April 19, 2026
அரசியல் கட்டுரைகள்

அமெரிக்காவின் இராணுவ அரசியல் உபாயத்திற்குள் இந்தியா சிக்குமா? மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படத்தும் அரசியல்!

ஆசியாவுக்கான நான்கு நாள் விஜயத்தினை மேற்கொண்டு இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ அதிக முக்கியத்துவம் வாய்ந்த உரையாடலை இந்தியாவுடன் மேற்கொண்டுள்ளார். அவரது விஜயம் தொடர்பில் சீன தரப்பின் எச்சரிக்கைகளும் அறிக்கைகளும் அதிக வெறுப்பூட்டும் வார்த்தைகளையும் அவதானிக்க முடிகிறது. அதே அளவான வெறுப்பூட்டும் உரையாடலை வெளிப்படுத்திய அமெரிக்கத் தரப்பின் நடவடிக்கைகளையும் மறுக்க முடியாது. பரஸ்பரம் இரு வல்லரசுகளும் தமக்குள் மோதுதல் என்பது தென்னாசிய நாடுகளை மையப்படுத்தியது என்பதுடன் இரு நாடுகளுமே இந்து சமுத்திர நாடுகள் அல்லாதவை என்பதுவும் குறிப்பிட்டாக வேண்டிய விடயமாகும். இரு தரப்பின் நலன்களுக்காக பிராந்திய அரசியல் உறுதிப்பாடு மோதலுக்குரியதாக அமைகிறதைக் காணமுடிகிறது. அதனடிப்படையில் இந்தியா அமெரிக்காவை மையப்படுத்திய அணிக்குள் முழுமையாக மூழ்கடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதா என்பதை தேடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது.

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்பு இந்திய அமெரிக்க நெருக்கம் அதிகமானதாகவே அமைந்துவருகிறது. சோவியத் யூனியனின் வீழ்ச்சியை அடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியும் பின்பவான வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கமும் ஓரளவு தனித்துவத்தை கடைப்பிடிக்க முயன்றன. ஆனால் மோடி அரசாங்கம் முழுமையாக அமெரிக்கா பக்கம் சாய திட்டமிட்டது. அதற்கு ஏற்ற வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உம் இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போக்கினை வெளிப்படுத்தினார். அதனூடாக இஸ்ரேல்-இந்திய நெருக்கமும் வளர்ந்தது. குறிப்பாக 2+2 உரையாடலை ஆரம்பித்து இந்திய-அமெரிக்க நெருக்கத்தினை வலிமையானதாக மாற்றிக் கொண்டன இரு நாடுகளும்.

அதன் பிரகாரம் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எக்ஸ்பர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மைக்கல் பாம்பியோ ஆகியோர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராம்நாத் சிங் ஆகியோர் 2+2 இன்(27.10.2020) மூன்றாவது ஆண்டில் சந்திப்பினை மேற்கொண்டுள்ளனர். இதன் பிரதான நோக்கம் இரு நாடுகளுக்குமான உலகளாவிய மூலோபாயத்தினை விருத்தி செய்வதுடன் செழிப்பையும் உறுதிப்பாட்டையும் இரு தரப்பினரிடையே ஏற்படுத்துதலாகும். இரு நாடுகளின் அமைச்சுக்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையானது BECA (Basic Exchange and Cooperation on geospatial Agreement) என்பதாகும். இதன்படி இரு நாடுகளுக்குமான பாதுகாப்பு விடயங்களில் அதிக நெருக்கத்தினை உருவாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் புவிசார் இராணுவ ஒத்துழைப்பினை உருவாக்கும் விதத்தில் இரு நாடுகளும் தமக்கிடையான புவிசார் தகவல்களை முன்னோடியாக பரிமாற்றிக் கொள்வதோடு ட்ரோன்கள் (MQ-9B) மூலமாக மேற்கொள்ளத திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை திசைதிருப்பும் முக்கியமான செயற்கைக்கோள் தரவை பகிர்ந்து கொள்ளவும் உடன்பட்டுள்ளன. இந்த வகை ரோன்களை அமெரிக்கா தனது விமானப்படையில் சேர்த்துள்ளதுடன் 2001 இல் கண்டறியப்பட்டு 2007 இல் பாவனைக்குள் ஈடுபடுதட்தியது. இது ஆளில்லாத வான்வழி போர் ஆயுதமாகவே குறிப்பிடப்படுகிறது. இது பற்றி ஆய்வாளர் ஜாக் கல்லன் போர்க் குறிப்பிடும் போது அழிவின் ஆயுதம் எனவும் அமெரிக்க விமானப்படையின் தடுப்பு சுவர் எனவும் வெளிப்படுத்துகிறார். இதனையே இரு நாடுகளும் பரிமாறுவதுடன் கடல் தரை ஆகாயம் ஆகிய மூன்று பகுதியிலும் பிரயோகிப்பதுடன் லடாக் பகுதி முதல் தென் சீனக்கடல் வரையான பகுதிகளில் பெறப்படும் புலனாய்வுத் தகவல்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்வதாக உடன்படிக்கையில் எட்டப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இரு நாடுகளுக்குமான பாதுகாப்பு புலனாய்வு முகவர்கள் தகவல்களை பரிமாற்றிக் கொள்ளும் உடன்பாடட்டினை ஏற்கனவே பின்பற்றி வருகின்றன.

