மென்ரோ கோட்பாடு என்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கிய தூணாகும். இது 1823 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி ஜனாதிபதி ஜேம்ஸ் மென்ரோவால் (James Monroe)வகுக்கப்பட்டது. இக்கோட்பாடு உலகின் மேற்கு அரைக்கோளம் ஐரோப்பிய காலனித்துவத்திற்கு மூடப்பட்டிருப்பதாகவும், சுதந்திரமான அமெரிக்க கண்டத்து நாடுகளின் விவகாரங்களில் ஐரோப்பியர்கள் தலையிடுவது தடைசெய்யப்பட்டிருப்பதாகவும் அறிவித்த வெளியுறவு கோட்பாடாகும். இது அமெரிக்க நலன்களையும் குடியரசுக் கொள்கைகளையும் பாதுகாக்கும் நோக்கில் ஐரோப்பா, அமெரிக்கா தனித்தனி செல்வாக்கு மண்டலங்கள் என்ற கொள்கையை நிறுவியது. இதன் பிரதான பகுதியாக காலனித்துவத்தை எதிர்ப்பதாக அமைந்தது. அமெரிக்கக் கண்டம் இனி ஐரோப்பிய சக்திகளால் எதிர்காலத்தில் காலனித்துவப்படுத்தப்படுவதற்கான கண்டமாக இருக்கமுடியாது என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் வெவ்வேறு அரசியல் அமைப்புகளைக் கொண்ட தனித்தனி மண்டலங்களாக இயங்கும் என்பதை தெளிவுபடுத்தியது. தலையிடாமை பிரதான நோக்கமாக அமைந்திருந்தது. அமெரிக்கா ஐரோப்பிய விவகாரங்களில் தலையிடாது, மாறாக, அமெரிக்காவில் ஐரோப்பாவின் எந்தவொரு தலையீடும் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு ஆபத்தான விரோதச் செயலாகக் கருதப்படும் என்பதை மென்ரோக் கோட்பாடு தெவித்தது.
குறிப்பாக ஸ்பெயின் இழந்த இலத்தீன் அமெரிக்கக் காலனிகளை மீண்டும் பெறுவதற்கு புதிய கூட்டணியாக ரஷ்சியா, பிரஷ்சியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து உருவாக்க திட்டமிட்டது. அத்தகைய கூட்டணி உருவாகும்; வாய்ப்பைத்; தடுப்பதற்கும் பசிபிக் கடற்கரையில் ரஷ்சியாவின் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் மென்ரோ கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் அமெரிக்காவின் இராணுவ பலம் குறைவாக இருந்ததால் இந்தக் கோட்பாடு ஐரோப்பாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.19 ஆம், 20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சக்தி வளர்ந்தபோது, 1865 இல் பிரான்சிடமிருந்து மெக்ஸ்சிகோ சுதந்திரம் பெறுவதற்கும், 1895 ஆம் ஆண்டின் ஆங்கிலோ-வெனிசுலா நெருக்கடி போன்ற சர்ச்சைகளிலும் மென்ரோக் கோட்பாடு பிராந்தியத்தை பாதுகாப்பதில் தீர்மானமெடுக்க உதவியது. 1904 ஆம் ஆண்டு தியோடர் ரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) மென்ரோக் கோட்பாட்டை விரிவுபடுத்தினார். இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் தலையீட்டை நியாயப்படுத்தினார். இதன் மூலம், அதனைப் பாதுகாப்புக் கொள்கையிலிருந்து தலையீட்டுக் கொள்கையாக மாற்றினார். இது பெரும்பாலும் Big Stick கொள்கை என்று குறிப்பிடப்படுகிறது.
மேன்ரோக் கோட்பாடு மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவை ஒரு ஆதிக்க சக்தியாக நிலைநிறுத்த உதவியது. கொள்கையில் பரிணாம வளர்ச்சியானது ஐரோப்பிய காலனித்துவ எதிர்ப்புவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டாலும், பின்னர் 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் இப்பகுதியில் அமெரிக்க மேலாதிக்கத்தை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. பனிப்போருக்குப் பின்னர் நேரடியாக ஆதிக்கம் மேற்கொண்டதுடன்; அமெரிக்கக் கண்டங்களில் வெளித் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கையாகவும் கருதப்பட்டது.
