09.10.2026 அன்று தனது 70 ஆவது வயதில் அமரத்துவம் அடைந்த அரசியல் ஆய்வாளர் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவர், ஓய்வு பெற்ற அரசறிவியல் ஆசிரியர், சிவில் சமூக செயல்பாட்டாளர் மற்றும் சட்டத்தரணியான சி.அ. ஜோதிலிங்கம் அவர்களின் அரசியல் பயணம் ஈழத்தமிழர் மத்தியில் தனித்துவமான அடையாளத்தைத் தந்துள்ளது. நீண்டும் நிலைப்படுத்தக் கூடிய எண்ணங்களைக் கொண்டது. ஜோதிலிங்கம்-70 (31.08.1956-09.10.2026) என்பது அவரது ஆயுள்காலத்தை மட்டும் குறிப்பிடுவதற்கானதல்ல. ஈழத்தமிழரது அரசியலின் வகிபாகத்தையும் நினைவு கொள்ளத்தக்கது. சிறு வயதிலிருந்து அமரத்துவம் அடையும் வரையும் தமிழ் தேசிய அரசியல் ஈடுபாடும் தமிழ் தேசியக் கட்சிகளை நோக்கிய பார்வையும் வலிமையானதாக அவரிடம் இருந்ததுள்ளது. சமூக விடுதலையும் அரசியல் விடுதலையும் ஓரினத்தின் விடுதலைக்கான வேர் என்பதை எண்ணமாகக் கொண்டு செயல்பட்டவர். ஜோதிலிங்கம் ஆயுதப் போராட்டக் காலத்திலும் அதன் பின்னான காலப் பகுதியிலும் தமிழ்த் தேசியத்தோடு பயணித்த ஒரு தமிழ்த் தேசியவாதியாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். எத்தகைய நெருக்கடி வந்த போதும் தனது தமிழ் தேசிய நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்காது உழைத்தவராக செயல்பட்டவர். அவரது அரசியல் பங்களிப்பினை விளங்கிக் கொள்ளப்படுவதற்காக இப் பதிவு மீட்கப்படுகிறது.
அமரர் ஜோதிலிங்கம் ஈழத்தமிழர் அரசியலில் கருத்தியல் ரீதியிலும் நடைமுறை சார்ந்தும் செயல்பட்ட ஒருவர். அவரது கருத்துநிலையை விலக்கிவிட்டு ஈழத்தமிழரது அரசியலை அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய அரசியலை அளவீடு செய்வது கடினம். தமிழ் தேசிய களத்தில் நின்று கொண்டு இலங்கை தீவின் அரசியலையும் பிராந்தி மற்றும் சர்வதேச ஒழுங்கையும் அடையாளப்படுத்திய ஒரு தமிழ் தேசியவாதியாகக் காணப்பட்டவர். அவரது அரசியல் பார்வை அறிவியல் ரீதியான மூலோபாயத்தையும் இலக்கை அடைவதற்கான தந்திரோபாயத்தையும் கொண்டது. அவரது படைப்புக்களும் அவரது உரைகளும் எப்போதும் கோட்பாட்டு வடிவத்தில் நின்று கொண்டு நடைமுறை சார்ந்த அரசியலை விவாதிக்கின்ற எதார்த்தம் மிக்க தேடலை அதிகம் பிரதிபலிக்கின்ற ஆய்வுகளாக காணப்பட்டன.