இரு நாட்டுக்குமான 2+2 உரையாடலானது அதிக முக்கியத்துவத்தினை பாதுகாப்பு விடயங்களுக்கு வழங்குகிறது. தற்போதைய உடன்படிக்கையானது பாரியளவான இராணுவ முக்கியத்துவத்தை கொண்டதாகும். அண்மையில் இந்தியா பரிசோதித்த ஏவுகணைகளும் ஒலியை விட வேகமான ஏவுகணையின உருவாக்கமும் இராணுவ ரீதியில் இந்தியாவைப் பலப்படுத்துவதாக தெரிகிறது. அதற்கு மேலும் வலுவளிக்கும் விதத்தில் அமெரிக்காவுடனான உடன்படிக்கை அமைந்துள்ளது. இவ்வாறு இந்தியாவின் ஆயுத தளபாடப் பெருக்கமானது பிராந்திய ரீதியில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் அதிகமானவை.

ஒன்று, சீனாவுடன் ஒரு போருக்கு போகும் எண்ணத்துடனேயே இந்தியா நகர்கிறது. காரணம் 1962இலும் இவ்வகையான ஒரு உத்தியினாலேயே சீன-இந்திய போர் ஏற்பட்டது. அது இரு நாட்டுக்குமான நிரந்தர பகையாக அமைந்ததுடன் தீர்வற்ற பிரச்சினைக்கு காரணமாகவும் மாறியது. ஆனால் போரைத் தூண்டிய தரப்பு தனது பொருளாதார இலாபத்தினை அடையும் விதத்தில் சீனாவுடன் மிக நீண்ட நட்புறவை ஏற்படுத்திக் கொண்டது. அதே உத்தியை மீண்டும் இந்தியா பக்கம் இருந்து கொண்டு செயல்படுத்த முனைகிறது. எனவே சீன-இந்திய போருக்கான புறச்சூழல் உருவாகிவருகிறது. அதனை அமெரிக்கா ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுவருகிறது.

இரண்டு, இந்தியாவின் ஆயுததளபாட வளர்ச்சியானது எதிர்காலத்தில் பிராந்திய ரீதியில் அபாயமானதாக அமையவாய்ப்புள்ளது. காரணம் ஏற்கனவே இந்தியாவின் மேலாதிக்கத்திற்குள்ளேயே சிறிய தென்னாசிய நாடுகள் அகப்பட்டுள்ளதென்ற நிலையானது நீடிக்கவும் அதற்குள் கட்டுப்பட்டு போவதும் தவிர்க்க முடியாததாக அமைய வாய்ப்புள்ளது. இந்தியாவின் இராணுவ வலிமை இலகுவில் இப்பிராந்தியத்தை கட்டுப்படுத்தவும் செல்வாக்குச் செலுத்தவும் தவறும் பட்சத்தில் ஆதிக்கம் செய்யவும் தயாராகும் போக்கு காணப்படும்.

