தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து இலங்கையில் பேரினவாதத்தின் தூண்டலில், இனக்கலவரம் ஒன்றுக்கான ஏதுவான சூழல் அரசியல் அவதானிகளால் ஆருடம் கூறப்பட்டு வருகின்றது. தையிட்டி, வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை என பௌத்த பிக்குகளின் அத்துமீறல்கள் இயல்பாக்கப்பட்டுள்ளது. பிரச்சாரங்களுக்கு அப்பால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களைப் போன்றே பௌத்த மதத்தை முன்னிறுத்தி பேரினவாதத்தால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை பொருட்படுத்தாத வண்ணமே காணப்படுகின்றனர். மேலும் கடந்த அரசாங்கங்களை தாண்டி குறுகிய காலத்தில் பௌத்த பிக்குகளின் நலன்களை பேண இவ்அரசாங்கம் முயலுகின்றது. இவ்அரசாங்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதர பிரச்சினைகளை முன்னிறுத்தியே பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் அரசியல் மற்றும் பொருளாதர பிரச்சினைகளுக்கான தீர்வு முயற்சிகளில் பௌத்த பிக்குகளின் நலனுக்கான தீவிரத்தன்மையை காணமுடியவில்லை. இக்கட்டுரை சிறைத் தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகளை நடத்தும் விதம் தொடர்பான சிறை விதிமுறைகளில் மாற்றங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவது தொடர்பாக தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
கலகொட அத்தே ஞானசார தேரர் காவலில் வைக்கப்பட்ட பின்னர் அந்நடைமுறைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கவலைகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஒக்டோபர்-08அன்று மூன்று பிரதான பௌத்த நிகாயங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பை ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார். சிறைச்சாலைகளை நிர்வகிக்கும் விதிகள் மற்றும் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திகா சனத் குமநாயக்கவிடம் ஒக்டேபார்-14அன்று ஒப்படைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளுக்கு ஏற்ப தொடர்புடைய நிலையான உத்தரவுகளைத் திருத்தியமைக்குமாறு அறிவுறுத்தல்களுடன், இடைக்கால அறிக்கை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தெரிவித்துள்ளார்.
இடைக்கால அறிக்கையின் முக்கியப் பரிந்துரைகளில் ஒன்று, சிறைச்சாலை நிலையான ஆணை 356-ஐ, 356(யு) என்ற புதிய விதியை அறிமுகப்படுத்துவதன் மூலம் திருத்துவதாகும். முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தத்தின்படி, சிறையில் சேர்க்கப்படும்போது ஒரு துறவியின் ஆடையைக் களைவது குறித்து, சிறை அதிகாரிகள் பௌத்த விவகாரங்கள் துறையுடன் கலந்தாலோசிக்க வேண்டும். சிறைச்சாலைகள் ஆணையருக்கு, அத்துறைக்கு அறிவிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். துறைசார் ஆணை 550-இல் செய்யப்படும் ஒரு தனித் திருத்தத்தின்படி, பௌத்த பிக்குகள் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும்போதெல்லாம், அந்தந்த நிகாயம் அந்தச் சலுகையைத் திரும்பப் பெறுமாறு முறையாகக் கோராத வரையில், தங்கள் பிக்குகளை அணிந்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். சிறையில் உள்ள மற்ற மதகுருமார்களுக்கும், பொருத்தமான மாற்றங்களுடன், இதேபோன்ற ஏற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.
இலங்கையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல அடுக்குகளாக உள்ளன. வுடக்கு-கிழக்கில் தமிழ் மக்கள் தினசரி ஏதொவொரு போராட்டத்தையும் ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் கடந்த இரு வருடங்களாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்தி வருகின்றார்கள். எனினும் குறைந்தபட்ச தீர்வுகள் கூட கிடைக்கப்பெறவில்லை. எனினும் காவலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் துறவற ஆடை களையப்பட்ட விவகாரம் தொடர்பில் எழுந்த சச்சரவிற்கு ஒரு வாரத்திற்கு உள்ளேயே ஒட்டுமொத்த பிக்குகளின் நலனை முன்னிறுத்தியே புதிய சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை நுணுக்கமாக நோக்குதல் அவசியமாகும்.
