April 19, 2026
அரசியல் கட்டுரைகள்

கிவுல்ஓயாத் திட்டமும் வரலாற்றை திரிபடையச் செய்யும் ஜே.வி.பி. அரசாங்கமும்?

இலங்கை அரசியலில் கிவுல் ஓயா திட்டம் ஈழத்தமிழ் மக்களின் எதிர்ப்புணர்வுகளால் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. நீண்ட காலத்துக்கு முன்னர் திட்டமிடப்பட்டு தமிழ் மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டதை மீளவும் மேற்கொள்வதற்கு ஜே.வி.பி. அரசாங்கம் திட்டமிட்டுவருகின்றது. தமிழ் மக்களின் நிலங்களை நோக்கி அபிவிருத்தி திட்டங்களை கட்டமைக்கும் விதத்தில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கை என அரசாங்கம் கிவுல் ஓயாத் திட்டத்தை பற்றி விவாதித்துவருகிறது. இக்கட்டுரையும் ஜேவிபி அரசாங்கம் விவாதிக்கும் அம்சங்களின் உண்மைத்தன்மைகளை உரையாட முனைகிறது.

குறிப்பாக ஜே.வி.பி. அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கிவுல் ஓயாத் திட்டத்தை தமிழ் கட்சிகளின் தவறான தகவலால் எதிர்க்கப்படுவதாகவும் எதிர்ப்பதற்கு நியாமில்லை எனவும் அதற்கான காரணங்கள் பலவற்றை வெளிப்படுத்தி உள்ளார். அவரது உரையின் சாராம்சத்தை நோக்குவது அவசியமானது.

கிவுல் ஓயாத் திட்டமானது இன அல்லது மத நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானதும், இது அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல். கிவுல் ஓயா திட்டம், குறிப்பிட்ட ஓர் இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதாக அல்ல, தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சி மற்றும் நீர்வள முகாமைத் துவத்தை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டம். இந்த ஆட்சியின் கீழ் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எந்தவிதமான இடமும் இல்லை. அனைத்து மக்களையும் சமமாகக் கருதும் கொள்கையுடனேயே அரசாங்கம் செயல்படுகிறது. தமிழ் மக்களின் நில உரிமைகளும், சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், எந்த ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் உரையில் உறுதியளித்தார். சட்டத்துக்கு முரணான நில கையகப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறாது என்றும், திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழேயே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு ஜே.வி.பி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் உரையாடுவதன் அடிப்படைகளை புரிந்து கொள்வது அவசியமானது.

முதலாவது தமிழ் மக்களின் நிலங்கள் மீது நிகழ்த்தப்படும் ஆக்கிரமிப்புகளை கூறித்தான் தெரியவேண்டியதில்லை. 1953 ஆம் ஆண்டிலிருந்து சமகாலம்(2026) வரையும் தமிழர்களுடைய பாரம்பரியக் குடியிருப்புகள் மீது தென் இலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொண்ட குடியேற்றங்களும் குடியேற்ற திட்டங்களும் ஆக்கிரமிப்புகளும் நிகழ்ந்தவை என பல பட்டியல்கள் உண்டு. அவை அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டுமிருக்கிறது. 1953 ஆண்டில் கல்லேயா குடியேற்றத் திட்டம் விவசாய குடியேற்றமாக தொடக்கப்பட்டு பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் தமிழ்-சிங்கள கலவரத்தின் பெயரால் கொல்லப்பட்டும் அடித்தும் துரத்தப்பட்ட வரலாறு புரிந்து கொள்ளப்பட வேண்டும். அவ்வாறே தனித்தமிழ் மாவட்டமாக விளங்கிய திருவோணமலை விவசாய குடியேற்றங்களும், கைத்தொழில் குடியேற்றங்களும், மீன்பிடிக் குடியேற்றங்கள், மற்றும் வறுமை ஒழிப்புக் குடியேற்ற திட்டங்களும் என்ற அடிப்படையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். இத்தகைய உபாயங்கள் மூலம் திருகோணமலை மாவட்டம் இன கலப்புள்ள மாவட்டமாகவும் தமிழ் மக்கள் சிறுபான்மையினராகவும் மாற்றப்பட்டு இருக்கும் மாவட்டமாக காணப்படுகிறது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதே விடயம் மணலாறு என்று அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் பாரம்பரிய குடியிருப்பாக காணப்பட்ட பிரதேசங்களில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எல் வலையத்தின் விஸ்தரிப்பின் ஊடாக சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு தமிழ் மக்களுடைய பாரம்பரிய நிலம் (தென்னமரவாடி, கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, குமுழமுனை) ஆக்கிரமிக்கப்பட்ட வரலாறு புரிந்து கொள்ளப்பட வேண்டும். அவ்வாறே சிங்கள மக்களை நோக்கி முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா எல்லைகளை நோக்கி நீங்கள் (சிங்கள மக்கள்) நகரவில்லையெனில் எல்லைகள் உங்களை நோக்கி நகரும் என்று தெரிவித்திருந்தமை கவனத்திற்குரிய விடயம் மட்டுமல்ல, அதன் விளைவுகளையும் தமிழ் மக்கள் நன்கு அறிவர்.

