April 21, 2026
அரசியல் கட்டுரைகள்

மாலைதீவு -இந்திய இராணுவ உடன்படிக்கை தென்னாசியப் பிராந்தியப் போட்டிக்கு வழிவகுக்குமா?

இந்தியாவின் பிராந்தியம்சார் கொள்கை பற்றிய உரையாடலாகவே சகார் (Sager -Security and growth for all in the region) திட்டம் காணப்படுகிறது. அதாவது பிராந்திய நாடுகளுக்கான பாதுகாப்பில் முதன்மை என்ற கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் பின்பற்றிவருகிறது. ஜவர்லால் நேரு காலத்திலிருந்து இந்தியாவுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் உறவும் பகைமையும் மாறி மாறி இயங்கியதைக் காணமுடிந்தது. இதில் பிராந்திய நாடுகளது இறைமையை மீறும் வகையில் இந்திரா காந்தியும் அவரது மகன் ராஜீவ் காந்தியும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்ததை காணமுடிந்தது. குறிப்பாக பாகிஸ்தானிலிருந்து வங்களாதேஷ் பிரிவதற்கும் இலங்கை தீவு மற்றும் மாலை தீவு மீதான படையெடுப்புக்களும் என அவர்கள் இருவரது ஆட்சிக் காலத்திலும் நிகழ்ந்து முடிந்தன. அத்தகைய நடவடிக்கைகள் இந்தியா மீது அதிக விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா அது போன்ற நகர்வாக தற்போது மேற்கொள்ளாது விட்டாலும் அண்மையில் மாலைதீவுடனான உடன்படிக்கை இந்தியா பொறுத்த நகர்வின் முக்கியத்துவத்தை மீளவும் நினைவூட்டுவதாக தெரிகிறது. இக்கட்டுரையும் மாலைதீவுடனான இந்தியாவின் உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்வதாக அமையவுள்ளது.

கடந்த மாதம் (21.02.2021) இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் மாலைதீவு பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் 30 வருட  எல்லையைக் கொண்டதுடன் இந்தியப் படைகள் மாலைதீவில் தங்கியிருக்கவும் ஆயுதங்களுடன் நடமாடவும் மாலைதீவு படையினரை பலப்படுத்தவும் பராமரிக்கவும் முடியும் என உடன்பட்டுள்ளன. இந்தியப் படைகளின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் சுதந்திரமாக நடமாடவும் கடல் கண்காணிப்பில் ஈடுபடவும் முடியும் எனக் குறிப்பிட்டதுடன் மாலைதீவுக்கு சொந்தமான உருதுதலபல்கு தீவையும் இந்திய இராணுவ நடவடிக்கைக்காக வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இதில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மாலைதீவு பாதுகாப்புத் துறை அமைச்சர் உசா மரியா அகமட் கைச்சாத்திட்டுள்ளனர். அத்துடன் 50 மில்லியன் அ.டொ. இந்தியா மாலைதீவுக்கு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இதனூடாக இந்தியா பிராந்தியரீதியில் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்த முனைகின்றதை அவதானிக்க முடியும்.

முதலாவது, சீனாவின் செல்வாக்கினை இப்பிராந்தியத்தில் முற்றாக பலவீனப்படுத்த முனைப்புகளை இந்தியா முன்னிறுத்த விரும்புகிறது. மிக நீண்ட காலம் மாலைதீவுடன் இந்தியாவுக்கும் இருந்த இழுபறியானது தற்போது இந்தியா பக்கம் சாய்ந்துள்ளது. அப்துல்லா யாமீனுக்கு பின்பு ஜனாதிபதியான இப்ராகிம் மொகமட் சோலிஹ் இந்தியாவுடனான நெருக்கத்தினை அதிகரித்துள்ளார். இதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முனையும் இந்தியாவானது சீனாவுக்கும் மாலைதீவுக்குமான இராணுவ நெருக்கத்தினை இல்லாது ஒழிக்க முயலுகின்றதைக் காணமுடிகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டே இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாட்டை இந்தியா மாலைதீவுடன் ஏற்படுத்த விளைந்துள்ளது.

இரண்டாவது, இந்து சமுத்திரப் பிராந்தியம் இந்தியாவினது ஆதிக்கம் சரிவடைந்து சீனாவின் செல்வாக்கு வளர்ந்துள்ளது.குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை, வங்களாதேஷ், மியான்மார் ஆகிய தென்னாசிய பிராந்திய நாடுகளின் துறைமுகங்கள் சீனாவின் 99 வருட கட்டுப்பாட்டில் உள்ளன. அதிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் துறைமுகங்கள் சீனாவிற்கு குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் கணிசமான சீனாவின் செல்வாக்குப் பகுதியாக மாலைதீவு காணப்படுகிறது. இதனால் இந்து சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பினை ஏற்படுத்த வேண்டிய நிலைக்குள் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அதற்கமைவாக கடந்த பல ஆண்டுகளாக இலங்கை இந்தியா மாலைதீவு என்பன இணைந்து இந்திசமுத்திர பாதுகாப்பு மகாநாட்டை நிகழ்த்தி வருகிறது. அதற்கான பிராந்திய மகாநாடு இலங்கையில் 2020இல் நிகழ்ந்துள்ளதுடன் அதற்காகவே இந்திய தேசிய ஆலோசகர் அஜித் டோவால் இலங்கை வருகை தந்திருந்தார். மேற்குறித்த நாடுகள் மட்டுமன்றி சிசில் தீவு மற்றும் மொறிசியஸ் ஆகிய நாடுகளை இணைத்து பயணிப்பதாக முடிவானது. எனவே இந்து சமுத்திரம் சார்ந்த பிணக்காகவே தெரிகிறது. இந்தியா மாலைதீவு உறவானது தனித்து இந்தியா சார்ந்தது ஒன்றல்ல. இந்து சமுத்திரம் சார்ந்ததாகவே அமைந்துள்ளது.