தமிழ்த் தேசிய அரசியலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசு கட்சி, தமிழ்த் தேசிய காங்கிரஸ் என்ற மரபுக்குள் வளர்ந்த ஜோதிலிங்கம் ஆயுதப் போராட்ட அரசியலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடும் பின்னர் விடுதலைப்புலிகளோடும் சேர்ந்து பயணித்த வரலாற்கைக் கொண்டவர். அது மட்டுமின்றி அத்தகைய கருத்துக்களை அங்கீகாரம் மிக்கதாக மாற்றி சமூகத்தில் ஆயுதப் போரில் ஈடுபட்ட அனைத்து ஆயுத போராட்ட அமைப்புகளையும் அவர்களது கருத்து நிலைகளையும் அரவணைத்து செயல்பட்டவர். ஆயுதப் போராட்ட காலத்தின் எழுச்சிகரமான சூழலில் பல்லைக்கழக கல்வியில் ஈடுபாடு கொண்ட ஜோதிலிங்கம் ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு எதிராகவும் அவற்றின் விரோதமான நடவடிக்கைகளுக்கு தீவிர எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியவராக காணப்பட்டவர். ஆயுதப் போராட்ட அமைப்புக்களுக்கு எதிராக பகிரங்கமான கண்டனங்களையும் வெளிப்படுத்தியவர். தான் நிராகரித்த அமைப்புகளை நோக்கி அவர்களது சரியான பாதையை ஏற்றுக் கொண்டதுடன் அவற்றுடன் இணைந்து தமிழ் தேசியத்தை வலுப்படுத்தியவர். ஈழத்தமிழரிடம் எழுந்த அனைத்து ஆயுதப் போராட்ட அமைப்புக்களும் விடுதலை என்ற ஒற்றை இலக்குக்கானது என்பதை அங்கீகரித்த ஒருவராக விளங்கியவர். அதே நேரம் அந்த அமைப்புகளின் அடாவடித் தனங்களையும் நிராகரிப்பதில் அவர் ஒருபோதும் பின்நின்றது கிடையாது. போருக்கு பிந்திய ஈழத்தமிழருடைய அரசியலை வடிவமைப்பதில் அவர் கணிசமான பங்கு வகித்திருந்தார். அவரது அரசியல் பயணத்தில் 2009க்கு பின்னான காலம் அதீத வெளிப்படைத் தன்மையும் தீவிரத் தன்மையும் கொண்டிருந்தது. எழுக தமிழ்-1,2 என்பவற்றிலும் அதன் பின்னர் முன்வைக்கப்பட்ட தமிழ் பொதுவேட்பாளர் என்ற கருத்தியலிலும் நடைமுறையிலும் அதிகம் முன்னிறுத்திக் கொண்டு ஈழத்தமிழரது போராட்டக் களங்களை வடிவமைத்துக் கொண்டவர். சிவில் தரப்புகளிடமிருந்து எழக்கூடிய நியாயமான கருத்து நிலைகளின் முன் கட்சிகளின் நடவடிக்கைகளை விமர்சனத்திற்கு அப்பால் ஒன்றிணைப்பதில் ஈடுபாடு காட்டியவர். அவரது அரசியல் பயணத்தில் விடுதலைப் புலிகளையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் அதிகம் நேசித்தமைக்கு அடிப்படை அவர்களது தமிழ் தேசியப் பற்றுதியோகும். அது மட்டுமன்றி அவர் அதிகம் உச்சரித்த ஓரம்சமாக ஈழத்தமிழருக்கான தேசிய இயக்கம் ஒன்றின் அவசியம் பற்றியதாக விளங்கியது. அத்தகைய விவாதத்தை இறுதி காலம் வரையும் முனைப்புடன் வெளிப்படுத்தியிருந்தார். ஈழத்தமிழரது விடுதலைக்கு தேசிய இயக்கம் ஒன்றே வழி என்று பல மேடைகளில் உரையாற்றியதுடன் அதற்கான எழுத்துக்களையும் உழைப்பையும் தந்திருந்தார்.
அவரது பார்வையில் மலையகம் தனித்துவமான இடத்தை பெற்றிருந்தது. அவர் கொழும்பில் வசித்த காலப்பகுதிலும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பின்னரும் மலையக மாணவர்களின் கல்வி சார்ந்தும் மலையக கருத்தியலாளர்கள் சார்ந்தும் அதிக கவனம் கொண்டிருந்தார். ஈழத்தமிழரின் போராட்டத்தை நேசித்த அளவுக்கு மலையகத்தினுடைய விடுதலை பற்றியும் மலையக மக்களின் சுயநிர்ணயஉரிமை பற்றிய எண்ணங்களையும் அதிகம் வலியுறுத்தி இருந்தவர். மலையக மக்களின் அரசியல் பற்றி மிகத் தெளிவான கருத்து நிலையை கொண்டு இருந்த ஜோதிலிங்கம் அவர்கள் வெற்றிகரமான மலையக கட்சி கட்டமைப்புகளையும் இயக்கங்களையும் ஆதரித்து அரவணைத்து செயல்பட்டவராக காணப்பட்டார்.
