July 12, 2026
அரசறிவியல் சொற்களஞ்சியம்

தேசியம் என்ற எண்ணக்கரு: (Concept of Nationality)

தேசியம் என்பதன் ஆங்கில சொல்லான Nationality இலத்தீன் சொல்லான Natus (நேட்டஸ்) என்பதிலிருந்து பிறந்ததாகும். அதாவது இது பிறப்பது என்பதை குறிக்கிறது. எனவே அதன் வழித்தோன்றல் வார்த்தையில், தேசியம் என்பது ஒரே இனத்தைச் சேர்ந்தது அல்லது பிறப்பால் தொடர்புடைய இரத்த உறவைக் கொண்டிருப்பது என்பதைக் குறிக்கிறது. நடைமுறையில் தேசியத்திற்காக வரையறை இந்த புரிதலிலிருந்து விரிவடைந்துள்ளது. இன்று உலகில் ஒரே இனத்தைச் சேர்ந்த ஒரு தேசம் அரிதாக காணப்படுகின்றது. ஒவ்வொரு தேசத்திலும் பல்லினப் பின்னணி கொண்ட மக்கள் அதிகரித்து உள்ளனர். குடியேற்றங்கள், சாதிகளுக்கிடையேயான மற்றும் இனங்களுக்கிடையேயான திருமணங்கள் காரணமாக அதிகரித்த இனசேர்க்கைகள் காரணமாக இனத் தூய்மையைக் கண்டறிவது மிகவும் கடினமாகி வருகின்றது. தேசியத்தின் வளர்ச்சி நிச்சயமாக ஓர் உளவியல் நிகழ்வாகும். அது அரசியல் அல்லது இனம் சார்ந்தது மட்டுமல்ல.

தேசியம் பற்றிய வரையறையை கண்டு கொள்வது அவசியமானது. தேசியத்திற்கான அறவியலை ரூசோ (Jacques Rousseau ) வகுக்கிறார். தேசியம் உணர்ச்சியைவிட பகுத்தறிவை அதிகம் முதன்மைப்படுத்துகிறது. தேசியம் மூன்று அர்த்தத்தைக் கெடுக்கிறது. ஒன்று, தனது சொந்த தேசத்தின் நலன்களை அதிகரித்துக் கொள்வதற்கு முயற்சிக்கிறது. இரண்டு, ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக பாடுபடுவது என்ற பொருளில் தேசியம் பயன்படுத்தப்படுகிறது. மூன்று, தேச அளவில் நிலப்பரப்பை ஒன்றிணைத்து முழுமையாக்கல் என்ற பொருள்பட அமைந்துள்ளது. தேசியம் சமானியனது அரசியல், சமூக-பொருளாதார, பண்பாட்டு உணர்வுகளை மையப்படுத்தியதென்பது வியப்பான விடயமாகும். அதாவது சமானியனது அரசியல் பங்குபற்றலே தேசியம் என்று குறிப்பிட்டால் மிகையாகாது. அதனையே ஜனநாயகம் என்ற எண்ணக்கருவுக்குள்ளால் அடையாளப்படுத்த முயலுகின்றனர். தேசியம் என்பது முதல் அர்த்தத்தில் ஜனநாயகத்தைக் குறிப்பதாகும். மக்களின் திரட்சிமிக்க பங்கேற்பே தேசியமாகும். தேசியப் போராட்டங்கள் அனைத்துமே மக்களின் கைகளுக்கு அதிகாரம் மற்றும் இறைமை கைமாறுவதைக் குறிக்கும் போராட்டங்களாகும். தனிமனித உரிமையும் கூட்டுரிமையும் இணைந்ததென்றே தேசியமாகும். இவ்வகைத் தேசியம் எல்லா இடங்களிலும் சுயம் பற்றியே விவாதிக்கிறது. சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, சுயகௌரவம் என்பன இனம், நாடு, தேசம் என்ற கூட்டு சுயம் வரை கட்டமைக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் தேசியத்தின் தோற்றமானது 18ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனையாக இருந்தாலும் மனிதகுலம் அதனை பூகோளமயப்படுத்தியுள்ளது. அது சமானியர்களின் யுகமாகவே கட்டமைக்கப்பட்டது. முடியாட்சி முறைமைகளுக்கு எதிராக மக்களது திரட்சியே அத்தகைய தேசியத்தின் தோற்றமாகும். இன மத நிற சாதிய வேறுபாடுகளைக் கடந்து மக்களது திரட்சியே தேசியம் என்று சுருக்கமாக கூறிக்கொள்ளலாம். மக்கள் அரசியல் தீர்மானங்களில் பங்கெடுக்கும் ஜனநாயக ஈடுபாடு இல்லையாயின் அதனை தேசியம் எனக்குறிப்பிட முடியாது. மக்கள் தமக்குரிய விருப்புக்களை தீர்மானமாக எடுத்துக் கொள்வதே அவர்களது சுய உரிமையாகும். அதுவே சுயநிர்ணய உரிமையாகும். ஒரு சுயம் பிறருக்கு தீங்கில்லாத தன்னகத்தே சுயமாகச் செயல்படுவதும் சுயம் இன்னோர் சுயத்துடன் பரஸ்பரம் நலனடிப்படையில் ஒன்று சேருவதும் ஜனநாயகத்திற்கான அடிப்படைகளேயாகும். ஜனநாயம் என்பது உயிர்துடிப்புள்ள பண்பாட்டு அடையாளம். அது நாகரீகத்தின் முதிர்ச்சி. தேசியத்தைப் பற்றி அரசியல் இலக்கணம் (A Grammar of Politics) என்ற நூலை எழுதிய ஹரோல் லக்ஸ்கியின்( Harold Joseph Laski ) வார்த்தைகளில் இருந்து விளங்கிக் கொள்ள முயற்சிப்பது பொருத்தப்பாடு உடையது.

