இந்திய-இலங்கை நட்புறவு பலமானதாக உள்ளது. ஈழத்தமிழர்கள் அத்தகைய உறவின் ஓர் அங்கம் என்பது தவிர்க்க முடியாத புவிசார் அரசியலாகும். அதனை தவிர்க்க முடியாது ஏற்றுக்கொள்ளும் நிலை ஒன்றுக்குள் அவ்வப்போது இந்திய தரப்பு நுழைவதும், பின்னர் பின்வாங்குவதுமாக 2009க்கு பின்னரான அரசியல் விளங்குகிறது. சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தந்திருக்கும் அனுபவங்களுக்குள்ளால் இக்கட்டுரையின் உள்ளடக்கம் வடிவமைக்கப்படுகிறது.
இலங்கையில் அதிகார பரவலாக்கல் செயல்முறையில் ஓர் அங்கமாக இந்தியாவினால் முன்மொழியப்பட்ட மாகாண சபை முறை தேர்தல் தென்னிலங்கை ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவதாகவும், வெறுக்கப்படுவதுமாகவே காணப்படுகிறது. அதேவேளை கடந்த 37 வருடங்களாக இத்தகைய பொறிமுறை ஒன்று ஈழத்தமிழரின் அரசியலையும் திட்டமிட்டு நகர்த்தியுள்ளது. இந்தியா, ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டத்தை முடக்கியதற்கு பின்னால் வலுவான காரணங்களில் ஒன்றாக மாகாண சபை முறையும், 1987ஆம் ஆண்டு இலங்கை இந்தியா உடன்படிக்கையும் காரணமா அமைந்தது. இதனை புரிந்து கொள்ள வேண்டிய தேவை சமகால அரசியலில் காணப்படுகிறது. இதனை விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது, இலங்கைத் தீவில் ஏற்பட்ட பேரிடரை எதிர்கொள்கின்ற விதத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் பிரதானமானதாக அமைந்தது. அதில் அமெரிக்காவின் தனித்துவமான பிரவேசம் ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளையும், அமெரிக்க உதவிக்கான தடை உத்தரவுகளையும் கடந்து, அத்தகைய நடைமுறை சாத்தியமாகியது. ஏன் அவ்வாறு சாத்தியமாகியது என்ற கேள்விக்கு அப்பால், அத்தகைய சாத்தியம் தொடர்பில் இந்தியாவின் மௌனம் மிக நிதானமான அரசியலாக கடத்தப்படுகிறது. சீனாவின் போர்க்கப்பல்களும் கடன் பொருட்களும் இலங்கைத் தீவை மையம் கொள்ளுகின்ற போது, இந்திய எதிர்ப்பு உணர்வு என்பது, கொள்கை வகுப்பாளர்கள் மத்தியிலும்; ஊடகங்கள் சார்ந்தும் மேல் எழுகின்ற மரபு அதீதமாக காணப்படுகிறது. கடந்த காலத்தில் காணப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் விமானங்களின் நுழைவு மற்றும் பலாலி வரையான விஜயம், அதுக்கு பின்னரான அரசியல் இந்தியாவினால் அதிகமாக வெளிப்படுத்தப்படாமலும் அமைதியாகவும் கடந்து செல்லப்பட்டது. அதனுடைய அடிப்படைகள் இந்திய-அமெரிக்க நட்புறவு சார்ந்தது என்று விளங்கிக் கொள்ள முடியாது. மாறாக அமெரிக்க பிரவேசம் என்பது இந்தியாவுக்கும் ரஸ்யாவுக்குமான நெருக்கத்துக்கான பிரதிபலிப்பாக இருந்தாலும், வெளிப்படையாக அத்தகைய மோதல் என்பது இந்திய-அமெரிக்க மோதல் என்பது இவ்வகை நகர்வுகளின் அங்கமாக தெரிகிறது. இதனை அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி இருப்பதோடு, இந்திய-அமெரிக்க மோதல் என்பது பொருளாதார அடிப்படைகளும் இராணுவ ரீதியிலும் முக்கியமானது ஒன்றாக விளங்கிக் கொள்ளப்படுகிறது.
