அரசியல் கட்டுரைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் ஈழத்தமிழருக்கான வாய்ப்புக்கள்

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி முன்னோக்கி செல்கிறது என்ற எண்ணம் ஏற்பட தோன்றுகிறது. தமிழகத்தின் ஆட்சியின் பிரதிபலிப்புகள் ஈழத்தமிழரின் இருப்பையும் அதற்கான பலத்தையும் உத்தரவாதப்படுத்தும் என்பது மறுக்க முடியாத யதார்த்தமாகும். யதார்த்தத்தை நோக்கி சமகாலத்தை வடிவமைப்பது தான் அரசியல் என வரலாறு கூறுகிறது. அனுபவத்திலும் முன்னெடுக்கக் கூடிய அறிவு பூர்வமான எண்ணங்களிலும் இருந்தே ஈழத் தமிழர்கள் தமிழக அரசை அணுகுதல் வேண்டும். காணப்படும் பொருளைக் கொண்டு அறிவை கருவியாக வைத்து சாத்தியமான செயல்பாட்டை முன்னெடுக்குமாறு தத்துவ அறிவு கூறுகிறது. தமிழக அரசை ஈழத் தமிழர்கள் கடந்து செல்ல முடியாது என்பதையும் அதன் ஒத்துழைப்பும் பலமும் நேரடியாக இல்லாது விட்டாலும் மறைமுகமாகவேனும் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். புதிதாக தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி ஈழத்தமிழர்களுக்கு கொடுத்துள்ள வாய்ப்புகளை தேடுவதாக இக் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலாவது வாய்ப்பு, தமிழகத்தில் ஆட்சிக்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகமும் அக்கட்சியின் முதலமைச்சர் விஜய்யும் ஈழத்தமிழர்களின் அரசியல் ஈடாட்டத்தில் புதியவர்கள். அ.தி.மு.க-தி.மு.க-பா.ம.க-ம.தி.மு.க ஆகிய மரபிலிருந்து வேறுபட்டவர்கள். சினிமா மரபுக்குள் இருந்து வந்தவர்கள். அதனால் அத்தரப்போடு அணுகுவதும் புரிதலை ஏற்படுத்துவதும் சுலபமானது. முன்னைய ஆட்சியாளர் போன்று கடந்தகால பலத்தையோ பலவீனங்களையோ அதிகம் கொண்டிராதவர்கள். கடந்தகால முரண்பாடுகளை முதன்மைப்படுத்தக் கூடியவர்கள் அல்லாதவர்கள். அது மட்டுமல்ல அவற்றைச் சார்ந்து எண்ணங்களை கொள்ளாதவர்கள். அத்தகைய புதிய அணியோடு உரையாடுவதும் விடயத்தை எடுத்துச் செல்வதும் இலகுவானது.

இரண்டாவது வாய்ப்பு, ஈழத் தமிழர்களின் அரசியல் பற்றுறுதியோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதிய தமிழக அரசாங்கத்தின் பங்காளர்களாக உள்ளனர். அக்கட்சியின் தலைமை திருமாவளவன் அறிவுபூர்வமாக ஈழத்தமிழர் அரசியலை புரிந்து வைத்துள்ளவர். அத்துடன் இடதுசாரிகள் முக்கிய வகிபாகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் கொண்டுள்ளனர். ஏறக்குறைய இரு தரப்பினரும் ஈழத்தமிழரின் அரசியலோடு அதிக பரீட்சயம் கொண்டவர்கள். மற்றும் ஈழத்தமிழர் சார்ந்து புரிதல் கொண்டவர்கள். சமகாலத்தில் ஈழத்தமிழர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை பற்றிய புரிதலையும் கொண்ட தரப்பினர் அடிப்படையில் இது ஒரு வாய்ப்பான சூழலைத் தந்துள்ளதாவே தெரிகிறது. மே 18 தொடர்பில் விடுதலைச் சிறுத்தைகளின் உறுப்பினர் வன்னியரசு சட்டசபையில் ஆற்றிய உரை கவனத்துக்குரியது.

