தென் இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு பௌத்த பிக்குகளின்; போராட்டங்களை எதிர் கொண்டுள்ளது. கொழும்பிலிருந்து கண்டிக்கும் கண்டியிலிருந்து கொழும்பிக்;குமான பாதயாத்திரை என்பது இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பங்களையும் இனரீதியான அழிப்புகளையும் ஏற்படுத்திய யாத்திரைகளாகவே கடந்தகாலங்களில் அமைந்திருக்கின்றன. 1957 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் பண்டரநாயக்காவுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட பண்டா-செல்வா உடன்படிக்கை கிழித்தெறிவதற்கு கண்டிப்பாத யாத்திரை (Colombo-to-Kandy Protest March)முக்கியமானதாக அமைந்திருந்தது. தமிழ் மக்களுக்கான உரிமை வழங்கப்படக் கூடாது என்பதில் பௌத்த பீடங்களை எப்போதும் கரிசனை கொண்டிருக்கின்றன. மீண்டும் அத்தகைய வெளிப்படையான உணர்வுகளோடு அன்றி தமது பௌத்த பிக்கு ஒருவரது காவியுடை களற்றியது தொடர்பில் தொடங்கிய போராட்டம் பின்னர் ஞானசாரதேரரை மீட்டெடுப்பதற்காக போராட்டமாக மாற்றப்பட்டது. ஆனால் போராட்டத்தில் தமிழர் பற்றிய எதிர்ப்பு உரையாடல்கள் பௌத்த பீடங்களின் தலைமைக்கு தகுதியான பிக்குகளால் ஊடகங்களுக்கு முன்வைக்கப்பட்டிருந்தது. சட்டத்தின் ஒழுங்கை நிலைநாட்டு விதத்தில் எடுக்கப்பட்ட முயற்சி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தாலும் போராட்டம் தொடர்கிறது. ஆனால் போராட்டமும் அதன் விளைவும் ஈழத்தமிழர்களால் உற்று நோக்கப்பட வேண்டிய ஒன்றாகவே தெரிகின்றது. அதனை விரிவாக நோக்குதல் அவசியமானது.
முதலாவது இப் போராட்டத்தின் பிரதான நோக்கம் ஞானசார தேரர் அணிந்திருந்த காவியுடை அகற்றப்பட்டது தொடர்பானது. இலங்கையில் சிறைச்சாலை நிலையியல் கட்டளை(Prisons Standing Order) 550 இன் பிரகாரம் மூன்று முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய குற்றவாளியாகக் காணப்பட்ட கைதிகள் சிறைச்சாலை உடையிலேயே நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்படக் கூடாது. மூன்று ஆண்டுகள் அல்லது அதற்குக் குறைந்த சிறைத்தண்டனை பெற்ற கைதிகள், தங்களுடைய தனிப்பட்ட உடைகளை அணிந்து சிறைச்சாலையிலிருந்து வெளியேற முடியும். மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை பெற்ற கைதிகள் சிறைச்சாலையிலிருந்து வெளியேறும் போது விடுவிக்கப்படும் கைதிகளுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்ட சிறைச்சாலை பொருத்தமான ஆடைகளையே அணியச் செய்ய வேண்டும். இதற்கமைய ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகள் என்பதால் அவரைத் தனிப்பட்ட உடையில் (காவி) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது. ஆனால் 16.10.2026 அன்றைய 550ஆவது பிரிவின் திருத்தத்தின் பிரகாரம் பௌத்த பிக்குகள் காவி உடையில் சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் சுற்றறிக்கை குறிப்பிடுகிறது. பிக்குகளுடன் அரசாங்கம் நடத்திய கலந்துரையாடல்களின் போது முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாகக் கூடிய விசேட குழு நிலையான