October 14, 2026
அரசியல் கட்டுரைகள்

இலங்கையின் கடற்பரப்பில் ஈரானிய எண்ணெய் கப்பல்களும் இலங்கை-அமெரிக்க உறவும்?

இலங்கை அமெரிக்க உறவில் ஈரானிய கப்பல்கள் தொடர்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் உண்டு. அமெரிக்காவின் Wall street Journal வெளியிட்ட ஒரு செய்தியின் அடிப்படையில் இத்தகைய உரையாடல் வலுப்பெற்று வருகிறது. ஈரானின் 270க்கும் மேற்பட்ட கப்பல்களில் 20 இனை அழித்துள்ளது மட்டுமின்றி ஏனையவற்றை திசை திருப்பி நெருக்கடிக்கு உள்ளாக்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகை முக்கிய காரணம் என்பதை உணர முடிகிறது. இது ஈரானின் கடல் படை முக்கியத்துவத்தை இல்லாமல் செய்ய அமெரிக்கா பின்பற்றும் உத்தியாகவே தெரிகின்றது. இலங்கைத் தீவின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து 19(15) கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருக்கும் 47 மேற்பட்ட ஈரானியக் கப்பல்கள் உணவு குடிநீர் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கான வழங்கலை தனியார் வழங்குவதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அப்பால் உள்ள சர்வதேசக் கடற்பரப்பில் சிக்கியுள்ள எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் (Oil Tankers) விவகாரத்தில், இலங்கை அமெரிக்காவின் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரிகிறது. இக் கட்டுரையும் ஈரானிய கப்பல்கள் தொடர்பில் எழுந்திருக்கும் அமெரிக்க இலங்கை இராஜதந்திர நெருக்கடியை தேடுவதாக உள்ளது.

முதலாவது இலங்கையின் இறையாண்மை சார்ந்த விடயம் பொறுத்து உரையாடப்படுகின்ற அம்சம் காவனத்துக்குரியது. 1984 ஆம் ஆண்டு சர்வதேச கடல் சட்டத்தின் (UNCLOS) பிரகாரம் ஒரு நாட்டின் கரையோரவலையம்(Territorial Sea) 12 கடல் மைல் தூரத்தை கொண்டுள்ளது. இப் பகுதி அரசுகளின் இறையாண்மைப் பிரதேசமாகும். இப் பகுதிக்குள் நுழையும் கப்பல்கள் உரிய நாட்டிடம் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அனுமதியளிக்காத கப்பல்கள் மீது ஆந்த நாடு தாக்குதல் செய்ய முடியும் என்றும் அத்தகைய கப்பல்களை கைப்பற்ற முடியும் என்றும் சர்வதேச சட்டம் குறிப்பிடுகிறது. அவ்வாறே அடுத்துரு வலயம் (Contiguous Zone ) என்று அழைக்கப்படும் கரையோரத்தில் இருந்து 24 கடல் மைல் பகுதி நாட்டின் கண்காணிப்புக்கும் சுங்கம், நிதி, குடிவரவு மற்றும் சுகாதாரச் சட்டங்களை அமுல்படுத்த அனுமதிக்கிறது என்றும் சர்வதேச சட்டம் கூறுகின்றது. அவ்வாறே கரையோரத்தில் இருந்து 200 கடல் மைல் தூரம் அந்த நாட்டின் விசேட பொருளாதாரம் வலயம் (Exclusive Economic Zone) என சர்வதேச சட்டம் பிரகடனப்படுத்திவைத்துள்ளது. இப் பகுதியில் உள்ள வளங்களை பயன்படுத்திக் கொள்வதற்கு அந்த நாட்டுக்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையாக எவ்வாறு அளவீடு செய்தாலும் 19 கடல் மைலில் நங்கூரம் இடப்பட்டிருக்கும் ஈரானிய கப்பல் தொடர்பில் இலங்கையின் கரிசனை தவிர்க்க முடியாதது. அதன் 24 கடல் மைலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதும் சர்வதேச விதியை தூதரகங்கள் சார்ந்து பரிமாற்றப்பட்டு இருக்கக்கூடிய உறவின் அடிப்படையில் அதன் தனிப்பட்ட இலங்கையின் இறைமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் பேணப்பட வேண்டியதும் முக்கியமானது. எங்கள் இறையாண்மையையும் அடையாளத்தையும் பாதுகாத்துக் கொண்டே நாங்கள் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறோம். இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில் ஒரு தேவை ஏற்பட்டால், நாங்கள் தேவையான தலையீட்டைச் செய்வோம் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜிதஹேரத் கூறினார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், 19 ஈரானிய எண்ணெய்க் கப்பல்களைக் கண்காணித்து வருவதாக அரசாங்கத்திடம் தெரிவித்தது கவனத்திற்குரியது.

