தமிழ் தேசிய பேரவையின் தமிழ் நாட்டு விஜயம் தொடர்பில் ஏற்படுத்திய விளைவுகளைப் பற்றிய தேடல்களும் அது தொடர்பிலான மதிப்பீடுகளும் பொதுத்தளத்தில் அதிகம் பேசப்படுகிறது. அடிப்படையில் அத்தகைய மதிப்பீடுகள் பிரதானமாக கடந்த கால வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களை அதிகம் மையப்படுத்தி மதிப்பீடு செய்யப்படுகிறது. இன்னொன்று தமிழ் நாட்டில் அதிகார வரம்பு ஈழத்தமிழர் விடையத்தில் எவ்வகையான பங்களிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றியும் விவாதம் நிலவுகிறது. மூன்றாவது இந்திய மத்திய அரசின் அதிகாரம் பற்றி அதாவது அரைகுறை சமஷ்டியைக் கொண்டுள்ள இந்தியாவிடம் முழுமையான சமஷ்டியை கோருவது நியாயமானதல்ல என்பதைப் பற்றியும் விவாதங்கள் உண்டு. இக்கட்டுரையும் பொதுத்தளத்தில் முன்வைக்கப்படும் விவாதங்களின் பிரதிபலிப்புகளையும் அதன் உண்மைத்தன்மையையும் தேட முயலுகிறது.
முதலாவது ஈழத்தமிழர் அரசியல் 2009க்கு பின்னர் எல்லையற்ற நெருக்கடியைக் கொண்டதாக காணப்படுகிறது. இந்த அடிப்படையில் நோக்கும் போது புலத்தின் அரசியல் காணாமல் போயுள்ளதாகதே தெரிகிறது. புலம்பெயர்ந்த தளத்திலும் பலமிழந்துள்ளதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. 2009ல் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட முடிவு 2015க்கு பின்னர் மிதவாத அரசியல் ஏற்பட்ட தோல்வி ஈழத்தமிழரது அரசியல் இலக்கை இல்லாமல் முற்றாகவே முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அவ்வப்போது சிறிய முனைப்புகள் தோன்றுவதும் பின்னர் அது காணாமல் போவதும் நிகழ்வாகவே கடந்து செல்கிறது. இது ஈழத்தமிழரது அரசியலின் கையறு நிலையை அடையாளப்படுத்துகிறது. ஈழத்தமிழர் அரசியல் எழுச்சி பெற முடியாத சூழலுக்குள் விடுதலைப்புலிகளின் 2009 முடிவு தோற்றுவித்திருந்தது. அரசியல் தலைமைகளாக, சிவில் அமைப்புகளாக, பலமான தேசிய அரசியல் கட்சிகளாக அமுக்க குழுக்களாக எழுச்சி பெற முடியாத நிலை நிலவுகிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக உள்நாட்டிலுள்ள அனைத்துக் கட்டமைப்புக்களும் சிதைந்து சீரழிந்து போயுள்ளன. ஈழத்தமிழர் எதனை ஆதாரமாகக் கொண்டு எழுவதென்பது பிராதான கேள்வியாகவே தொடர்கிறது. நம்பிக்கை இன்மையும், தோல்வி மனோநிலையும், பாதுகாப்பற்ற சூழலும் அதீதமாக வளர்ந்துள்ளது. இத்தகைய நிலையிலிருந்து மீள்வதற்கு ஒரு தேசிய இனத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியமானது. ஈழத்தமிழரது ஆதரவுக்குரிய அயலவராக தமிழக மக்களது உறவே பலமானதாக உள்ளது. ஒரு தேசிய இனத்தின் இருப்பும் பலமும் அதன் நட்புறவிலே தங்கியுள்ளது. ஈழத்தமிழ் அகதிகளான போது புகழிடமாகவும், ஆயுதப் போராட்டத்தின் பின்தளமாகவும் தமிழகவே காணப்பட்டது. அப்போது ஈழத்தமிழரது இருப்பும் பாதுகாப்பும் பலமானதாக அமைந்திருந்தது. அயலுறவின் பலமே ஈழத்தமிழரின் பலமாக புரிந்து கொள்ளப்பட்ட வேண்டும். அவ்வாறு இல்லாத ஈழத்தமிழர் கடந்த 17 ஆண்டுகளில் எதனையும் சாதிக்க முடியவில்லை என்ற அனுபவம் தவிர்க்க முடியாததாக காணப்பட்டது மட்டுமன்றி அனைத்தையும் இழந்தவர்களாகவே உள்ளனர். இதுவே தமிழகத்துடனான ஈழத்தமிழரின் அரசியல் நெருக்கத்துக்கான அடிப்படை தகுதியாகும். அதனையே தமிழ் தேசியப் பேரவை முன்வைத்துள்ளது.