நவீன தேசியம் என்பது பரந்ததொரு பார்வையில் பிரிவினையைத் தாண்டி எழுச்சிபெறவில்லை. அதற்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஓர் இறையாண்மை படைத்த அரசின் பொறுப்புக்கள் தேவைப்படுவதால் கருத்தியலில் அமைந்துள்ள பழைய எல்லாவித வடிவங்கள் இருந்தும் வேறுபடுகிறது. அதனால் சுய போதாமையின் தெளிவான அறிகுறிகளை அது நாடுகிறது. ஒவ்வொரு தேசியத்துக்கும் தன்னாட்சி கொண்டதும் சார்பற்றதுமான ஒர் அரசாங்கத்தை வேண்டுகிறது. எல்லாவிதத்திலும் அந்தந்த பகுதி வாழ் மக்களே அமெரிக்காவைப் போல ஆக்கிரமிப்புக்கு எதிராக மூடுபோர்வையில் இருந்து விடுபாட்டை தேடிவருகின்றன. அவை முழுக்கவசம் அணிந்த தேசிய அரசாக எழுச்சி பெற்றுள்ளன. தேசியம் என்ற கருத்தை இனம் என்பது சந்தேகத்துக்குரிய முக்கியத்துவம் கொண்டது என்பதை அமெரிக்காவில் எழுச்சி தெளிவுபடுத்தி உள்ளது. உண்மையாகவே பழைய ஐரோப்பிய தேசங்கள் எதுவும் இனத்தூய்மைக்கு தீவிரமாக சொந்தம் கொண்டாட முடியாதவைகளாக உள்ளன. பரந்தபார்வையில் இனத்தின் அடையாளம் பிற மக்களிலிருந்து தங்களை பிரித்தறியக்கூடிய சிறப்பு தகமையை தேசியம் உண்டாக்கியுள்ளது என விபரிக்கின்றார்.

தேசியத்தை அதன் கூறுகளின் அடிப்படையில் வரையறுப்பது மிகவும் கடினம். இது ஓர் உளவியல் கருத்து அல்லது ஓர் அகநிலை யோசனை ஆகும். எனவே எந்தவொரு பொதுவான தரம் அல்லது திட்டவட்டமான ஆர்வத்தை கண்டு பிடிப்பது சாத்தியமில்லை. இது எல்லா இடங்களிலும் தேசியத்துடன் தொடர்புடையது. இந்தக் குறிப்பிட்ட அம்சம் ஒரு தனிதேசியத்தை உருவாக்குகிறது என்று நாம் உறுதியாகக் கூற முடியாது. சில காரணிகளை நாம் சிறந்த முறையில் பட்டியலிடலாம்.