அவ்வாறே இலங்கைவாழ் முஸ்லிம்கள் தொடர்பிலும் ஈழத்தமிழர் மத்தியில் எழுந்திருக்கும் அதீதமான விமர்சனங்களை கடந்து வடக்கு கிழக்கு ஐக்கியத்தையும் அதில் ஒரு தேசிய இன கூறாக முஸ்லிம்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியவராகக் காணப்பட்டார். வடக்குக் கிழக்கு தாயகத்தில் தமிழர் முஸ்லிம்களையும் ஏனைய சிறுபான்மை மக்களையும் அவர்களது தேசிய அடையாளத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியவர். அவர்கள் சுயநிர்ணயத்திற்கு உரித்துடையவர்களாகவும் தேசிய இனமாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற விவாதத்தை அதிகம் வேண்டியவராக காணப்பட்டார். சமஸ்டி முறைமையையும் அதன் ஈடுபாட்டின் அவசியத்தையும் இலங்கை தீவில் அதிகம் உணர்ந்திய ஆய்வாரர் ஜோதிலிங்கம் கிழக்க்கில் நிலத்தொடர்ச்சியற்ற தமிழர் தாயகத்தை முதன்மைப்படுத்தியதோடு வடக்கு கிழக்கு தாயகத்தை பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் வாழுகின்ற போதும் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் கரிசனை உள்ளவராக தனது கருத்துநிலையினை கொண்டிருந்தார்.
ஜோதிலிங்கத்தினது எழுத்துகளில் பிரதானமானதாக பவிசார் அரசியல் சார்ந்தது. குறிப்பாக பிராந்திய சக்தியான இந்தியாவினதும் சர்வதேச சக்திகளின் திறவுகோலாக தமிழகம் அமைய வேண்டும் என்பதில் அதிக ஈடுபாடு காட்டியவராக காணப்பட்டார். பிராந்திய அரசியல் களத்தின் முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்துகின்ற விதத்தில் ஈழத்தமிழருடைய அரசியலை அதிகம் பிராந்திய தளத்திலும் இந்துசமுத்திர அரசியல் தளத்திலும் முதன்மைப்படுத்தி தனது ஆய்வுகளை அதிகம் வெளிப்படுத்தியிருந்தார். இந்தியாவையும் இந்து சமுத்திரத்தையும் மையப்படுத்திய உலக அரசியலின் பார்வையை ஈழந்தமிழர்கள் அணுக வேண்டும் என்ற எண்ணத்தை அதிகம் பதிவு செய்பவராக காணப்பட்டிருந்தார்.
அரசியல் ரீதியில் தீவிரமான உணர்ச்சிவசமான கருத்து நிலை அதிகம் கொண்டவரும் அதே சந்தர்ப்பத்தில் எல்லாவற்றுக்கும் பதில் அளிப்பவராகவும் ஈழத்;தமிழர் அரசியல் சார்ந்து எழுகின்ற கேள்விகளுக்கு வரலாற்று ரீதியில் புரிதலை ஏற்படுத்துவராகவும் காணப்பட்டார். அவரது அரசியல் ஈடுபாட்டில் அதீதமாக ஈழத்தமிழரின் தேசிய ஒருமைப்பாடு ஐக்கியம் தேசிய விடுதலைக்கான இயக்கத்தின் அவசியப்பாடு போன்றவற்றை அதிகம் வலியுறுத்தியவராக இருந்தார் இலங்கைத் தீவுக்குள் காணப்படும் நட்பு சக்திகள் மீது அதிக கரிச்சனை கொண்டதோடு புலம்பெயர் தளத்திலுள்ள சக்திகளுடன் அதிக ஈடுபாடு கொண்டவராக காணப்பட்டார். அது மட்டுன்றி தென்னிலங்கையோடும் மலையகத்தோடும் இஸ்லாமிய சமூகத்தோடும் நட்புரிமையுடன் ஈழத்தமிழர் வாழ வேண்டும் என்ற அபிலாசை கொண்டவராக விளங்கியவர். ஈழத்தமிழருக்கான நட்பு சக்திகளை அடையாளம் காண்பதில் கரிசனை கொண்டிருந்த ஜோதிலிங்கம் அவர்கள் இலங்கைத் தீவின் ஈழத்தமிழருக்கான