இரண்டாவது உளவியல் ரீதியில் ஈழத்தமிழர்கள் தனித்துவிடப்பட்டனர் என்ற அடிப்படையில் அவர்கள் மீதான பண்பாட்டு சிதைவும், பொருளாதாரம் மற்றும் அரசியல் பலவீனத்திற்கும் வழிவகுத்தது. இது ஈழத்தமிழர் மீது எந்த சக்திகளும் தலையீடு செய்ய முடியும் என்ற தோற்றப்பட்டை ஏற்படுத்தியது. இதிலிருந்து பாதுகாப்பாக புலத்தை வைத்துக் கொள்ளவும் தமிழர் அரசியல் அபிலாசைகளை ஒன்றிணைக்கவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சக்திகள் அவசியமானவை. குடும்ப அலகைப் போன்றே ஈழத்தமிழர்கள் தனித்து விடப்பட்ட தேசிய இனமான உணர்வு ஏற்படுகின்ற போது அதற்கான ஒத்துழைப்பையும் நட்புறவுகளையும் உருவாக்க வேண்டிய தேவைப்பாடு உண்டு. தமிழகத்துக்கும் ஈழத்தமிழருக்குமான உறவு 2009 க்கு பின்னான காலப்பகுதியில் கட்டமைத்திருக்கப்பட வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய அரசியல் கட்சிகளிடம் காணப்பட்டது. ஆனால் அதனை அவர்கள் செயல்படுத்த தவறியிருந்தனர். தற்போது காலதாமதமானாலும் தமிழ்த் தேசியப் பேரவை தமிழகத்துடனான உறவை புரிதலோடு மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பது ஆரோக்கியமான அரசியல் இருப்பை ஈழத்தமிழருக்கு ஏற்படுத்தக் கூடியது. ஈழத்தமிழர்கள் தமது இருப்பை பாதுகாப்பதற்கு நட்புக்களையும் அயல் உறவுகளையும் பலப்படுத்துவது அவசியமானது.
மூன்றாவது இந்திய மத்திய அரசு பலவீனமான கூட்டாட்சியை கொண்டிருக்கின்றது என்பதற்காகவும் அரைச்சமஷ்டியை கொண்டிருப்பதானாலும் அதனிடம் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைப்பது நியாயமற்றது என்று விவாதிக்கப்படுகிறது. ஆனால் அடிப்படையில் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு சமஷ்டியை தந்துவிடாது என்பதையும் அது தனது நலனுக்கு உட்பட்ட விதத்தில் மட்டுமே ஈழத்தமிழரது அரசியலை தீர்மானிக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தமிழர் தமது கோரிக்கைகளை உலகத்தின் முன் நிறுத்துவதற்கு தமிழகமும் இந்திய மத்திய அரசும் தேவையான ஒன்றாக உள்ளது. தமிழகத்தின் பெரும் மக்கள் திரள் அரசியல் ஆதரவாக இருப்பது என்பது ஈழத் தமிழர் மீதான பிற சக்திகளின் ஆதிக்கத்தை தடுக்க வழி வகுக்கும். தமிழ்த் தேசியப் பேரவையின் தமிழக விஜயம் ஈழத்தமிழருக்கு சமஷ்டியையும் தனி தேசத்தையும் அமைத்துக் கொடுப்பதற்காக அல்ல. அது தமிழ்த் தேசிய பேரவைக்கும் நன்கு தெரியும். ஆனால் இத்தகைய இராஜீக உறவுகளுக்கூடாகவே ஒரு பலமான நட்பினைக் கட்டிவளர்த்துக் கொள்வதன் மூலம் புலத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதுவே இனத்தின் பலத்தை பலப்படுத்தாக அமையும். தமிழகத்தின் அதிகார எல்லை என்பது எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் இருந்தே ஈழத்தமிழருக்கு நன்கு புரிந்திருக்கும். அந்த எல்லைக்குள்ளே தான் இந்திய மாநிலங்கள் காணப்படுகின்றன. ஆனால் தமிழக மக்களின் திரட்சியும் ஒத்துழைப்பும் பரஸ்பரம் புரிந்துணர்வும் ஈழத்தமிழரை அவர்களது இருப்பை உத்தரவாதப்படுத்தக் கூடியது என்பது 1970-1990 கள் வரை உணரப்பட்ட விடயமாகும். ஈழத்தமிழர் அமெரிக்காவிடமோ ஐரோப்பிய யூனியன் இடமோ சமஷ்டி கோரிக்கை முன்வைப்பதனால் தீர்வு ஏற்பட்டுவிடுமாக இருந்தால் தமிழ் தேசிய பேரவையை அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அனுப்ப முடியும். உலகத்தில் ஒவ்வொரு அரசுகளும் தமது நலனுக்கு மட்டுமே நகருமே அன்றி தேசிய இனங்களின் விடுதலைக்கோ நாடுகளின் சுபீட்சத்துக்கோ ஒரு போதும் நாடுகளுக்கிடையிலான உறவுகள் கட்டமைக்கப்படுவதில்லை. ஈழத்தமிழரின் நலனின் பால்பாட்டே தமிழ் தேசியப் பேரவையும் தமிழகத்துடனான உறவை தொடக்கி இருக்கின்றது. இது ஈழத்தமிழரின் அரசியல் செயல் திறனை தீவிரப்படுத்தியுள்ளது.