பொதுவான புவியியல்: பொதுவதன நிலப்பரப்பில் வாழும் மக்கள் தேசியத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக புவியியல் கூறைக் கருதுகின்றனர். ஏனென்றால், அத்தகைய மக்கள் ஒரு

பொதுவான கலாச்சாரத்தை வளர்க்க வாய்ப்புள்ளது. நாடுகளை தாய்நாடு அல்லது தந்தை நாடு என்று அழைப்பதற்கும் இதுவே காரணம். மக்கள் தங்கள் நாட்டைப் பற்றிய அடையாளத்தையும் புவிப்பரப்பிலே காண்கின்றனர்.

பொது இனம்: பொதுவான இனம் என்பது ஒரு குறிப்பிட்ட தேசத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்கள் ஒரு சமூக ஒற்றுமையைக் கொண்டுள்ளனர் என்ற கருத்தைக் குறிக்கிறது.

பொதுவான மொழி: ஒரு பொதுவான மொழி என்பது மக்கள் தங்கள் கருத்துக்களை தமக்குள்ளே ஊடாட்டத்தை வெளிப்படுத்த உதவும் தகவல் தொடர்பு மொழியாகும். இது தேசியத்தின் மற்ற அனைத்து கூறுகளுக்கும் அடிப்படையாகும்.

பொதுவான மொழி என்பது பொதுவான இலக்கியம் மட்டுமல்ல, வரலாற்று மரபுகளின் பொதுவான பாரம்பரியத்தையும் குறிக்கிறது.

பொதுவான மதம்: மதமும் தேசியத்தின் முக்கிய அங்கமாகும். ஒரு பொதுவான மதம் என்பது தேசிய உணர்வுக்கு வலுவான ஊக்கமாகும்.

பொதுவான அரசியல் கட்டமைப்பு: கடந்த காலத்திலோ அல்லது நிகழ்காலத்திலோ ஒரு பொதுவான அரசியல் கட்டமைப்பு அல்லது ஓர் அரசு இருப்பது தேசியத்தின் மற்றொரு அங்கமாகும். ஓர் அரசில் வாழும் மக்கள் சட்டங்கள் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதாரக்காரணி: பொருளாதார நடவடிக்கைகள் மக்களை நெருக்கமாக்குகின்றன. வரலாற்று ரீதியாக, பல்வேறு பழங்குடியினர் மற்றும் குலங்களின் இணைப்பின் விளைவாக தேசியம் தோன்றியது என்று வாதிடப்படுகிறது. ஒரு பழமையான சமூகத்தில் தேசியத்தைப் பற்றி சிந்திக்க முடியாது. பொருளாதாரக் காரணிகளால் தேசியம் தோன்றியது என்றும் மார்க்சிஸ்டுகள் நம்புகின்றனர்.

பொதுவான ஆக்கிரமிப்பு: ஐரோ-ஆசிய நாடுகளில் தேசிய இயக்கங்களின் எழுச்சிக்கு பொதுவான ஆக்கிரமிப்பு ஒரு மேலாதிக்கக் காரணியாக இருந்து வருகிறது. அவர்கள் பல்வேறு ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டனர். மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தியதால் பொதுவான ஆக்கிரமிப்பு காரணமாக தேசிய உணர்வுகள் எழுந்தன. இந்தியாவில், பொதுவான காலனித்துவ சுரண்டலின் காரணமாக ஒரு பொதுவான இந்தியத் தேசியம் உருவானது.

பொதுவான அரசியல் அபிலாசைகள்:ஒரு தேசமாக திரள வேண்டும் என்பது தேசியத்தின் முக்கிய காரணியாக அரசியல் அறிஞர்களால் கருதப்படுகிறது. முதல் உலகப் போருக்கு முன்பு போலந்துக்காரர் எப்போதும் போலந்தை தனியரசாக்க விரும்பினர். இதேபோல் ஐரோப்பாவில் பல சிறுபான்மை தேசியங்களிடம் அத்தகைய உணர்வு இருந்தது. அவர்கள் தனிதேசத்தை விரும்பினர். 1919, யூன் 28 இல் பிரான்ஸ்ல் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் (Paris Peace Conference) சுயநிர்ணய உரிமைக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது தேசியத்தை வலுப்படுத்தியது.

(ஆதாரம்: மு.திருநாவுக்கரசு.(2017) தேசியமும் ஜனநாயகமும், ஆகுதி பதிப்பகம், சென்னை, இந்தியா)