத்திடமிருந்து ஆட்சியை பறித்துக் கொண்ட புதிய வர்க்கத்தின் எழுச்சியையே அத்தகைய அரசுகளாக விளங்கின. அவை இராணுவ வாதத்தையும் தீவிரத் தன்மையையும் வனமுறையிலான ஆதிக்கத்தையும் கொண்டியங்க ஆரம்பித்து வெற்றி பெற்றன. அத்தகைய ஆட்சிகளுக்கு வலுச் சேர்க்கும் நாடாக சீனா மாறியது. மேற்குக்கு எதிராக சீனாவுக்கு ஆதரவான அரசுகள் உலகளாவிய ரீதியில் உருவாகின. ஆனால் சீனாவின் எழுச்சி மீளவும் காலனித்துவத்தை நினைவுபடுத்துகின்றது என்பது மரபார்ந்த மேற்கு காலனித்துவம் போன்றதல்ல. அதற்கு ஒப்பானதுமல்ல. தென் சீனக்கடலில் உருவாக்கியது போல் கொழும்புத் துறைமுகத்தை அண்டிய பகுதியில் செயற்கைத் தீவை (Man Made Island) அமைத்து அதில் துறைமுக நகரத்தை உருவாக்கியுள்ளது. அரசியல் வாதத்திற்கு வேண்டுமாயின் காலனித்துவம் எனக்கூறிக் கொள்ளலாம். ஆனால் அரசறிவியலில் காலனித்துவம் என வாதிக்க முடியாது. இது தென் இலங்கை ஆட்சியாளரின் இராஜதந்திர ரீதியான வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும். இது அமெரிக்க-இந்திய அணிக்கு மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களது நலன்களுக்கும் ஆபத்தானது.
இலங்கை -சீன உறவு பலமடைவதென்பது இலங்கைத் தமிழருக்கு இலாபகரமான விடயம் எனக் கருத்துருவாக்கம் செய்யும் தரப்பினரிடம் உள்ள வாதமாகும். ஆனால் அது முற்றிலும் பலவீனமான வாதமாகும். அவ்வாறான வாதம் நியாயமானதாக அமைவதற்கு முன்வைக்கப்படும் காரணம் இந்திய-அமெரிக்க அணியின் அணுகுமுறையாகும். சீன எதிர்ப்பு வாதத்தைக் கொண்ட இந்திய-அமெரிக்க அணியின் போக்கினால் தமிழர்கள் மீதான கரிசனை அதிகரிக்கும் என்பதும் அது இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் எனவும் விவாதிக்ககின்ற போக்கொன்று நிலவுகிறது. அத்தகைய சீன எதிர்ப்பு வாத அணியின் பலம் எவ்வாறுள்ளது என்பதை முதலில் அவதானிப்பது பொருத்தமானதாக அமையும்.
முதலாவது, உலகளாவிய ரீதியில் இந்தியாவும் -அமெரிக்காவும் ஓரணியில் இருந்தாலும் இலங்கை விடயத்தில் இந்தியாவின் அனுமதியுடனேயே அமெரிக்கா உட்பட மேற்கு கையாளுகிறது. ஜெனீவாவில் அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியா வாக்களிக்காது விலகியிருந்தது. அதனையும் இந்தியா இலங்கைக்கு எதிரானது எனவும் சில சந்தர்பங்களில் சார்பானது எனவும் குறிப்பிட்டுக் கொண்டது.அதன் மூலம் அதன் இரட்டைத் தன்மை தெரியவந்தது. அதனையே 2020 ஆட்சி மாற்றத்தின் போதும் இந்தியா கடைப்பிடித்தது. அதில் இந்தியாவை இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் தந்திரோபாயமாகக் கையாண்டு வெற்றி பெற்றனர். ஆட்சிக்கு வந்ததுடன் இந்தியாவை அதிகம் குளிரவைத்தனர். அதனை இந்தியா நம்பிக் கொண்டது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் இந்தியா முதலிடம் என இலங்கை அறிவித்த போது இந்தியா திருப்தி கொண்டது. ஆனால் சுதந்திர காலத்திலிருந்து இலங்கையின் போக்கினை இந்தியாவால் முழுமையாகக் கண்டு கொள்ளமுடிவில்லை.அதுவே இலங்கையின் தந்திரோபாயமாகும். தற்போது தென்னாசியாவிலுள்ள அனைத்து நாடுகளுமே அத்தகைய கொள்கையையே பின்பற்றுகின்றன. இந்தியாவுக்கு எதிரான வெளியுறவுக் கொள்கையையே இந்தியா முதலிடம் என தென்னாசிய நாடுகள் வாதிக்கின்றன. அதனையும் இந்தியா நம்பிக்கையோடு எதிர்கொள்கிறது.