முதலாவது, இலங்கையில் இதுவரை பௌத்த பிக்குமார்கள் கைது மற்றும் தடுப்பு காவலில் வைக்கப்படுதல் பொதுவான குற்றவியல் சட்ட நடைமுறைகளே பின்பற்றப்பட்டு வந்துள்ளது. எனினும் பாரம்பரியங்கள் மற்றும் அதிகாரிகளின் மத ஈடுபாட்டை பொறுத்து சட்டத்தை மீறிய சில சலுகைகள் வழங்கப்பட்டு வந்துள்ளது. எனினும் சட்டரீதியாக பொதுவான குற்றவியல் சட்ட நடைமுறைகளே பின்பற்றப்பட்டுள்ளது. புதிய சீர்திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி இவ்இடைக்கால அறிக்கையும் குழுவும் தேவையற்றது. ஏற்கனவே நடைமுறையில் உள்ளதொரு விடயத்திற்கு புதிய சீர்திருத்தம் தேவையில்லை என்றவாறு குறிப்பிட்டுள்ளது. சிறைத்துறையின் நிலையான ஆணை 550-ஐக் குறிப்பிட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் தண்டனை பெற்ற கைதிகள் சிறைச் சீருடைகளை அணியக் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியது. கைதிகள் சிறைவாசத்திற்கு முன்பு அணிந்திருந்ததைப் போன்ற சாதாரண உடைகளை, அதாவது அவர்களின் கலாச்சார மற்றும் மதப் பின்னணிக்கு ஏற்ற ஆடைகள் உட்பட, அணியலாம் என்று அந்த விதிமுறைகள் அனுமதிப்பதாக அது மேலும் கூறியது. இந்த விதிமுறைகளின் கீழ், சாதாரண சிறைத்தண்டனைக்கும் கடுங்காவல் தண்டனைக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு நிலவுகிறது என்று சிறைச்சாலை ஆணையர் சுட்டிக்காட்டுகின்றார். மூன்றிற்கும் குறைவான சாதாரண சிறைத்தண்டனையைப் பொறுத்தவரை, ஒரு பௌத்த துறவி தனது துறவற உடையை அணிய அனுமதிக்கும் விருப்புரிமை அதிகாரம் சிறைக் கண்காணிப்பாளரிடம் உள்ளது. இருப்பினும், கடுங்காவல் தண்டனை அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேலான தண்டனைகளுக்கு, சட்டப்பூர்வமான ஆடை விதிமுறை கட்டாயமாக்கப்படுகிறது. கடுங்காவல் தண்டனை அனுபவிக்கும் அனைவரும், சட்டப்படி நிலையான சிறை ஆடையை அணிய வேண்டும் என்றும், இதற்கு நிர்வாகப் பரிந்துரைக்கோ அல்லது விலக்குகளுக்கோ இடமில்லை என்றும் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.
இரண்டாவது, இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களிலும் பௌத்த பிக்குகள் பல தரப்பட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவை கொலை செய்த குற்றச்சாட்டில், பௌத்த துறவி தல்டுவே சோமராம தேரோ, கையில் கைத்துப்பாக்கியுடன் சம்பவ இடத்திலேயே உடனடியாகக் கைது செய்யப்பட்டார். சோமராமன் கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டு, தனது துறவற உடையைத் துறந்தார். தலைமை நீதிபதி டி.எஸ். பெர்னாண்டோ, தல்டுவ சோமராம ‘காவி அங்கியுடன் நீதிமன்றத்திற்கு வராததால், அவருக்கு மனசாட்சி இருந்தது” என்று குறிப்பிட்டார். பின்னர், 1962ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி வெலிக்கடை சிறையில் அவருக்குத் தூக்கிலிடப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 300 இலங்கைத் துறவிகள் குழந்தைகளைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக அவர்களில் கிட்டத்தட்ட 30 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வெளிப்படுத்தியுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் (ழுஊஊசுP) விடுத்த தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வருடம் ஏப்ரல் இறுதியில் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில், 110 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சாவை வைத்திருந்ததற்காக 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்ட செய்திகள் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது, தேசிய மக்கள் சக்தி அரசு ஒருவார காலப்பகுதிக்குள் பௌத்த பிக்குகளினை முன்னிறுத்தி சிறைச்சாலை நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தம், இலங்கையின் சட்டம் அனைவருக்கும் சமமின்மை என்பதையே உறுதி