இரண்டாவது, அமெரிக்காவின் பிரவேசம் இந்தியாவைப் பொறுத்தவரையில் கையாளும் திறனை கொண்டது என்பதற்கு அப்பால், புதிய உத்திகளுக்கு ஊடாக அதனை நகர்த்துவது அவசியமானதாக உள்ளது. ஈழத்தமிழர்களை பொருத்தவரை அமெரிக்காவின் நகர்வுகளை விட இந்தியாவின் நகர்வுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக எப்போதும் இருந்திருக்கிறது. அதனால் ஈழத் தமிழர்களின் அரசியலுக்குள் காணப்படும் புவிசார் நெருக்கம் இந்தியாவை அமெரிக்காவின் கொள்கை வகுப்புகளை எதிர்கொள்வதற்கு போதுமானதாக உள்ளது என்று கருதுகிறது. அதனைக் கடந்து அமெரிக்காவின் நகர்வுகள், இந்தியாவின் எல்லைக்கு அப்பால்பட்ட ஒன்றாக இலங்கைத் தீவு தெரிவிக்கக் கூடியது என்பதை கடந்த காலங்களில் நிறுவியிருந்தது. இதற்கான களம் ஒன்றை மீளவும் அமெரிக்கா திறந்திருப்பதாகவே தெரிகிறது. அமெரிக்காவின் பிராந்திய கொள்கைகள் இலங்கைத் தீவின் அவசியத்தை அதிக முதன்மைப்படுத்துவதாக தெரிகின்றது. ஈரான் விவகாரம் இலங்கைத் தீவின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி இருக்கின்ற வாதம் சரியானதாகவே தெரிகின்றது. இதனால் இலங்கைத் தீவின் அமெரிக்க நகர்வுகள் பிராந்திய அரசியலைக் கடந்து, சர்வதேச பரிமாணங்களை அதிகம் கொண்டிருக்கின்றது. இதுவே இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பிரதான நெருக்குவாரமாக தெரிகின்றது.
மூன்றாவது, சீனா-இந்திய உறவின் நெருக்கமானது அமெரிக்காவுக்கு பாரிய சிக்கலையும் நெருக்கடியையும் உருவாக்கி இருக்கின்றது. அதேவேளை இந்தியாவை மையப்படுத்திய சீன மற்றும் ரஷ்ய நகர்வு, அமெரிக்காவினால் அல்லது மேற்குலகத்தினால் சமதூரத்தில் வைத்து அளவீடு செய்யப்படுகிறது. இதுவே இவ்நெருக்கடிக்கு பின்னால் இருக்கும் அடிப்படையானதாகும். இவ்நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா தயாராகி உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் சீனாவின் இலங்கை பிரசன்னத்னை கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக இருப்பது என்பது அமெரிக்காவின் தலையீட்டினால் சுமூகமாக்கப்படும் எனக் கருதுகிறது. இதுவே இந்தியாவின் பிரதானமான அமைதிக்கு இன்னொரு காரணமாக அமைகின்றது. இதனை கருத்தில் கொண்டு ஈழத்தமிழர்கள் உடைய அரசியலை முன்னிறுத்தி மாகாண சபை தேர்தல் மற்றும் அதிகார பரவலாக்கல் செய்முறை போன்ற அம்சங்கள் உரையாடலுக்கு முன் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய முன் கொண்டு வருதல் மூலம் தீர்வற்ற நிலையில் இருக்கும் ஈழத்தமிழர்களின் பக்கங்களை அரசியல் நலனுக்காக பயன்படுத்திவிட்டு நகருகின்ற சூழல் ஒன்றை அமெரிக்காவும் இந்தியாவும் நகர்த்த ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவுகள் ஈழத்தமிழருக்கு ஆரோக்கியமானதாக அமையும் என்பதை விட இந்திய மற்றும் அமெரிக்க நலன்களில் ஒரு இழுபறியையும் அதனுடான வீச்செல்லைகளையும் சாத்தியப்படுத்தக் கூடியதாக அமையும்.
எனவே, ஈழத்தமிழர்களின் அரசியலில் ஏற்பட்டு வரும் புதிய அம்சங்களாக உரையாடப்படும் மாகாண சபை தேர்தல் செய்முறை என்பது புறச்சூழலில் இந்தியா மற்றும் அமெரிக்க நலன்களுக்குள்ளால் பிரவேசத்துக்கு உட்படுத்தப்படும் ஒரு அம்சமாகவே தெரிகின்றது. இலங்கைத்தீவில் அமெரிக்காவினதும் அதன் அணுகுமுறைகள் அதிகம் பெருக்கத்தை அல்லது நேரடி தொடர்பை கையாளுகின்ற விதத்தில் அமைகின்றது. அத்தகைய அணுகுமுறையில் அவற்றை இந்திய தரப்பு முன்வைக்க திட்டமிடுகிறது. இது அதிகாரம் அற்ற மாகாண செய்முறையின் பிரதிபலிப்பாகவே நீடிக்க இருக்கின்றது. அவ்வகை அதிகாரம் அற்ற மாகாண சபையின் தேர்தல் செய்முறை எவ்வகை விளைவை தரக்கூடியது என்பதுவும், குறைந்தபட்சமான மாகாண சபை இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களுடைய அரசியலில் எதுவுமற்ற நிலையை உருவாக்கி இருக்கின்றது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