மூன்றாவது, மாலைதீவின் அமைவிடம் இந்தியாவின் பாதுகாப்பு எல்லைக்குள் அமைந்துள்ளது. இலங்கையும் மாலைதீவும் இந்தியாவின் பாதுகாப்புக்குரிய எல்லைக்குள்ளேயே காணப்படுவதனால் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இரு நாடுகளது கடல் பகுதிகளும் இந்தியாவுக்கான பாதுகாப்பினை தரவல்லனவாக அமையப் பெற்றுள்ளன. அதனால் அத்தகைய கடல்சார் பிரதேசத்தின் மீது செல்வாக்கினை கொண்டிருக்க இந்தியா முயலுகிறது. குறிப்பாக இலங்கையின் கடல் பிரதேசத்தின் மீதான செல்வாக்கினை அதிகரிக்க இந்தியா பல தடவை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக தற்போது இந்திய மீனவர்கள் தொடர்பில் இலங்கை ஒர் ஒப்பந்த அடிப்படையில் செயல்படப் போவதாக இலங்கை அரசாங்கத்துடன் உத்தியோகப்பற்ற்ற நகர்வுகள் நிகழ்வதாக தெரியவருகிறது. அது தொடர்பிலான செய்திகள் வெளியாகியமையும் பின்பு மறுக்கப்படுவதுமாக ஊடகப்பரப்பும் அமைச்சர்களும் காணப்படுகின்றனர். எது எவ்வாறாயினும் ஜெனீவாவுக்கு பின்னான இலங்கை -இந்திய நகர்வுகளில் ஒர் இராஜீக வெற்றிடம் சரிசெய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் நிகழ்வதாகவே தெரிகிறது.

நான்காவது, இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தில் இந்து சமுத்திரத்தில் முக்கிய நாடாக விளங்கும் இந்தியாவினது அணுகுமுறை பிராந்திய நாடுகளுடனான உறவினை வலுவடைய முயல்வது தெரிகிறது. இந்தோ-பசுபிக்ன் விஸ்தரிப்புக்கான அணுகுமுறையை அமெரிக்காவும் ஏனைய பசுபிக் நாடுகளும் பசுபிக் பிராந்தியத்தில் ஆரம்பித்துள்ளன. அதனை மையப்படுத்தி செயல்பட முனைந்துள்ள இந்தியா, இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளை இணைப்பதில் கவனம் கொள்கிறது. இன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ 2020இல் தென்னாசியப் பிராந்தியத்திற்கு விஜயம் செய்த போதும் இலங்கை மாலைதீவை முதன்மைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே இந்தோ-பசுபிக் தந்திரோபாய வலையத்திற்குள் இலங்கையும் மாலைதீவும் பிரதான நாடுகளாக அமைந்துள்ளன. இரு நாடுகளும் தீவகள் என்பதுடன் இந்துசமுத்திரத்தின் அலைகளால் சூழப்பட்ட நாடுகள் என்ற வகையில் முக்கியத்துவம் அதிகமுள்ள நாடுகளாக விளங்குகின்றன.

ஐந்தாவது டோபன் (அவுஸ்ரேலியா) டியாகொகார்சியா மாலி மற்றும் கொச்சித் துறைமுகங்களுக்கிடையிலான கடற்படைப் போக்குவரத்தையும் ரோந்து நகர்வுகளையும் இதன் மூலம் ஏற்படுத்த இந்தோ-பசுபிக் நாடுகள் முனைகின்றன. அதில் இந்தியா பிரதான பங்கெடுப்பினை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. இதில் ஓரங்கமாகவே திருகோணமலைத் துறைமுகத்தை எம்.சி.சி உடன்பாட்டின் மூலம் இணைக்க அமெரிக்காவும் முயன்றது. அத்தகைய நடவடிக்கை எம்.சி.சி இரத்தானதால் கிடப்பில் போடப்பட்டாலும் வேறு அரசாங்கம் இலங்கையில் ஆட்சிக்கு வரும் போது அதற்கான நகர்வை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட வாய்ப்பு அதிகமுள்ளது.

எனவே, மாலைதீவு இந்திய இராணுவ உறவானது தெற்காசிய நாடுகள் தொடர்பில் இந்தியா கொண்டுள்ள கொள்கையாகவே தெரிகிறது. இந்தியாவின் சகார் திட்டத்தின் பிரதான நோக்கம் பாதுகாப்புச் சார்ந்து பிராந்திய நாடுகளுடன் நெருக்கமான உறவைப் ஏற்படுத்துவதாகும். அதில் இந்து சமுத்திரப் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசுபிக் பாதுகாப்பு என்பன பிரதான இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் இத்தகைய நகர்வுகள் அனைத்தும் சீனாவின் அணுகுமுறையிலேயே தங்கியுள்ளது தெரிகிறது. ஆனால் மாலைதீவுடனான உடன்பாடு இந்தியாவுக்கு பிராந்திய வலுவைக் கொடுத்தாலும் தென்னாசிய நாடுகளின் ஆட்சியாளர்கள் சீனா இந்தியா என்கின்ற பூகோளப் போட்டியை தந்திரோபாயமாகவே பயன்படுத்திக் கொள்ளும் சூழல் வலுவடைந்துள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)