செய்கின்றது. இலங்கையின் அரசியலமைப்பின் 9வது சரத்தின்படி, இலங்கை அரசு பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை வழங்க வேண்டும். அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெறக்கூடிய பௌத்த பிக்குகளுக்கு விசேட சலுகையை வழங்கக்கூடிய புதிய சீர்திருத்தத்தையும் நடைமுறைப்படுத்துகின்றது. சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் எனும் வளைந்து கொடுக்காத கவசத்தை அணிந்திருந்த சிறைச்சாலைத் தலைவர், தனது அதிகாரத்துவ நிலைப்பாட்டில் துணிச்சலுடன் உறுதியாக நின்று, தாக்குதலைத் தொடுத்தார். மதச்சார்பற்ற சட்டத்தின் மாண்பு எந்தவொரு புனிதமான விதிவிலக்குகளையும் அனுமதிக்காது என்று அவர் வெளிப்படையாக வாதிட்டார். ஒரு தண்டனை வழங்கப்பட்டவுடன், மதச்சார்பற்ற சட்டம் திருச்சபையின் சிறப்புரிமைகளை மீறிவிடும் என்று வாதிட்டு, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தைக் கடுமையாகப் பின்பற்றுவதன் மூலம் தனது சர்ச்சைக்குரிய முடிவை அவர் நியாயப்படுத்தினார். எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், எந்தவொரு சட்டமும் பௌத்தத்திற்கு வளைந்து கொடுக்க வேண்டுமென்ற செய்தியையே அவசரகதியில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த ஆணை உறுதி செய்கின்றது.
நான்காவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்தம் என்ற போர்வையில் பேரினவாதத்திற்கு அடிபணிவது, இவ்அரசாங்கத்தின் கீழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கக்கூடிய குறைந்தபட்ச தீர்வுகள் கூட கிடைக்கப்பெறாது என்பதே உறுதி செய்கின்றது. கடந்த பத்தாண்டுகளில் பலமுறை தண்டிக்கப்பட்ட, சர்ச்சைக்குரிய துறவி ஒருவரை சிறை அதிகாரிகள் அவரது துறவற உடையைக் களைந்ததையடுத்து எழுந்த சர்ச்சைக்கு தீர்வளிக்கும் வகையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவான சீர்திருத்த ஆணையை பிறப்பித்துள்ளது. தண்டிக்கப்பட்ட துறவி காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி திருமதி சந்தியா எக்னலிகொடவை குற்றவியல் ரீதியாக அச்சுறுத்தியதாக அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட இந்த மதகுருவுக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், அவர் கடந்த காலங்களில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினரைத் தாக்கியுள்ளார் அல்லது அவர்கள் மீது தாக்குதல்களைத் தூண்டியுள்ளார். இவ்பௌத்த துறவிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பங்கேனும் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்க தயாரில்லை. முன்வரவுமில்லை. தையிட்டி விவகாரம் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு காணிகள் தொடர்பில் ஜனாதிபதி வடக்கிற்கு வரும் போதெல்லாம் ‘விரைவாக’ தீர்வு எட்டப்படும் என்ற செய்தியை மட்டுமே வழங்கி செல்கின்றார். இரண்டு வருடங்களாகியும் விரைவு என்ற காலப்பகுதி இன்னும் வரவில்லை. மறுபக்கம் நீதிமன்றால் தண்டிக்கப்பட்ட பௌத்த துறவிக்கான சிறப்பு சலுகைக்கான ஏற்பாடு ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்படுகின்றது.
எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னைய அரசாங்கங்கங்களின் தொடர்ச்சியையே இலங்கை அரசியல் கலாசாரத்தில் பேணி வருகின்றது. கடந்த காலங்களில் பௌத்தத்திற்கு காணப்பட்ட குறைபாடுகளையும் சட்டரீதியாக விரைவாக சீர்செய்யும் அரசாங்கமாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காணப்படுகின்றது. ஒரு வார காலப்பகுதியினுள்ளேயே சிறைப்படுத்தப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான சிறப்பு சலுகைக்கான சீர்திருத்த ஆணையை பிறப்பித்ததனூடாக இலங்கையின் சட்டவாட்சியில் பௌத்தத்தின் தனியாதிக்கம் மீண்டுமொரு முறை உறுதிசெய்யப்படுகின்றது.
-பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-
(நன்றி:தினக்குரல்)