இரண்டாவது, சீனாவின் பொருளாதாரப் பலத்திற்கு முன்னால் அமெரிக்காவே நெருக்கடியை எதிர்கொள்ளும் போது இந்தியாவால் எப்படி எதிர் கொள்ள முடியும என்பது பிரதான கேள்வியாகும். இலங்கையின் பொருளாதார இருப்பென்பது உலகத்தின் உதவிகளிலும் நன்கொடைகளிலும் நேரடி முதலீட்டிலுமே தங்கியிருந்தது. இதில் மேற்கு இந்தியாவுடன் நெருங்கிவரும் வரை நிபந்தனை இன்றி உதவியது. அதன் பின்பு நிபந்தனைகளை போட ஆரம்பித்தது. அதற்கு மேற்கின் பொருளாதார பலவீனமும் பிரதான காரணமாகும். இதனால் சீனாவின் பொருளாதார பலம் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கும் விருத்தி செய்வதற்கும் வாய்ப்பினைத் தரும் என்ற கருத்து ஆட்சியாளரிடம் ஏற்பட்டது. சீனாவும் அதற்கு அமைவாக உதவிகளை வழங்க முன்வந்தது. இலங்கை சீனாவிடமிருந்து நிதியை பெற்று இந்தியதாவுக்கு கடந்கொடுத்த அரசியலை புரிந்து கெபாள்ளுவது அவசியமானது. இந்தியாவின் உள்நாட்டுப் பொரளாதாரத்தை கட்டிவளர்க்க முடியாத நிலையிலும் வறுமையை ஒழிக்க முடியாத நிலையிலும் இலங்கைக்கு பாரியளவு நிதியளிப்பதென்பது கடினமானதே. அது மட்டுமன்றி இந்தியாவின் பிராந்தியக் கொள்கையும் புவிசார் அரசியல் பலவீனங்களும் அதனைக் கையாள முடியாத தலைமைகளும் இலங்கையை சீனாவிடம் கையளிக்க உதவியுள்ளது.இலங்கையை மட்டுமல்ல முழுத் தென்னாசியா நாடுகளையும் சீனாவிடம் ஒப்படைத்துள்ளது.
மூன்றாவது, உலகளாவிய வல்லரசு நிலையிலிருந்த அமெரிக்காவும் அதன் அணியும் படிப்படியாக பலவீனப் பட்டுக் கொண்டு போகின்ற காட்சியை நாளாந்தம் காணமுடிகிறது. அமெரிக்க வல்லரசு என்ற கோதாவிலேயே இந்திய-அமெரிக்க கூட்டின் இருப்பு பார்க்கப்பட்டது. அதன் இருப்பு கேள்விக்குரியதாகி வருகிறது. இறுதியாக நடந்த பாலஸ்தீன-இஸ்ரேலிய போரிலும் அமெரிக்க -இஸ்ரேலிய அணி அதிக நெருக்கடியை சந்தித்துள்ளது. 1948 பின்பு இஸ்ரேல் இத்தகைய நெருக்கடியென்றினை எதிர்கொண்டதில்லை. அதன் இருப்புக்கு பின்னதால் அமெரிக்காவின் பலம் முக்கியமானதாக இருந்தது. அத்தகைய நாட்டின் ஆதரவு இருந்தும் இஸ்ரேலால் இலக்கினை அடைய முடியவில்லை என்பது அமெரிக்க வல்லரசிற்கான பலவீனத்தையே காட்டுகிறது. அமெரிக்க-இஸ்ரேல் போர் உத்தியை தகர்த்தில் சீனாவுக்கும் ரஷ்சியாவுக்கும் பங்குள்ளது. மேற்காசிய போருக்கு பின்னர் புதிய முகத்தை காட்ட முனைகிறது. அத்தகைய முகம் அனைத்தும் இஸ்ரேல்-அமெரிக்க அணுகுமுறைக்கு எதிரானதாகவே தெரிகிறது.