கட்டளைகளைத் திருத்தியமைத்தது. மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை பெற்ற பிக்கு ஒருவருக்கும் தனது நிகாய அல்லது பிரிவின் அனுமதியுடன் சிறைச்சாலையிலிருந்து வெளியேறும் போது காவியை அணிந்து வெளியேறுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு பரிந்துரை செய்துள்ளது. இப்பரிந்துரைக்கு அமைவாக அணியும் ஆடைப் பிரிவுக்குள் காவியை உள்ளடக்குவதன் மூலம் சிறைச்சாலை நிலையான கட்டளைகளில் இதுவரை நிலவிவந்த குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாங்கம் அவசரமாய் சட்ட திருத்தப் பிரகாரத்தின்படி காவி உடை தொடர்பான பிரச்சினைக்கான தீர்வை வழங்க முன்வந்திருந்தது. இதனால் பிக்குகள் தமது போராட்டத்தின் அடுத்த இலக்காக ஞானசாரதேரரின் விடுதலையை கோரிக்கையாக மாறினர். அத்தகைய போராட்டத்தில் இலக்கை சட்டரீதியல் அணுகுவது என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுத்த முடிவு போராட்டத்தின் பலவீனத்தை தோற்றுவித்த போதும் பௌத்த பீடங்களுக்கு இடையில் முரண்பாடுகளும் மக்களுடைய ஆதரவின்மையும் இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. கடந்த காலங்களில் அரசாங்கங்கள் பௌத்த பீடங்களை தூண்டிவிட்டு போராட்டங்களை நிகழ்த்தியிருந்தன. அதனால் அவை திரட்சிமிக்க போராட்டங்களாக மாறியதோடு தீவிர இனவழிப்பிற்கும் வழிவகுத்திருந்தது. அப்போதைய எதிர்கட்சிகளின் தீவிரத்தன்மையும் பௌத்தமத நிறுவனங்களின் போராட்டங்கள் வெற்றி பெற்றிருந்தன. தற்போதைய எதிர்க்கட்சிகளின் பலவீனமும் பிக்குகளின் போராட்டத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக தெரிகிறது. ஆனால் இது இலங்கை தீவின் அரசியலில் பௌத்த பீடங்களின் எல்லை எது என்பதை உணர்த்தியிருந்ததோடு இப் போராட்டத்தை முடக்கிய இந்த அரசாங்கத்தின் நிலைத்திருக்கும் சாத்தியம் வாய்ப்புள்ளதாகவே உணரப்படுகிறது. அதே வேளை எதிர்க்கட்சிகளின் நகர்வு தோல்வி அடைந்திருக்கிறது. இலங்கை தீவின் எதிர்க்கட்சிகளின் பலவீனமும் ஆளுமையற்ற தலமைகளும் ஆளும் தரப்பின் பலமும் பௌத்தமதப் பீடங்களில் போராட்டங்களுக்கு தோல்விகரமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது இப் போராட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானதாக திசை திருப்ப முடியாத முகத்திரமற்ற சூழல் ஒன்று காணப்படுகிறது. ஆயுதப் போராட்டத்தின் முடிவு விடுதலைப் புலிகளின் முடிவு என்பன இப் போராட்டத்தை தமிழர் மீது தூண்டி விடுவதற்கான முகாந்திரம் இல்லாத சூழலே போராட்டத்தின் தோல்விக்கு இன்னுமொரு பிரதான காரணியாக தெரிகிறது. ஆனால் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவது பற்றிய உரையாடலும் சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்குரிய கைதியின் அனோஜனின் மரணதண்டனை குறைப்பும் பேசுபொருளாக பௌத்த பீடங்களின் பிரதான பிக்குகளினால் உரையாடப்பட்டது. இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பதற்கு பௌத்த பீடங்களை தூண்டி விட்டு தமிழ் மக்களுக்கு எதிராக அத்தகைய திசைதிருப்பலை முதன்மைப்படுத்தி பாரிய அழிவுகளை செயல்படுத்தி இருக்கின்றன. இளம் தலைமுறை பிக்குகள் கூட தமிழர்களுக்கு