இரண்டாவது மதச் சின்னங்களை வடக்கு கிழக்கு நகர்த்தி விட்டு அதனை அடிப்படையாகக் கொண்டு குடியேற்றங்களையும் ஆக்கிரமிப்புகளையும் தென்னிலங்கை அரசாங்கங்கள் மேற்கொண்டு வருகின்ற வரலாற்றை கடந்த காலங்களில் கண்டு கொள்ளாவிட்டாலும் பறவாயில்லை சமகாலத்தில் தெரிந்து கொள்ளாதவர்களாக ஆட்சியாளர்கள் காணப்படுகிறார்கள் என்பது வினோதமான அரசியலாகவே தெரிகின்றது. குறிப்பாக குருந்தூர் மலை விவகாரம், நீராவியடி பிள்ளயார் கோவில் விவகாரம், வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய விவகாரம், தையிட்டி விகாரை விடயம் மற்றும் கைதடி விகாரை விவகாரம் போன்ற பல தமிழர் பிரதேசங்களில் விகாரைகளை அமைத்துவிட்டு அதனை சூழவிருக்கும் பிரதேசங்களை ஆக்கிரமித்து சிங்கள மக்களை குடியமர்த்தி ஆக்கிரமிப்பு செய்முறை ஒன்றை ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். எவ்வாறு கல்லோயாவில் குடியேற்றத் திட்டம் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்காவால் மேற்கொள்ளப்பட்டதோ அதே பாணியில் வடக்கு கிழக்கை நோக்கி சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்கிறது. கடந்தகால அரசாங்கங்கள் மேற்கொண்டது வரலாற்று தவறென தேர்தல் காலங்களில் பிரச்சாரம் செய்த ஜே.வி.பி.இன் ஜனாதிபதியும் அமைச்சர்களும் தற்போது அதனையே மேற்கொள்கின்றனர். ஆனால் மேடைகளிலும் உறைகளிலும் ஆக்கிரமிப்புக்கள், இன,மத அரசியல் அணுகுமுறைகள் எதுவும் இலங்கை தீவில் இல்லை என்பது போல் காட்ட முயலுகின்றனர். இது ஓர் அபத்தமான அரசியலின் வடிவமாக தெரிகிறது. இதுவே இலங்கைத் தீவின் இடதுசாரிகளின் அரசியல் வடிவமாகும்.

மூன்றாவது கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு மீதான ஆக்கிரமிப்பை தென்னிலங்கை மேற்கொண்ட உத்திகளை ஈழத்தமிழர்கள் நன்கு அறிவார்கள். தமிழர் பிரதேசங்கள் வாழ்விடங்கள் அபிவிருத்திக் குடியேற்றங்கள் என்ற அடிப்படைமயிலேயே ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அதனாலேயே ஈழத்தமிழர்கள் குடியேற்றங்களுக்கும் அபிவிருத்திக்குமான தொடர்பிலான அச்சங்களையும் சந்தேகங்களையும் முன்னெடுத்துகின்றனர். அதனை நிராகரித்து விட்டு தமிழர் மக்கள் செயல்பட முடியாது. தமிழ் அரசியல் கட்சிகள் முன்னெடுக்கின்ற போராட்டங்களில் அடிப்படைகளும் அதுவாகவே உள்ளன. அவர்கள் கட்சி நலங்களுக்காகவும் தனிப்பட்ட நலன்களுக்காகவும் மேற்கொண்டாலும் அதன் அடிப்படை சரியானதாகவே உள்ளது. தென் இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் ஆக்கிரமிப்பின் வடிவமாகவே காணப்படுகிறது இதனை விளங்கிக் கொள்ளுதல் என்பது இலங்கத்தீவின் அரசியலில் சாதாரணமான விடயம். இது தமிழ் மக்களின் அரசியல் இருப்பை நோக்கிய பாதுகாப்பாகும். கடந்தகால ஆக்கிரமிப்பின் விளைவுகளாலும் படுகொலை செய்யப்பட்டதன் விளைவுகளால் ஏற்படுத்தப்பட்டது என்பதை அரசாங்கம் நிராகரிக்க முடியாது.

எனவே அமைச்சர் குறிப்பிடுவது போல் ஈழத்தமிழருடைய அரசியல் இருப்பு ஒன்றும் ஆரோக்கியமானதாகவும் நியாயமானதாகவும் இல்லை. தமிழர்களின் நில உரிமை தையிட்டி விகாரையில் விடயத்தில் எப்படி பாதுகாக்கப்படுகின்றது என்பது தெரிந்த விடயம். அவ்வாறே தமிழ் மக்களை எப்படி சமமாக ஜே.வி.பி. அரசாங்கம் கருதுகிறது என்பதை போருக்குப் பிந்திய உதவிகளில் தமிழர்கள் கண்டு கொண்டுள்ளனர். ஜே.வி.பி.அரசாங்கத்தின் ஆட்சியின் கீழும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து நிகழ்கிறது. குடியேற்றங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. வாழ்வாதாரங்கள் எதுவும் தமிழ் மக்களின் கைகளில் இல்லாத நிலை உள்ளது. இவ்வகையா அபிவிருத்தி திட்டங்களின் பெயரில் நிகழும் விடயங்களில் மக்கள் எச்சரிக்கை கொள்வதும் எச்சரிக்கையோடு இருப்பதும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதும் தவிர்க்க முடியாதது. இது கல்லோயா குடியேற்;றம் முதல் தையிட்டி விகாரை வரையும் விரிவடைந்துள்ளது. 2009க்கு பின்னான ஆக்கிரமிப்பின் பட்டியல் வேகமாக நீண்டு செல்கிறது.கடந்தகால அரசாங்கங்களின் நீட்சியாகவே ஜே.வி.பி.அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. இது தமிழ் மக்களிடம் எழுந்திருக்கும் அதிர்த்தியான விடயமாகும். வரலாவற்றை மறைத்துவிட்டு அரசியல் செய்வதென்பது இடதுசாரி ஆட்சியாளர்களுக்கு நாகரிகமானதல்ல.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: யாழ் தினக்குரல்)