நான்காவது கொவிட்-19 பின்பான உலகம் சீனாவினால் உருவாக்கப்படுகிறது. அதில் ரஷ்சியாவும் ஒரு பங்கிக்கு உதவுகிறது. அதாவது ரஷ்சியா இராணுவமாக நகர சீனா பொருளாதாரமாக நகர மேற்கு இரு தளத்திலும் தோற்கடிக்கப்படுகிறதை காணமுடிகிறது. அதனுடன் இணைந்த இந்தியாவும் அதனை எதிர்கொள்ள வேணட்டிய நிலைக்குள் தள்ளப்படுகிறது. இந்தியா தனது மக்கள் மீதான தொற்றினை கட்டுப்படுத்த முடியாது திணறுவதுடன் அதற்கான வாய்ப்புக்களை வைக்சின் இராஜதந்திரம் என்று கூறிக் கொண்டு நன்கொடையளித்தும் விற்பனை செய்தும் பிழைத்துக் கொண்ட தேசம். இதுவே தான் இந்தியத் தேசியம். தனது மக்களையும் தாம் சார்ந்த பிரதேசத்தையும் பாதுகாக்க முடியாத அரசுதான் இந்திய தேசிய அரசு என்ற அவப் பெயரை பெற்றுள்ளது. இதிலிரந்து மீள்வதற்கு இன்னும் இருபது வருடம் தேவைப்படும். ஏற்கனவே சீனாவை விட இருபது வருடம் பின்தங்கிய இந்தியா கெபாரனோவுடன் மேலும் இருபது வருடம் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் ஆட்சியாளரின் தூரநோக்கற்ற சிந்தனையே அடிப்படைக் காரணமாகும்.
எனவே இத்தகைய பலவீனங்களை கொண்டுள்ள இந்திய-அமெரி0க்க கூட்டினால் இலங்கைத் தமிழரை மட்டுமல்ல தமது மக்களை பாதுகாக்க முடியுமா என்ற கேள்வி முக்கியமானது. அது அமெரிக்காவுக்கு பொருந்துகிறதோ தெரியாது ஆனால் இந்தியாவுக்கு பொருந்தும். இலங்கை சீன உறவு நட்பு ரீதியானது தான். தற்போது ஆரோக்கியமானதாகத் தான் அமைந்துள்ளது. அதன் எதிர்காலம் தான் முக்கியமானது. மேற்குலகம் போன்று சீனாவின் அணுகுமுறைகள் உலகளாவிய தளத்தில் இல்லை என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அது மட்டுமல்ல இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவென்பது புவிசார் ரீதியானது. அதனை மீறுதல் நீண்ட காலத்திற்கு இலாகரமானதாக அமையாது. மேற்கின் தோல்வி இந்தியாவின் தோல்வியாகியுள்ளது. அது சீனாவுக்கு வாய்ப்பானதாக அமைந்துள்ளது. சீனா இலங்கையை மட்டுமல்ல தென்னாசியாவை மட்டுமல்ல முழு உலகத்தையும் தனது பிடிக்குள் கொண்டுவருவதில் வெற்றி கண்டுவருகிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)
