அரசியல் கட்டுரைகள்

போருமற்ற-சமானதானமுமற்ற உலக ஒழுங்குக்குள் ஈரான்-அமெரிக்க போரியல் தந்திரம்?

உலகளாவிய அரசியல் நிலையற்ற தன்மையை நீடிக்கும் நகர்வாகவே விளங்குகிறது. அமெரிக்கா-ஈரான் போரும் சமாதானத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் உலகத்தின் புதிய சர்வதேச அரசியல் கோட்பாடுகளை தருவதற்கான வழிமுறைகளை தோற்றுவிக்கின்றது. புதிய சர்வதேச அரசியல் கோட்பாட்டின் பரிமாணம் புராதன மனித நாகரீகத்தின் வரலாற்றையும் அதன் வளர்ச்சிக் கட்டங்களையும் கேள்விக்கு உட்படுத்தும் விதத்தில் அரசியல் வடிவங்களும் நடைமுறைகளும் காணப்படுகின்றன. சர்வதேச அரசியல், பூகோள அரசியல், உலக அரசியல், என்பனவற்றுக்கான ஓர் ஒழுங்கு முறைக்குள் கட்டமைக்கப்பட முடியாத போக்கைத் தந்துள்ளது. இதன் குழப்பத்துக்குள் இயங்குகின்ற நாடுகளின் தன்மையை பிரதிபலிப்பாக அமெரிக்க-ஈரான் போருமற்ற சமாதானமுமற்ற நிலை ஏற்படுத்தியுள்ளது. இக் கட்டுரையும் அமெரிக்க-ஈரானிய போர் மற்றும் சமாதானத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை பிந்திய போக்குகளை வெளிக் கொண்டுவர முயலுக்கிறது.

முதலாவது மேற்கு ஆசியாவில் உண்மையான அமைதி மற்றும் பாதுகாப்பின் மீது அமெரிக்கா தனது முழுமையான அவமதிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி (Esmaeil Baghaei) கூறியுள்ளார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரிலிருந்து பிராந்திய நாடுகள் தெளிவான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். இதே நேரம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அலி ஹாமேனியின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை ஏறக்குறைய ஏழு நாட்களுக்கு திட்டமிடும் ஈரான் ர~;சியா, சீனா, மற்றும் பாகிஸ்த்தான் தலைவர்கள் உட்பட 30 நாடுகளின் பிரதிநிதிகளையும் 90 மேற்பட்ட மதத் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்பதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஈரானுடன் மறைமுகமாக நிகழும் பேச்சுவார்தைகளை இராஜதந்திர நோக்கத்திற்காக இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மதத்தலைவரின் மரணச்சடங்குக்காக தெஹ்ரானில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறது.

இரண்டாவது ஹார்மூஸ் நீரிணை முக்கிய சர்வதேச அரசியல் நீர் நிலையாக மாறியுள்ளது. ஹார்மூஸ் நீரிணை என்பது வெறுமனே ஒரு நீர்நிலையாக மட்’டும் கருத முடியாத அளவுக்கு அதன் முக்கியத்துவம் பிராந்தியங்களை கடந்து சர்வதேச அரசியல் பரிமாணத்தை கட்டமைத்துள்ளது. இது ஈரானின் பிராந்திய ஆதிக்கத்திற்கான வாய்ப்பை மட்டும் கொண்டிருக்கவில்லை. உலகளாவிய அரசியல் பரிமாணத்துக்குள் நகர்ந்திருக்கின்றது. ஹார்மூஸ் நீரிணையில் புதிய வழித்தடத்தை திட்டமிடும் அமெரிக்காவுக்கும் ஈரானிய புரட்சிகர இராணுவ படைப்பிரிவுக்கும் இடையில் நிகழும் மோதலே புர்துணர்வு உடன்படிக்கை மீதான நெருக்கடிக்கான அடிப்படை காரணமாகவுள்ளது. இதில் இரு தரப்பும் தீவிரம் காட்டி வருவதோடு இத்தகைய சூழலைக் கொண்டு பேச்சுக்களை முடிபுக்கு கொண்டுவர விரும்புகிறது இஸ்ரேல். இது இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பான களமாகத் தெரிகின்றது. ஆனால் ஹார்மூஸ் நீரிணையின் புவிசார் அரசியல் ஈரானுக்கான வகிபாகத்தை முதன்மைப்படுத்தி இருக்கிறது. அதை தவிர்க்க முடியாமல் ஈரானின் கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்பட வேண்டிய தேவை ஹார்மூஸ் வழிதடத்தில் நிலவுகிறது. அதனை எதிர்கொள்ளுகின்ற திறன் ஈரானை விட அமெரிக்க இஸ்ரேலியர் தரப்பிடம் பலவீனமாக உள்ளது என்பது புரிதலாகும்.

