அரசியல் கட்டுரைகள்

ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசையும் தமிழ் தேசியக் கட்சிகளின் போக்கும்?

அரசியலை செய்பவர்கள் அரசியல்வாதிகள் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. அரசியல்வாதிகளும் தாம் முழுநேர அரசியலை செய்பவர்களாக மக்கள் முன் தோன்றி வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்தையும் மாகாணசபையையும் உள்;hராட்சி மன்றங்களையும் நிரப்புகின்றனர். அவ்வகை அரசியல் செய்பவர்களை ஈழத்தமிழர்கள் தமது அரசியல்வாதிகள் என்றும்; தமது அரசியல் தலைவர்கள் என்றும் கருதுகின்றார். ஆனால் அத்தகைய தலைவர்களின் அரசியல் செயல்பாடு ஈழத்மிழர்களின் அரசியல் அபிலாசைகளை பாதுகாப்பான இருப்பை தந்திருக்கின்றதா என்ற பிரதான கேள்வி எழுகிறது. இப்பகுதியும் அக் கேள்விக்கு விடை தேட முயலுகின்றது.

முதலாவது தமிழ் மக்களின் அரசியலை மேற்கொள்ளும் பிரதான பங்காளர்களாக தமிழ் அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். அதிலும் அதிகம் முக்கியம் பெற்றவர்களாக தமிழ் தேசியக் கட்சிகளின் பராளுமன்ற உறுப்பினர்கள் பார்க்கப்படுகின்றனர். தமிழ் மக்களின் அரசியலுக்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு கிழக்கின் அரசியல்வாதிகளாக அடையாள ப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களது நடத்தையும் அவர்களது அரசியல் ரீதியான செயல்பாடுகளும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பை உத்தரவாதப்படுத்த கூடிய விதத்தில் காணப்படவில்லை என்ற விமர்சனம் தவிர்க்க முடியாததாக உள்ளது. ஏனெனில் அவர்களால் 2009க்கு பின்னான காலத்திலும் சரி சுதந்திரத்திற்கு பின்னான காலத்திலும் சரி எவ்வகை மாற்றத்தையும் அடைய முடியாதவர்களாக உள்ளனர். அதற்கான அடிப்படை அவர்களின் அணுகுமுறைகளும் நலன்களும் சொந்த இருப்புக்கான பாதுகாப்பும் அதீதமாகவே அவர்கள் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல அரசியலை அறிவுபூர்வமாக தரிசிக்க இயலாதவர்களாகவே காணப்படுகின்றனர். பிராந்திய அரசியலையோ, புவிசார் அரசியலையோ, பூகோள அரசியலையோ சரிவர கணிக்கவோ புரிந்து கொள்ளவோ முடியாதவர்களாக உள்ளனர். உலகத்தின் போக்குக்கு ஏற்ப ஈழத்தமிழரது அரசியலை மாற்றத் தெரியாதவர்களாகவே விளங்குகின்றனர். தேசம், தேசியம், தேசியவாதம் பற்றிய தெளிவே இல்லாதவர்கள் தமிழ் தேசியத்தை வழிநடத்த முயலுவதைக் காணமுடிகிறது.