மூன்றாவது வாய்ப்பு, ஈழத்தமிழரின் அரசியலோடு அதிகம் பரீட்சையம் கொண்ட அ.தி.மு.க-தி.மு.க என்பன வலுவான எதிர் கட்சிகளாகவும் தரப்புகளாகவும் காணப்படுகிறன. அதாவது அறுதிப் பெரும்பான்மை இல்லாத தமிழக வெற்றி கழகத்தின் பங்குதாரராக விளங்குகின்ற இடதுசாரி கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் தி.மு.க.வின் கூட்டணியில் இருந்து கொண்டே ஆட்சியின் பங்குதாரராக உள்ளனர். அது மட்டுமல்ல அ.தி.மு.க. வில் ஒரு சாரார் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை ஆதரிக்கின்றனர். அத்தகைய அரசியல் கலாச்சாரம் ஒன்றை தமிழகம் அடைந்திருக்கிறது. முதலமைச்சர் தனது பதவியை ஏற்ற பின்னர் தனித்துவமான தலைவர்கள் எல்லோரையும் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட விடயம் அரசியலின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. முதலமைச்சர் அரசியலில் முதுர்ச்சியற்றவராயினும் அவரது நடத்தை முதுர்ச்சியைக் காட்டுகிறது. அதற்குரித்தான ஆலோசகர்களை அக் கட்சி கொண்டுள்ளது. இது தமிழக வெற்றிக் கழகத்தின் அனுபவத்தின் பக்கத்தை தெரியப்படுத்துவதோடு ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கிறது. இத்தகைய சூழல் என்பது ஈழத்தமிழர்களின் அரசியலில் முக்கியமான பலத்தை தந்திருக்கின்றது.

நான்காவது வாய்ப்பு, ஓர் ஆசனத்தையும் பெறாத அதே நேரத்தில் ஈழத்தமிழரின் அரசியலோடு அதிக ஈடுபாட்டு காட்டுகின்ற நாம் தமிழர் கட்சியின் இருப்பு முக்கியமானதாக உள்ளது. தோல்விக்குப் பின்னரும் ஈழத்தமிழருக்கான ஆதரவிலிருந்து விடுபடாது அதே மூச்சோடு பயணிக்க திட்டமிடுகிறதென்பது ஈழத்தமிழருக்கு பலமான செய்தியாகும். நாம் தமிழர் கட்சி ஈழத்தமிழருக்கான ஆதரவை தமிழகத்தில் உருவாக்குவதற்கு முனைப்பு காட்டி வருகிறது. அதாவது ஈழத்தமிழரது அரசியலை தமிழகத்தில் மயவாக்கம் செய்வதில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக பங்குள்ளது. அக்கட்சியின் முனைப்பு ஈழத்தமிழர்க்கு வாய்ப்பான ஒரு களமாகவே தென்படுகிறது. ஈழத்தமிழர் மேற்கொள்ள முடியாதததை நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறது.