மூன்றாவது இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்ட பரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இரு தரப்பும் இலக்கை அடைய முடியாத சூழலில் சமாதானத்தையும் போரையும் ஒருங்கிணைத்து நகர்த்துகின்றனர். அமெரிக்கா தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாத நிலையே உலக அரசியல் காணப்படுகிறது. நவீன உலக வரலாறு முழுவதும் மேற்குலகம் தனது நலனுக்காக இதர கண்டங்கள் மீது ஆக்கிரமிப்பையும் அழிவையும் சுரண்டலையும் வெற்றிகரமாக நகர்த்தி இருந்தது. அவை அனைத்தும் காணாமல் போகும் நிலையை எதிர்கொள்கிறது. வியட்நாமில் ஒரு தடவை மேற்குலகம் நெருக்கடியை எதிர் கொண்ட போதும் வெற்றிகரமாக பின்வாங்கியதன் மூலம் பிழைத்துக் கொண்டது. அவ்வாறு ஈரானிலும் வெற்றிகரமாக பின்வாங்குவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நகர்வே புரிந்துணர்வு உடன்படிக்கையாகும். ஆனால் அதனை இஸ்ரேல் என்ற நாட்டின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் அமெரிக்கா தங்கியிருப்பதனால் பின்வாங்கலை கையாள முயலுகிறது. இதன் விளைவு அமெரிக்காவின் தோல்வியாகவே மாறுகிறது. ஈரான் வெற்றி பெற்றது என்பதை விட ஈரான் உலகத்துக்கு தனது இராணுவ பலத்தையும் இராஜநத்திர உத்தியையும் நிலைநிறுத்தி உள்ளது என்பதே எதார்த்தமானதாகும். இதுவே போரில்லாத சமாதானம் இல்லாத யுகத்துக்குள் உலகத்தை இழுத்துச் செல்வதற்கான பரிமாணமாகத் தெரிகிறது.

நான்காவது அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்கள் நீடிக்கின்ற நிலையில் பேச்சுவார்த்தை நிகழ்நிலையில் நடைபெறாத போதும் கட்டார் போன்ற நடுநிலமை வகிக்கும் நாடுகளில் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தவிரும்புகிறது. அரசு தரப்பும் அரசு அல்லாத தரப்பும் தடம் இரண்டு இராஜதந்திர(Track-II diplomacy) உரையாடலை மேற்கொள்கின்றன. அமெரிக்கா-ஈரானிய தரப்புக்கள் தொழில்நுட்ப ரீதியில் உரையாடலை நிகழ்த்துகின்றன. இது இரு தரப்பும் இன்னொரு தரப்பை கையாளுவதற்கான வழிமுறையாகவே தெரிகின்றது. ஆனால் உரையாடல்கள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகளிலும் அதன் தலைநகரங்களிலும் அந்த நாடுகளின் இராஜதந்திர நகர்வுகளிலும் பிரதிபலிக்கிறது. இதன் விளைவுகளை இருதரப்பும் கையாள முனைகின்றன. இது இராஜதந்திரத்தின் வழிமுறையாக பார்க்கப்பட்டாலும் போரின் இலக்கை எட்ட முடியாத போது இராஜதந்திர உரையாடல்களை மேசையில் கையாண்டு வெற்றி பெற மேற்குலக இராஜேந்திர செய்முறையாக விளங்குகிறது.

ஐந்தாவது போரும் இல்லாத சமாதானமும் இல்லாத சூழலில் உலக நாடுகளின் பெற்றோலிய ஏற்றுமதியும் இறக்குமதியும் நிகழ்வதோடு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் விதத்தில் அரசுகள் நகர்கின்றன. இது ஒரு வெற்றிகரமான போரும் இல்லாத சமாதானமும் இல்லாத பரிமாணத்தை உலகத்துக்கு கொடுத்திருக்கின்றது. அரசுகளின் தந்திரோபாயமான முகாமை (Diplomatic Management) ஆரோக்கியமான உலகத்தை கட்டியெழுப்ப உதவதாகவே தெரிகிறது. குறிப்பாக இராஜதந்திர முகாமை என்பது வெளியுறவுக் கொள்கையின் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது. இது பாரம்பரிய வெளியுறவுக் கோட்பாடுகளிலிருந்து கவனத்தை மாற்றி, அரசு உறவுகளின் நடைமுறை, கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு முகாமையை நோக்கிச் செல்கிறது. ஓர் அரசாங்கம் தமது வெளியுறவு அமைச்சகங்களை எவ்வாறு நிர்வகிக்கிறது, வளங்களை எவ்வாறு ஒதுக்குகிறது, தூதரகப் பிரதிநிதிகளுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கிறது, மற்றும் பன்முகப் பண்பாட்டுப் பேச்சுவார்த்தைகளை எவ்வாறு நடத்துகிறது என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது. அதற்கான ஒரு களத்தை இன்றைய உலகம் எதிர் கொண்டுள்ளது. இது சர்வதேச அரசியல் கோட்பாடுகளில் மாற்றங்களைத் தரக்கூடியதாக காணப்படுகிறது. இராணுவ தொழில்நுட்பம் அடைந்த வளர்ச்சியை போன்று அதற்கு உட்பட்ட அரசியல் கோட்பாடுகளும் பரிமாணம் பெற வேண்டிய நிர்பந்தத்துக்குள் நியமங்கள் தந்திருக்கின்றன.

எனவே போருமற்ற சமாதானமுமற்ற உலக அரசியல் நீரோட்டத்தில் நாடுகள் இயல்பான பரிமாணத்துக்குள் இயங்கும் நிலையைத் ஈரான்-அமெரிக்கப் போர் தந்துள்ளது. முன்-பின் முரணான உலகத்தின் போக்கும் மேற்குலக ஆதிக்கத்தின் நெருக்கடியும் புதிய உலக ஒழுங்குக்கான வடிவத்தை உருவாக்க ஆரம்பித்திருக்கிறது. இத்தகைய சூழலின் நீடிப்பு ஏதாவது ஒரு தரப்பின் தோல்வியையும் உலகளாவிய ஆதிக்கத்தின் பரிமாணத்தையும் மாற்றி அமைக்கக் கூடியதாக ஈரான்-அமெரிக்க போர் தந்துள்ளதாவே புரிந்து கொள்ளப்படுகிறது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி: தினகரன்)