மென்ரோ கோட்பாடு என்பது மேற்கு அரைக்கோளம் தொடர்பான அமெரிக்காவின் மிகவும் அறியப்பட்ட கொள்கையாகும். 1823 டிசம்பரில் ஜனாதிபதி ஜேம்ஸ் மன்ரோவால் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட ஒரு வழக்கமான வருடாந்திர செய்தியில் இடம்பெற்றிருந்த இந்தக் கோட்பாடு மேலும் காலனித்துவத்தையோ அல்லது கைப்பாவை மன்னர்களையோ அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்று ஐரோப்பிய நாடுகளை எச்சரித்ததாக அமைந்திருந்தது. அக்காலத்தின் முக்கிய சவால்களை நிவர்த்தி செய்வதற்காக இந்தக் கோட்பாடு உருவாக்கப்பட்டாலும், அது விரைவில் மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்கக் கொள்கையின் ஒரு முக்கிய முழக்கமாக மாறியது.
1865-ஆம் ஆண்டில், மெக்ஸ்சிகோ ஆட்சியாளர் பெனிட்டோ ஜுவாரெஸ்{க்கு ஆதரவாக அமெரிக்க அரசாங்கம் இராஜதந்திர மற்றும் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகித்தபோது மென்ரோ கோட்பாடு செயல்படுத்தப்பட்டதாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த ஆதரவு, பிரெஞ்சு அரசாங்கத்தால் ஆட்சியில்; அமர்த்தப்பட்ட பேரரசர் மாக்சிமிலியனுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான கிளர்ச்சியை வழிநடத்த ஜுவாரெஸ்{க்கு உதவியது.
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 1904-ல், பல இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஐரோப்பியக் கடன் வழங்குநர்கள், கடன்களை வசூலிப்பதற்காக ஆயுதமேந்திய தலையீட்டை அச்சுறுத்தியது. ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட், மென்ரோ கோட்பாட்டிற்கான தனது ரூஸ்வெல்ட் துணைக்கோட்பாடு (அல்லது நீட்டிப்பு) என்று அழைக்கப்படும் கோட்பாட்டில் அத்தகைய நீண்டகாலத் தவறுகளைக் கட்டுப்படுத்தவும் ஒரு சர்வதேசக் பாதுகாவல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் உரிமையை உடனடியாகப் பிரகடனப்படுத்தினார்.
மென்ரோ கோட்பாட்டின் செய்தியானது ஐரோப்பிய சக்திகளை மேற்கு அரைக்கோளத்திலிருந்து வெளியே வைப்பதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், ரூஸ்வெல்ட் மேற்கு அரைக்கோளத்தின் பிற நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நியாயப்படுத்தும் வகையில் அதன் பொருளை வலுப்படுத்தினார். இதன் விளைவாக ஐரோப்பியர்களை வெளியேற்றுவதற்க்கும் வெளிப்படையான நோக்கத்துடன் 1904-ல் டொமினிக்கன் குடியரசிற்கும், 1911-ல் நிகரகுவாவிற்கும், 1915-ல் ஹைட்டிக்கும் அமெரிக்க கடற்படையினர் அனுப்ப வழிவகுத்தது. ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகள் இந்தத் தலையீடுகளைச் சந்தேகத்துடன் பார்த்தன. இந்நடவடிக்கைகள் இலத்தீன் அமெரிக்க நாடுகள் சோஸலிஸக் கொள்கைக்குள் நுழைய காரணமாகியது.
1962-ல், சோவியத் யூனியன் கியூபாவில் ஏவுகணை ஏவுதளங்களைக் கட்டத் தொடங்கியபோது மென்ரோ கோட்பாடு அடையாளப்பூர்வமாகப் தீவிரத் தன்மையைப் பெற்றது. அமெரிக்கா நாடுகளின் கூட்டமைப்பின் ஆதரவுடன், ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி கியூபாத் தீவைச் சுற்றி ஒரு கடற்படை மற்றும் விமானப்படை முற்றுகையை ஏற்படுத்தினார்;. பல பதட்டமான நாட்களுக்குப் பிறகு, சோவியத் யூனியன் ஏவுகணைகளைத் திரும்பப் பெறவும், தளங்களைக் விலக்கிக் கொள்ளவும் ஒப்புக்கொண்டது. அதைத் தொடர்ந்து, அமெரிக்கா துருக்கியில் இருந்த தனது காலாவதியான பல விமான மற்றும் ஏவுகணைத் தளங்களை அகற்றியது.
(Reference: Sam Chetwin George. (2026), China Was Ready for the Age of Anarchy: Why Turbulence Will Make Beijing More Assertive)
