அரசியல் கட்டுரைகள்

பத்தரமுல்லையும்-முள்ளிவாய்க்காலும் இரு வேறுபட்ட அடையாளங்கள்!

இலங்கை அரசியலில் மே18,19 நாட்கள் தனித்துவம் மிக்கவை. முன்பின் முரணானவை. முரணியத்தின் வேர்களை அப்படியே இன்னும் கட்டி வைத்துள்ளவை. பிரிவினையும் இன உணர்வும் மாறுபடாத நாட்களாக முடிந்துள்ளன. தெற்கில் ஒரு வடிவமும் வடக்கு கிழக்கு இன்னொரு வடிவமும். நேரெதிரான உணர்வுகளை உண்மையாக கொண்டு கடந்துள்ளன. இது கடந்த 17 ஆண்டுகளாக வெளிப்படையாக நிகழ்ந்துவரும் யதார்த்தம். இத்தகைய யதார்த்தத்தின் விளைவுகளில் இருந்து இலங்கை தீவின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. பத்தரமுல்லை-முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் நிகழ்ந்த நினைவுகோரல்களின் உணர்வுகள். முரண்பாடும், இனக்குரோதமும் என்னுமே மறைப்பின்றி வெளித்தோன்றிய பதிவுகள்.
தென் இலங்கையிலுள்ள பத்தரமுல்லையில் படையினரை நினைவு கொள்ள அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னே மே 19 இல் உரையாற்றும் போது இலங்கையின் ஜனாதிபதி அநுர குமாரதிசநாயக்கா, அண்மைய வரலாற்றில் தாய்நாட்டை விடுவிப்பதற்காகத் தோள் கொடுத்த நமது படையினர்களுக்கு உயரிய மரியாதையையும் கௌரவத்தையும் செலுத்துவதற்காகவே நாம் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். நாட்டுக்காகத் தமது உயிரைத் தியாகம் செய்த படையினர்களது நினைவுத் தூபிக்கு முன்னால் நினைவு கோருவதற்கும், அவர்கள் எதிர்பார்த்த இலக்குகளை அடைவதற்கும், யுத்தம் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவடையும் இன்றைய நாளில் நாம் இந்த நிகழ்வை நடத்துகிறோம். சுதந்திர தேசத்தின் கௌரவத்திற்காகத் தமது உயிர்களையும், இரத்தத்தையும், கண்ணீரையும் விலையாகக் கொடுத்த அனைத்து படையினர்களையும் இந்தத் தருணத்தில் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூறுகின்றேன். தமக்காக அல்லாமல் பிறருக்காகவும் நாட்டுக்காகவும் உயிர்த்தியாகம் செய்து அவர்கள் ஆற்றிய சேவைக்கு தேசத்தின் கௌரவத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
இலங்கை தீவில் போரற்ற அமைதியான இன வன்முறை இல்லாத எண்ணங்களை அதிகம் பிரதிபலிக்கும் வாசகங்கள் ஜனாதிபதியின் உரையில் பிரதிபலித்திருந்தது. இலங்கையின் ஜனாதிபதி படையினரை நினைவு கொள்ளும் நிகழ்வில் தலைமை தாங்கி இருந்தார். அவ்வாறே வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காக சிவில் அமைப்புகளின் கூட்டிணைவான பொதுக்கட்டமைப்பு ஒன்று கூடி மே18 இல் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்காக அஞ்சலியை செலுத்தியது. பத்தரமுல்லையில் நினைவு கொள்ளப்பட்டவர்களால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலினாலும் போரினாலும் கொல்லப்பட்டவர்களுக்காகவே முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த அஞ்சலி திறவுகோலாக அமைந்திருந்தது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு இருந்ததோடு அவர்களின் உறவுகள் தமது துயரத்தை முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது, புலம்பி தீர்த்துக் கொண்டனர். இலங்கை ஆட்சியாளர்கள் படையினரை நினைவு கொள்ளும் போது தீவிரவாதத்தை அளித்த நாள் என்று விழித்துக் கொண்டனர். ஆனால் அதில் கொல்லப்பட்ட 146,679 பொது மக்களுக்காக அஞ்சலியை முள்ளிவாய்க்காலில் பொதுக் கட்டமைப்பு வெளிப்படுத்தியது பற்றிய எந்த உணர்வும் இடதுசாரி ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை.