இரண்டாவது தமிழ்த்தேசியப் பரப்பில் இயங்குகின்ற அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் உள்ளார்ந்த மோதல்களும் முரண்பாடுகளும் உள்கட்சி முரண்பாடுகளாகவே உச்சரிக்கப்படுகிறது. ஆனால் சமகாலத்தில் நிகழும் சம்பவங்களையும் பதிவுகளையும் அவதானிக்கின்ற போது அவை உட்க்கட்சிப் பூசல்களாக காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. உட்கட்சி பூசல் என்பது சமமானவர்களுக் இடையிலே நிகழும் போட்டித் தன்மையின் பிரதிபலிப்பாக கட்சியின் கட்டமைப்பு மீது ஆதிக்கம் செய்வதற்கான ஒன்றாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் கட்சியை அழித்து கட்சியின் இயல்பான இலக்குகளை தோற்கடித்து கட்சியின் அங்கத்தவர்களை வெளியேற்றி கட்சியை இயங்கு நிலை அற்றதாக மாற்றுவதற்கு பெயர் உட்கட்சி பூசலாக கொள்ள முடியாது. அது ஒரு வகையில் கட்சியையும் கட்சியின் இலக்கையும் அதன் கொள்கைகளையும் அழிப்பதனூடாக இனத்தின் அரசியல் இருப்பை சிதைப்பதாகவே தெரிகிறது. அதாவது தமிழரசுக் கட்சிக்குள் தற்போது நிலவுவது உட்கட்சிப் பூசல் அல்ல. அது கட்சியையும் கட்சியின் இலக்குகளையும் அழிப்பதன் மூலம் தமிழ் மக்களின் ஆதாரமான கொள்கைகளையும் இலக்குகளையும் அழிப்பதாகவே தெரிகிறது.

மூன்றாவது ஈழத்தமிழர்களின் அரசியல் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் ஓர் இனத்தின் அல்லது தேசத்தின் அரசியல் என்பது அந்த மக்கள் தாங்கி இருக்கும் அரசியல் இயக்கங்களையும் அரசியல் கட்சிகளையும் சார்ந்ததென்றாகும். இது ஈழத்தமிழருக்கு விசேடமானது அல்ல. உலகிலுள்ள ஒவ்வொரு இனத்தின் அடிப்படையாகும். ஈழத்தமிழர்களின் நிலையான இருப்பை அதிகம் முதன்மைப்படுத்திய கட்சியாக தமிழரசு கட்சியும் பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ{ம் காணப்பட்டது. அதனைக் கடந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புக்களும் அரசியல் கட்சிகளாக தம்மை மாற்றிக் கொண்டு தமிழ் மக்களுக்கு அரசியல் செய்பவர்களாக காணப்பட்டனர். ஆனால் அவை எதுவும் தமிழ் மக்களின் அரசியலில் இருந்து விடுபட்டு சொந்த நலங்களுக்கான போட்டியையும் அடிமைகளையும் உருவாக்குவதற்கான களத்தை நோக்கி தம்மை வடிவமைத்துக் கொண்டன. தமிழ் தேசிய எண்ணத்தை தாங்கிய தமிழ் மக்களின் அரசியல் கட்சிகள் தேசிய நிலைப்பாட்டில் இருந்து விடுபட்டு தன் மக்கள் மீதும் தம் பண்பாட்டின் அடையாளங்கள் மீதும் எந்த கரிசனையும் இன்றி செயல்படுவதை தமிழரின் தேசியத்திற்கான கட்சிகள் என்று அரசியல் கட்சிகள் என்றும் கூறிக் கொள்ள முயலுகின்றன. இவை எதுவும் தமிழ் தேசிய அடையாளம் கிடையாது. இன, மத மற்றும் பிரதேச வேறுபாடின்றி மக்களை ஒன்றிணைத்து தமிழினத்தின் மரபுகளையும் பண்பாட்டையும் முதன்மைப்படுத்தி செயல்படும் அரசியலே தமிழ் தேசிய அரசியலாகும். அதனை விடுத்து மதத்தாலும் பிரதேசத்தாலும் சாதி அடையாளங்களாலும் மக்களை வேறுபடுத்தி அடிமைகளாக கருதுவது தேசியம் கிடையாது.