மூன்றாவது, இந்தியாவின் அணுகுமுறை இறுக்கமடைய அல்லது இந்திய -அமெரிக்க கூட்டு பிராந்திய நாடுகளை கட்டுப்படுத்த முனையும் போது சீனா பக்கம் சாய்வது தவிர்க்க முடியாததாக அமைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே அநேக தென்னாசிய நாடுகள் சீனாவுடன் நெருக்கமான பொருளாதார இராணுவ உறவைக் கொண்டுள்ளன. அத்தகைய போக்கானது மேலும் நீடிக்க வாய்ப்பு அதிகரிக்கும்.

நான்காவது, அமெரிக்காவின் சந்தையாக இந்தியா மாறுவதுடன் இந்தியாவின் படிப்படியான வளர்ச்சியை விட வீக்கத்தினை நோக்கி நகரும் நிலையொன்று ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவின் நிதானப் போக்கினை உடைத்து எதிர்கால இந்தியாவை தகர்ப்பதாக அமையும். இன, மத, வர்க்க, சாதி, பிரதேச வேறுபாடுகளை உள்ளடக்கிய இந்தியா வெகு வேகமாக இருப்பினை இழக்கும் நிலைக்கு போகும் அல்லது பலவீனமடையும்.

ஐந்து, இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பது மட்டுமல்ல காந்தி தேசம் என்று நிலை அனைத்தும் தகர்ந்து போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. இது மேலும் ஒரு வலுவான மத்தியரசைக் கட்டமைக்க வாய்ப்பு உள்ளது போல் மாநிலங்கள் மீதான ஆதிக்கம் அதிகரிக்கவும் காஷ்மீர் மாநிலத்திற்கு ஏற்பட்ட நிலை போன்று வேறு மாநிலங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இது இந்திய ஐக்கியத்திற்கு எத்தகைய சூழலை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்க-இந்திய உறவு தொடர்பில் இந்து பத்திரிகை தீட்டிய ஆசிரியர் தலைப்பில் குறிப்பிட்ட விடயம் கவனத்திற்குரியது. அதாவது ‘அமெரிக்க வலையில் இந்தியா சிக்கிவிக் கூடாது’ எனும் தலைப்பில் இந்தியா இதுவரை காலமும் இராணுவ ரீதியிலான பாதையை சுதந்திரமாகவே வகுத்துள்ளது. அமெரிக்க தேர்தல் அண்மிக்கும் வேளையில் பாம்பியோவின் வார்த்தைகள் வெற்றுக் கூச்சல்களாகக் கூட அமையலாம். எனினும் இந்தோ-பசுபிக் விவகாரத்திற்குள் இந்தியாவை கொண்டுவரும் ஆர்வத்தையும் இந்திய சீன நெருக்கடிக்குள் ட்குவாட் (QUAD) நாடுகளை பங்கெடுக்கச் செய்யும் ஆர்வத்தையும் பாம்பியோவின் பேச்சு உணர்த்துகிறது. இந்திய அரசு இத்தகைய இது போன்ற யோசனைகளை புறந்தள்ளியிருகிறது. அத்தகைய நிலைப்பாட்டிலிருந்து தற்போது எப்படி மாறினாலும் அது நன்மை தரும் விடயமாக அமையாது. குவாட் நாடுகளின் உறவை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஆனால் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்குள் சிக்கிவிடக் கூடாது. என குறிப்பிட்டுள்ளது.

எனவே இந்தியாவின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம் புவிசார் ரீதியில் அதிக ஆபத்தான முடிபை இந்தியாவுக்கும் பிராந்தியத்திற்கும் ஏற்படுத்தும். அதனை நோக்கியே இந்தியா பயணிக்கிறது. சுதந்திரத்திலிருந்து சோவியத் யூனியனிடமிருந்தும் பின்பு ரஷ்சியாவிடமிருந்தும் இராணுவ மற்றும் ஆயுத தளபாடங்களை கொள்வனவு செய்த இந்தியா தற்போது மேற்கு நாடுகளிடம் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளமை அமெரிக்கா உகட்பட மேற்குலகை விட இந்தியாவுக்கே அபாயமானதாக அமைய வாய்ப்புள்ளது.

-கலாநிதி- கே.ரீ.கணேசலிங்கம்-