இரண்டு நினைவு கோரலும் எதிரெதிரானவை. ஜனாதிபதி அநுர குறிப்பிடுவது போல் மீண்டும் ஒரு போர் நிகழாது என்பதையும் நிகழ்வதற்கு அனுமதிக்க முடியாது என்பதையும் அவரது உரையின் சாரம் வெளிப்படுத்தியது. அதாவது மீண்டும் ஒரு போதும் யுத்தம் ஒன்று ஏற்படாதவாறு நான் பார்த்துக்கொள்வேன் என்;றுரைத்தார். முள்ளிவாய்க்காலில் கொன்றவர்கள் முன்னிலையிலேயே அஞ்சலி செலுத்தும் போது ஜனாதிபதி அந்தக் கருத்தை தெரிவித்திருந்தார். இருதரப்பினரும் தனித்தனியே தமது கோரிக்கைகளையும் எண்ணங்களையும் கோசங்களையும் கைவிடாது அப்படியே பிரதிபலிக்கின்றனர். ஜனாதிபதி எதனைக் குறிப்பிட்டாலும் முள்ளிவாய்க்கால் தனியாகவும் பத்திரமுல்லை தனியாகவும் தன்னை அடையாளப்படுத்தி நிற்கின்றது. ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் கடந்து வந்த இரண்டு ஆண்டுகளில் எதனையும் வெளிப்படுத்தவில்லை. 1958 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை நிகழ்ந்தவற்றுக்கு எத்தகைய தீர்வும் முன் வைக்கப்படவில்லை. மீண்டும் மீண்டும் போரற்ற சூழலையும் இன உணர்வற்ற இலங்கை தீவை பற்றியும் உரையாடுகிறார்களே அன்றி அதனை தீர்ப்பதற்காக எந்த முனைப்பையும் வெளிப்படுத்தவில்லை.
இலங்கை தீவின் அரசியல் வரலாற்றை அவதானித்தால் இவ்வகையான காலங்களை கடந்திருக்கிறது என்பதை உணர முடியும். 1948 ஆம் ஆண்டிலிருந்து 1972 ஆம் ஆண்டு வரை இத்தகைய சூழல் ஒன்றை இலங்கைத் தீவு கண்டிருந்தது. அகிம்சையிலும், அறவழியிலும் அமைதியான போராட்டங்களில் நீட்சி 1972 ஆம் ஆண்டு வரை நிலையான ஒன்றாக இருந்தது. அந்தக் காலத்தில் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் எத்தகைய தீர்வை முன்வைக்காது காலத்தை இழுத்தடித்து ஏமாற்றுத்தனமான வார்த்தைகளையும் அணைத்துக் கெடுக்கும் உத்தியையும் உத்தரவாதங்களையும் மாறி மாறி ஆட்சியாளர்கள் வழங்கிக் கொண்டே இருந்தனர். இடதுசாரிகள், வலதுசாரிகள், தராண்மை வாதிகள், முதலாளித்துவ வாதிகள் என எல்லோரிடமும் இலங்கை தமிழரை ஏமாற்றுகின்ற உத்தியென்றை அக்கால பகுதியில் கடைபிடித்தனர். அதே காலப்பகுதியை மீண்டும் இலங்கைத் தீவு எதிர்கொண்டுள்ளது. இது எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வற்ற இலங்கை தீவிவையே காட்சிப்படுத்தும் என்ற வரலாற்று உண்மையை தந்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் நினைவுகளை மேற்கொண்ட பொதுக்கட்டமைப்பு அறிவியல் ரீதியான தத்துவார்த்த புரிதலை முன் வைத்துள்ளது. ஓர் இனத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு அந்த இனம் பண்பாட்டினாலும் வாழ்வியலாலும் கட்டமைக்கப்படுவதோடு யதார்த்தங்களை எதிர்கொள்வதற்கான களத்தை வடிவமைத்து தயார் செய்ய திட்டமிடுகிறது. உலக சூழலையும் பிராந்திய சூழலையும் சரியாக அளவீடு செய்து செயல்பட வேண்டும் என்ற நிர்பந்தத்தை முள்ளிவாய்க்கால் சூழல் ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கட்டமைப்பானது தனது அறிக்கையில் இரத்தம் தோய்ந்த இம் மண்ணிலிருந்து போராட கனத்த காற்று சுமந்து வரும் அவர்களின் நினைவுகளின் மீதும் நாம் கொண்டிருக்கும் தமிழ் இன விடுதலையின் நம்பிக்கை மீதும் சபதம் செய்வோம். சிங்கள பௌத்தமயமாக்கப்படும் தமிழர் தாயகத்தை தடுக்கவும் தமிழ் தேசியத்தை நாளாந்த வாழ்வியலாக்கவும், தமிழ் இன அழிப்பில் சர்வதேசநீதி வேண்டி அரசின் பொறுப்பையும் மேற்குலக நாடுகளின் பங்கையும்; வலியுறுத்தி