ஐந்தாவது, வாய்ப்புக்களின் மறுபக்கங்கள் எல்லோராலும் கட்டமைத்துக் கொள்ள முடியும். போலியான, பொய்யான, பொருத்தம் இல்லாத, பலவீனமான தர்க்கங்களையும் விவாதங்களையும் முன்னிறுத்தி வாய்ப்பை இல்லை என்று விவாதிக்க முடியும். குறிப்பாக ஈழத்தமிழரின் மீதான முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காங்கிரஸ் காரணம் என்ற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருக்க முடியும். அத்தகைய காங்கிரஸ்ன் ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருப்பதனால் தமிழக வெற்றி கழகம் மீதும் முதலமைச்சர் விஜய் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்ற விவாதம் நியாயமானதாகவே தென்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆனாலும் பாரதிய ஜனதாக் கட்சியானாலும் ஈழத்தமிழர்களின் தனி தேசம் அமைப்பது இந்தியா நலன் எவ்வாறு உள்ளது என்பதிலேயே அத்தகைய தீர்மானத்தின் அர்த்தம் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்கள் கருதுவது போல் தனியரசுக்கான அங்கீகாரத்தையோ சுயாட்சிக்கான அங்கீகாரத்தையோ இறைமைக்கான அங்கீகாரத்தையோ இந்தியா மட்டுமல்ல உலகத்தில் எந்த அரசும் ஈழத்தமிழருக்காக முன்வந்து வழங்கிவிடாது. விடுதலைக்கான போராட்டத்தையும் அதற்குரிய அவசியபாட்டையும் ஒன்றிணைவையும் ஈழத்தமிழர்கள் புலத்தில் சாத்தியப்படுத்த தவறுகின்ற பட்சத்தில் ஈழத்தமிழருக்கான தேசிய அடையாளம் காணாமல் போகும். ஏறக்குறைய 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாரதிய ஜனதா கட்சியால் நேரடியாக ஈழத்தமிழருக்கு எத்தகைய வாய்ப்புகளையும் சாத்தியப்படுத்த முடியவில்லை. காங்கிரஸ் ஈழத்தமிழரை அழித்தொழிப்பதில் பங்கெடுத்தது போன்று முள்ளிவாய்க்காலுக்கு பின்னான காலப்பகுதி முழுவதும் ஈழத்தமிழர் தோற்றுப்போவதற்கும் ஏமாற்றப்படுவதற்கும் அழிந்து போவதற்கும் ஏதோ ஓர் அடிப்படையில் பராதிய ஜனதா கட்சிக்கு பங்கிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. இது இந்திய தேசிய நலன் சார்ந்தது. ஈழத்தமிழர்கள் இந்திய தேசிய நலனை நிராகரித்துவிட்டு தமது இருப்பை உத்தரவாதப்படுத்த முடியாது. ஆனால் இந்திய தேசிய நல்லதுக்குள்ளோம் தமிழக நலனுக்குள்ளும் ஈழத்தமிழர்களின் அரசியல் நலனை ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கும் உத்திகளை உருவாக்க முடியும். அறிவுப்பூர்வமாக தமிழகம் வாய்ப்பான ஒரு களத்தை உருவாக்கி இருக்கிறது. தமிழகம் அல்லது தமிழக வெற்றி கழகம் ஈழத்தமிழரின் அரசியல் நிலைமையில் நேரடி பங்கு எதனையும் தர முடியாது போனாலும் அதற்கான அழுத்தங்களையும் ஆதரவையும் பல கோடி மக்களை முன்னிறுத்தி முன்னெடுக்க முடியும். இது பற்றி 08.மே.2026 The Island பத்திரிகையின் ஆசிரிய தலையங்கத்தை கவனத்தில் கொள்வது அவசியமானது.
ஐந்தாவது வாய்ப்புக்களின் மறுபக்கம், விடுதலை சிறுத்தைகள் பொறுத்தும் அதன் தலைமைத்தும் பொறுத்தும் அதிக விவாதங்கள் உண்டு. அவ்வாறே மார்க்ஸிஸக் கட்சிகள் பொறுத்தும்; நிறைய உரையாடல்களை முன்வைக்க முடியும். ஆனால் அத்தகைய உரையாடலால் ஈழத்தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. கடந்த காலங்களில் தமிழகத்தின் மீது எல்லையற்ற பொறுப்பற்ற செயல்பாடுகளை ஈழத்தமிழர்கள் முன்னெடுத்துள்ளனர். அத்தகைய வரலாற்று தவறுகள் ஈழத்தமிழர்களுடைய அரசியலை மோசமான நிலைக்குள் உட்படுத்தி இருக்கின்றது என்பது மறுக்க முடியாது. கடந்த வரலாற்றை பேசி சமகாலத்தில் இருக்கும் வாய்ப்புகளை முடிவுக்கு கொண்டு வராது கடந்த வரலாற்றில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களை முன்னிறுத்திக் கொண்டு சமகாலத்தை எதிர்கொள்வதே ஈழத்தமிழர்க்கு ஆரோக்கியமானது. இன்றைய வாய்ப்புக்களையும் புனைவுகளாலும், பழையகதைகளைப் பேசுவதனாலும், அறிவின்மையாலும் நிராகரித்து கடந்து செல்ல முயலுவோமாக இருந்தால் ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இன அடையாளத்தை வெகு விரைவில் இழந்து போவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.

எனவே ஈழத்தமிழர் தமிழகத்துடனான உறவை வலுவானதாக வைத்துக் கொள்வது புவிசார் அரசியல் ரீதியிலும் அறிவியல் ரீதியிலும் தேவையானது. இது ஒன்றும் தமிழக வெற்றிக் கழகம் ஈழத்தமிழருக்கு சுயாட்சியையோ, அதிகாரத்தையோ பெற்றுத்தரப் போவது என்ற அர்த்தத்தில் குறிப்பிடவில்லை. அதனை ஈழத்தமிழர் தாமே பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் தமிழகம் வலுவான ஒத்துழைப்பும் ஆதரவும் ஈழத்தமிழருக்கு வழங்குமாக இருந்தால் ஈழத்தமிழர் இருப்பு பலமானதாக அமையும் என்பதனாலேயேயாகும். உலகளாவிய அரசியல் நட்புக்களாலும், ஒத்துழைப்புக்களாலும், கூட்டுக்களாலும் கட்டப்பட்டது என்பதை மறுக்க முடியாத யதார்த்தமாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: யாழ்.தினக்குரல்)