இரண்டாவது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத்தின் அறிவித்தலின்படி அமெரிக்கா எந்த வகையான அழுத்தங்களையும் இலங்கைக்கு வழங்கவில்லை என்பதை தெரிவித்துள்ளார். அமெரிக்கா அத்தகைய எந்தக் கோரிக்கையையும் விடுக்கவில்லை, தலையிடவில்லை அல்லது எங்கள் அரசாங்கத்தின் மீது எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை. எனவே அப்படிப்பட்ட சூழ்நிலை எதுவும் இல்லை. அத்தகைய செய்திகள் பரப்பப்பட்டால், அவை முற்றிலும் தவறானவை என அக்டோபர் 4 இல் தெரிவித்தார். ஆனால் மறுபக்கத்தில் தடைசெய்யப்பட்ட கப்பலுக்கு எரிபொருள், உணவு அல்லது இதர பொருட்கள் போன்ற சேவைகளை வழங்குவது, நிறுவனங்களையும் தனிநபர்களையும் அமெரிக்கத் தடைகளின் அபாயத்திற்கு உள்ளாக்கக்கூடும்; இதில் உரிமையியல் அல்லது குற்றவியல் தண்டனைகளும் அடங்கும் என்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கான ஒரு மூலோபாய சந்திப்பில் இலங்கை அமைந்துள்ளது. இது மகத்தான வாய்ப்பையும் அதே சமயம் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவையையும் கொண்டுவருகிறது என்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் எரிக் மேயர் அறிக்கை ஒன்றில் கூறினார். செப்ரெம்பர் மாதம்(2026) அமெரிக்கத் தூதரகம், தடைசெய்யப்பட்ட கப்பல்களுக்குச் சேவை செய்வதால் ஏற்படும் தண்டனைகளின் அபாயம் குறித்து இலங்கை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்திருந்த போதிலும் ஈரானியக் கொடி ஏந்திய கப்பல்களுக்குச் சேவை செய்வது விவேகமானதல்ல என்று இலங்கைத் துறைமுக அதிகாரசபை கூறியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. இருந்த போதிலும் இலங்கைத் தீவின் கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய்க் கப்பல்களுக்கான விநியோகத்தை நிறுத்துமாறு அமெரிக்கா கொழும்பை வற்புறுத்தியதாகக் கூறப்படுவதை இலங்கை வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது.

மூன்றாவது அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிடுவது போன்று சமகால சர்வதேச அரசியல் ஒழுங்கில் அமெரிக்கா தனித்து விடப்படும் ஒரு நாடாக விளங்குகிறது. காரணம் அமெரிக்கா காட்டுச்சட்டங்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் சர்வதேச விதிகளை மீறி செயல்படுகிறது. கடந்த மார்ச் மதத்தில்(2026) காலித் துறைமுகத்திலிருந்து 19 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்ட ஈரானிய கப்பல் மீது தாக்குதலை நிகழ்த்தி 120 ஈரானிய மாலுமிகளை கொன்றிருந்தது நினைவு கொள்ளாத்தக்கது. இது மட்டுமன்றி தற்போது மாலுமிகளுக்கான அடிப்படைத் தேவைகளை வழங்காது ஈரானின் கடற்படைப் பலத்தை அழிக்க முயலுகிறது. இது முடியாட்சிக்காலப் பகுதியில் செங்கிஸ்கான் போன்ற மன்னர்கள் பின்பற்றிய கொள்கை போன்று தெரிகிறது. அதாவது உணவு மற்றும் அடிப்படை தேவையான குடிநீர் போன்றவற்றை வழங்காது கோட்டைகளையும் கொத்தளங்களையும் முற்றுகையிட்டு கைப்பற்றுவது போன்று உள்ளது. ஈரானையும் அவ்வாறே அடிபணிய வைப்பதற்கு பல முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இது அமெரிக்கா உலக ஆதிக்க முறையில் இருந்து விடுபட்டு போவதற்கான செய்முறையாகவே தெரிகின்றது.