நான்காவது கடந்தகால வரலாற்றைப் பேசிக் கொண்டு நிகழ்காலத்தின் யதார்த்தத்தை தவறவிடுபவர்களாக ஈழத்தமிழர் இருந்துவிடக் கூடாது. கடந்தகாலம் அனுபவமாக இருத்தல் வேண்டும். அதில் விடப்பட்ட தவறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். கடந்தகால பழங்கதைகளை பேசிக் கொண்டு நிகழ்காலத்தின் வாய்ப்புக்களை நிராகரிப்போமாயின் விளைவுகள் அபாயகரமானவையாக இருக்கும். இன,மத,மொழி மற்றும் பண்பாட்டு அடையாளம்; இனச்சகோதரத்துவ அரசியலின் அங்கமாக தமிழகம் பார்க்கப்படுகிறது. அதனை தமிழகம் கொண்டிருக்கிறது. அரைச் சமஷ்டி அரசான தமிழக மக்கள் தான் உலகளாவிய நிலப்பரப்பில் ஈழத்தமிழருக்கு என இருக்கூடிய ஒரே இனச்சகோதரத்துவ அரசியல் களமாகும். அதுவே ஈழத்தமிழரதும் சர்வதேச அரசியல் களத்தின் திறவுகோலுமாகும். புதுடில்லிக்கான வாசற்படி தமிழகம் என்பது போல் ஈழத்தமிழரது இருப்பிற்கான திறவுகோலும் தமிழகம் தான். 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 இல் தமிழகம் முழுவதும் யூலைக்கலவரத்திற்கு எதிரான போராட்டம் முழுமையாக வெற்றி பெற்றது போல் இரு தடைவை ஈழத்து மண்ணில் நிகழ்ந்தது இனப்படுகொலை என்று தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றியதும் தமிழகம் தான். 19 இளைஞர் யுவதிகள் தமது இன்னுயிரை ஆகுதியாக்கியதும் தமிழகத்தில் தான். இத்தகைய இனச்சகோதரத்துவ அரசியலுக்கு நிகராக வேறு எத்தகைய ஒத்துழைப்பும் ஈழத்தமிழருக்கு உலகளாவிய ரீதியில் கிடையாது. இதனை புரிந்து கொள்வதே அவசியமானது.
எனவே தமிழ்த்தேசியப் பேரவையின் முயற்சிகளை விமர்சனம் செய்வதென்பது இயல்பான ஒன்று. ஆனால் அத்தகைய விமர்சனம் ஈழத்தமிழருக்கும் தமிழகத்துக்குமான உறவின் இன்மையினால் ஏற்பட்ட கடந்த கால விளைவுகளில் இருந்து புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்தியா ஈழத்தமிழரின் அழிப்பில் ஈடுபட்டது என்பது இந்திய நலன் சார்ந்த அரசியல். அத்தகைய நலன் சார்ந்த அரசியலும் வெற்றிகரமாக ஈழத்தமிழரின் நலன்களை அடைவது என்பது தான் அரசியல். இரண்டாம் உலக யுத்தத்தில் அணுக்குண்டுகளை வீசி அழித்த அமெரிக்கர்களை கொண்டே ஜப்பான் கட்டிவளர்க்கப்பட்டது. அது மட்டுமின்றி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கிரோஹிமாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் அளவுக்கு; ஜப்பானியர்களின் அரசியல் கலாச்சாரம் வளர்ந்திருந்தது. இதற்கான அரசியலை கட்டமைப்பது ஈழத்தமிழருக்கு தற்போது தேவையானதாகும். அதனை தமிழ் தேசியப் பேரவை தொடக்கி இருக்கின்றது. அதனை ஆரம்ப புள்ளியாக கொண்டு ஈழத்தமிழர்-தமிழக உறவு வளர்க்கப்பட வேண்டும்.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:யாழ் தினக்குரல்)