தனித்துவ அடையாளங்களை அங்கீகரிப்பவராக அத்தகைய சக்திகள் காணப்பட வேண்டும் என வாதிட்டவர். அவரது அரசியல் சிந்தனை என்ற படைப்பும் உயர்தர மாணவர்களுக்கான அரசறிவியலை கற்பதற்கான ஆய்வு நூல்களும் பாடநூல்களும் பொதுத்தளத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்கான அடிப்படைகள் பற்றிய ஆய்வுகளும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த புலமைசார் ஆய்வுகளாக அமைந்திருந்தன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் வருகை விரிவுரையாளராக இருந்த காலப்பகுதி முழுவதும் அதன் பின்னரும் அவரது படைப்புகள் மாணவர்களின் தேவைகளுக்காக அதிகம் பயன்படுத்தப்பட உதவியுள்ளது. அவரால் உருவாக்கப்பட்ட நூலகம் அரசறிவியல் மாணவர்களின் ஆய்வு முயற்சிகளுக்கு பெரும் பங்காற்றியது. அவர் மேற்கொண்டு நடத்தி வரும் பெட்டகம் எனும் ஆவணக்காப்பகம் தனித்துவமான படைப்புக்களைக் கொண்டதாக உள்ளது. முதுமாணி ஆய்வு மாணவர்களுக்கும் இளங்கலைமாணி ஆய்வு மாணவர்களுக்கும் பெரும் பங்காற்றியதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் நூலகப் பகுதிக்கு ஒரு தொகுதி நூல்களையும் இதழ்களையும் வழங்கி இருந்தமை அவரது அறிவியல் ரீதியான பங்களிப்பாக விளங்குகிறது. அதுமட்டுமன்றி மீதி நூல்களையும் பல்கலைக்கழகத்தின் தமிழில் ஆய்வு பகுதிக்கு வழங்குவதற்கான திட்டமிடலை அவர் கொண்டிருந்ததோடு அரசறிவியல் துறை மாணவர்களின் எதிர்கால ஆய்வுகளுக்கான திட்டமிடலையும் அவர் கொண்டிருந்தார்.
அமரர் ஜோதிலிங்கத்தினது படைப்புக்களும் உரைகளும் ஆய்வுகளும் வெளியீடுகளும் ஈழத்தமிழ் சமூகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதிலும் அத்தகைய கருத்து நிலையில் இருந்து ஈழத்தமிழர் சமூகம் கட்டி வளர்க்கப்பட வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டவராக காணப்பட்டார். தொடர்ச்சியாக இளம் தலைமுறையினை ஊக்குவிக்கும் மனோநிலையைக் கொண்டிருந்த ஜோதிலிங்கம் அவர்கள் தனக்கு பின்னே ஒரு சமூக அடையாளத்தை தரக் கூடியவர்களை இனம் கண்டு அவர்களை வழிநடத்தி அவர்களை முதன்மைப்படுத்துவதிலும் அக்கறை கொண்டிருந்தார். அவரது இழப்பு அரசறிவியல் புலமைக்கு மட்டுமின்றி ஈழத்தமிழ் சமூகத்தின் அறிவியல் ரீதியான தேடலுக்கும் பெரும் இழப்பீடாகவே விளங்குகிறது. அவரது மனிதாபமான செய்முறை அறிவியல் ரீதியான பங்களிப்பு அரசியல் ரீதியில் ஈழத்தமிழர் அரசியல் சார்ந்த வளர்ச்சிக்கான பங்களிப்பு என எல்லா தளத்திலும் அவரது பார்வையும் அணுகுமுறையும் தனித்துவமானது. பேராசிரியர்களான சிவத்தம்பி, நித்தியதானந்தன், அம்பலவாணர் சிவராசா, மூத்த அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு மற்றும் விரிவுரையாளர் சிவயோகலிங்கம் போன்றவர்களது வழிகாட்டலை எப்போதும் நினைவு கொள்பவராக காணப்பட்டார்.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி.யாழ்.தினக்குரல்)