நான்காவது இலங்கை ஈரானோடு நீண்டகால நட்புறவையும் வர்த்தக உறவையும் கொண்டிருக்கின்றது. அவ்வாறான நட்புறவை அமெரிக்காவுடனும் பின்பற்றுகின்றது. சமகாலத்தில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் அமெரிக்காவும் சீனாவும் அதிக கரிசனை செலுத்தும் நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்துக்கு அடுத்ததாக இலங்கை விளங்குகிறது. இதனால் இலங்கையின் வெளிவிவகாரம் அமெரிக்காவுடனும் ஈரானுடனும் சம தூரத்தில் கையாளப்படும் தந்திரோபாயமான அரசுகளாக கருதுகின்றது. ஆனால் ஈரானோடு கொண்டுள்ள உறவினால் அமெரிக்காவின் பொருளாதார தடைக்கும் ஆதித்துக்குள்ளும் இலங்கை அகப்படாமல் இருப்பதற்கும் முயலுவதாகவே தெரிகிறது. ஈரான் இலங்கைக்கு இடையில் நிலவும் தேயிலை-எண்ணெய் வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகின்ற சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கும் இலங்கை தள்ளப்படுவதைத் தவிர்ப்பதும் அமெரிக்கா சார்ந்து இலங்கை பின்பற்றுகின்ற நடைமுறைகளை அல்லது வாய்ப்புகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு உண்டு. இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித கூறினாலும் நடைமுறையில் பாரிய நெருக்கடியாகவே உள்ளமை தெரிகிறது. அப்படியாயின் இலங்கை ஈரானிய மாலுமிகளை வெளிப்படையாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மறாக தனியார்துறை ஊடாகவே ஈரானிய கப்பல்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு கூறுகிறது. இலங்கை அமெரிக்காவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டிருப்பது தவிர்க்க முடியாததாகவே தெரிகிறது. அமெரிக்காவை அனுசரிக்க வேண்டிய தேவையும் இலங்கைக்கும் சர்வதேச நாணயநிதியம் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற எல்லா நிதி வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவை எதிர்கொள்ள வேண்டிய ஒரு சூழல் இலங்கைக்கு உண்டு. அவ்வாறான ரீதியில் அவதானித்தால் இலங்கை அமெரிக்காவுக்கு கட்டுப்பட்டே செயல்படும் நிலை ஏற்படும்.

எனவே இலங்கையின் வெளிவிவகார அமைச்சு எத்தகைய தீர்மானங்களை எடுத்தாலும் நெருக்கடி மிக்க சூழலுக்குள் இலங்கை அகப்பட்டு இருக்கின்றது என்பதை தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் இறுதியிலும் இறுதியாக அமெரிக்கா பக்கம் இலங்கை சாயும் நிலை தவிர்க்க முடியாதது. ஆனால் இலங்கை கடந்த மார்ச் மாதம் ஈரானியக் கப்பல் தொடர்பில் ஏற்பட்ட நெருக்கடியை வெற்றிகரமாக கையாண்டது போல் தற்போதைய சூழலையும்; தந்துரோபாய ரீதியில் கையாண்டு வெற்றிகரமாக அமெரிக்காவிடம் சரணடையும்; என்பது தெளிவாகத் தெரிகிறது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

(நன்றி:தினக்குரல்)