இனப்படுகொலைக் குற்றவாளிகளை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவும், தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்கு உரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் பாரதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய அடிப்படையிலும், தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தவும், ஈழத்தமிழர் இருப்பின் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை தடுக்கவும், தமிழ் தேசிய நம்பிக்கையின் உறுதி கொண்டு ஒரு குடையின் கீழ் தமிழின அடக்குமுறைக்கு எதிராக தமிழின விடுதலையை நோக்கி முனைப்புடன் தொடர்ந்து போராட எமது மக்கள் பலத்தை நிரூபிக்கவும் தொடர்ந்து அடிபணியாது போராடுவோம் என்று குறிப்பிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நிகழ்வை வெளியே இருந்து பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் வலிபட்ட அந்த மண்ணும் வலிபட்ட தமது உறவுகளையும் நினைத்து தம் உணர்வுகளை வெளிப்படுத்திய அந்த மக்களைப் பற்றி எத்தகைய கரிசனையும் வெளியே இருந்து நோக்குபவர்களுக்கு தென்படவில்லை. தத்துவார்த்த ரீதியில் பார்த்தால் ஓர் இனம் அல்லது ஓர் உயிரி தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை முன்னிறுத்திக் கொண்டு எதிர்காலத்துக்காகவும் தன்னுடைய கடந்த காலத்தின் நியாயங்களுக்காகவும் அது போராடுகின்ற உணர்வை உறுதிப்படுத்துகிறது. இதுவே ஈழத்தமிழரின் அறிவியல் ரீதியான தேவையுமாகும்.
ஒரு பக்கம் ஜனாதிபதி சமாதானத்தையும், போரற்ற இலங்கை தீவையும், இன முரண்பாடற்ற நாட்டையும், கட்டி எழுப்ப பிரகடனம் செய்கின்றார். அத்தகைய பிரகடனத்தின் மீதான அரங்கம்; முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களைக் கொன்றவர்களை நினைவு கொள்வதற்கான அரங்கமாகவே உள்ளது. பத்திரமுல்ல இனவாதத்தின் அரங்கமாகவே அமைந்துள்ளது என்பதை நிராகரிக்க முடியாது. இது இன உணர்வினால் கொன்றளிக்கப்பட்ட மக்களை நினைவு கொள்வதை விட கொன்றொழித்தவர்கள் மேலானவர்கள் என்ற நினைவுலகத்தை தந்திருக்கிறது. முள்ளிவாய்க்காலில் நிகழும் அஞ்சலியை அல்லது துயர் பகிர்வை இலங்கை நாட்டின் ஜனாதிபதி எந்த அடிப்படையிலும் நினைவு கொள்ளவில்லை. அதனை கடந்து அத்தகைய போராட்டத்தையும் விடுதலைக்கான உணர்வையும் குழு என்ற அடையாளத்துக்குள் தோற்கடித்து விடவும் முடிவுக்கு கொண்டு வரவும் திட்டமிட்டிருந்தார். இது உணர்த்தும் செய்தியானது இன உணர்வை பிரதிபலிப்பாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. தமிழர் இன உணர்வில் செயல்படுவதாகக் கூறிக் கொண்டு தென் இலங்கையின் ஆட்சியாளர்கள் அதனையே மேற்கொள்கிறார்கள்.
எனவே முள்ளிவாய்க்காலும்-பத்திரமுல்லையும் இரு வேறு இடங்கள் மட்டுமல்ல உணர்வுகளிலும் எண்ணங்களிலும் இருப்பின் தன்மையிலும் வேறுபட்டதேயாகும். இரண்டுமே தனித்தனியானது. தனித்துவ அடையாளங்களை கொண்டது. பொது நிலைப்படுத்துவதற்கு தயார் இல்லாத சூழல் 2009க்கு பின்னரும், இடதுசாரி ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்த பின்னரும் ஆயுதப் போராட்டத்தை இலங்கை தீவில் நிகழ்த்தி அதன் மூலம் ஆட்சி மாற்றத்தை செய்ய திட்டமிட்டவர்களின் ஆட்சிக்குப் பின்னரும் இருவேறு அடையாளங்களோடு இலங்கை தீவு காணப்படுகிறது.
(நன்றி: தினக்குரல்)
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்