எதிராகவும் விடுதலைப் புலிகளின் கடந்த கால நடவடிக்கைகளுக்கு எதிராகவும் உரையாடுகின்ற தன்மை பௌத்த பீடங்களிடம் இன்னுமே காணப்படுகிறது. இது இலங்கை தீவின் பௌத்த கலாச்சாரத்தில் மீளமுடியாத இன உணர்வின் அங்கமாக அடையாளப்படுத்தப்படுகிறது. இலங்கைதீவு பௌத்த பீடங்களின் இனவாதங்களினாலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுகின்ற தரப்புகளாலும் கட்டி வளர்க்கப்பட்ட ஒன்றாகவே விளங்குகிறது. அரசுகள் பௌத்த மதத்தின் பேராலும் இனவாதத்தின் பேராலும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை உணர்த்துகிறது. இத்தகைய அரசியல் கலாச்சாரத்தின் செல்நெரியை உடைப்பது என்பது சாதாரணமான விடயமாக தென்படவில்லை. தற்போதைய ஜே.வி.பி. ஆளும் அரசாங்கம் தற்காலிகமான தீர்வுகளே முன்னெடுத்துச் செல்கிறது. இவற்றை நிரந்தரமான தீர்வுகளாக மாற்றுகின்ற செய்முறை ஒன்றை அரச மட்டத்தில் அரசாங்கங்கள் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்துகிற போது மட்டுமே இதில் ஒரு மாற்றத்தை கண்டு கொள்ள முடியும். கண்டியிலிருந்து பாதயாத்திரை தொடங்குகிற போது அதன் முடிவு அபாயமானதாக அமையும் என்ற எதிர்பார்ப்பையோடு இந்த போராட்டத்தை தொடங்கியவர்கள் முன்னெடுத்திருந்தார். ஆனால் துரதிஸ்டவசமாக இந்த அரசாங்கம் அவர்களை தடுத்து நிறுத்தி தற்காலிக நெருக்கடியை கொடுத்திருக்கின்றது. ஆனால் இதன் விளைவு மீளவும் இன்னொரு சூழலுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் அல்லது இன்னொரு அரசாங்கத்துக்காக காத்திருக்கும் ஒரு வரலாற்றை பௌத்த பீடங்களும் பௌத்த சங்கங்களும் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு போராட்டத்தில் பிக்குகள் வெளிப்படுத்திய உரைகளின் உள்ளடக்கங்கள் உணர்த்துகின்றன.
எனவே இலங்கைத்தீவின் அரசியல் வரலாறு முழுவதும் பௌத்த பீடங்களே அரச கட்டமைப்புக்களின் வடிவங்களை உருவாக்கியிருந்தன. இலங்கையின் அரசு பௌத்தமத அரசாகவே காணப்படுகிறது. அதனை பௌத்த பிக்குள் வலியுறுத்துகின்றனர். இது பௌத்த நாடு என முழக்கமிடுகின்றனர். அதிலிருந்து ஒரு தற்காலிக சூழலை ஜே.வி.பி. அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது. மக்களுடைய ஆதரவின்மையும் பலவீனமான எதிர்கட்சியின் சூழலும் ஈழத்தமிழர் மத்தியில் பலமான கட்டமைப்புகள் இல்லாத தன்மையும் பிக்குகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உதவி இருக்கின்றது. அதனைக் கடந்து இது ஓர் அரசியல் கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அனுபவம்வாய்ந்த பிக்குள் முதல் இளம் பிக்குகள் வரை தமிழர்களுக்கு எதிரான எண்ணங்களையும் உணர்வுகளையும் இப் போராட்டத்திலும் பிரதிபலிப்பவர்களாகவே செயல்பட்டனர். இதுவே ஈழத்தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சமாக விளங்குகிறது. பிக்குகளின் போராட்டத்திற்கு எதிரான மக்களின் ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவான போராட்டம் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதே பிரதான கேளிவியாகும்.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
(நன்றி:யாழ்.தினக்குரல்)