நான்காவது தமிழ் தேசிய கட்சிகள் முக்கியமானது தனித்துவமானதாகவும் நீண்ட அரசியல் பாரம்பரியத்தை வடக்கு கிழக்கு முழுவதும் கொண்டிருக்கின்ற கட்சியாக தமிழரசு கட்சி காணப்படுகிறது. ஆனால் கட்சியின் தோல்வி கண்டவர்கள், ஜனநாயகத்தை மதிக்காதவர்கள், தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் தேர்தலுக்குரிய எந்தவிதமான தகமையும் இழந்தவர்கள் அக்கட்சியின் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயலுகின்ற போது கட்சி தனது தனித்துவத்தை இழந்து போகிறது. தமிழ் தேசியக் கட்சிகள் மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்துக் கட்சிகளும் மக்களுடையதே அன்றி கட்சித் தலைவர்களதோ, உறுப்பினர்களதோ அல்ல. ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அக்கட்சியின் உறுப்பினர்களின் ஒழுக்கம் பண்பு தீவிரமான இலட்சியத்தை அடைவதற்கான போராட்ட குணம் மக்களோடு மக்களாக வாழ்கின்ற மனோநிலை பிறரை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு செயல்படுகின்ற போக்கு போன்ற பல அம்சங்கள் அடிப்படையாக உள்ளன. தனது மக்களை நேசிப்பவனே தனது அயலவனை நேசிப்பவனே தனது உறுப்பினர்களை அங்கீகரிப்பவனே பிறதேசங்களையும் பிற நாடுகளின் தலைவர்களையும் அரவணைத்து செயல்படக்கூடிய திராணியுடையவளாக விளங்குவர். அத்தகைய இயல்புகள் இல்லாத தலைவர்களாலும், உறுப்பினர்களாலும் கட்சியின் இருப்பை காணாமல் ஆக்குவார்கள். அந்தக் கட்சியை நம்பி இருக்கும் மக்களின் இலக்கும் கொள்கையும் வற்றிப் போகும். ஒட்டுமொத்தமாகவே ஓர் இனத்தின் சிதைவு சாத்தியமாகும்.

ஐந்தாவது ஒரு கட்சியினுடைய தலைமையும் அதனுடைய பதவி வழி உறுப்பினர்களின் பண்பும் மக்களால் அங்கீகரிக்கப்படக் கூடியதாக இருத்தல் வேண்டும். அத்தகைய அங்கீகாரமே தலைமைக்கு உரித்துடையது. அதுவே தலைவனாக ஏற்றுக் கொள்வதற்கான பண்பாட்டை ஏற்படுத்தும். இதற்கு மாறாக பண்பாடற்றவர்களும் ஏமாற்றுத்தனமானவர்களும் போலிகளை அதிகம் முதன்மைப்படுத்துபவர்களும் சதி செய்து கட்சியையும் கட்சியின் உறுப்பினர்களையும் நிராகரிப்பவர்களை மக்கள் இலகுவில் அடையாளம் கண்டு நிராகரிப்பார்கள். இத்தகைய அடாவடித்தனத்தினூடாகவும் சண்டித்தனத்தினூடாகவும் கட்சியின்; பொறுப்புக்களையும் தலைமையையும் பதவிகளையும் பெறுகின்ற போது கட்சியின் இருப்பு காணாமல் போகும். அத்தகைய ஒரு சூழலுக்குள்ளேயே தமிழ் தேசியக்;; கட்சிகளின் போக்கு நிலவுகிறது.

எனவே ஈழத்தமிழரின் கட்சி அரசியல் பாரம்பரிய உடைந்து போகின்றது. மீளவும் புதிய பாரம்பரியங்களின் அவசியம் உணரப்படுகிறது. ஈழத்தமிழர்கள் முன்னே அடிமையாய் இருக்கின்ற சூழலை பாரம்பரியக் கட்சிகளால் மீட்டெடுக்க முடியாது என்பது 2009க்கு பின்னான வரலாறு உறுதிப்படுத்துகிறது. இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்கள் புதிய பாதைக்கு உண்மையான பாதைக்கும் சரியான தலைமைகளை கண்டறிவதற்கான சூழலுக்கும் நகர வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கின்றது. இதனை நோக்கி பயணிக்க தவறுகின்ற பட்சத்தில் பலவீனமான கூலிகளையும் எச்சங்களை நம்பி பிழைப்பு நடத்துபவர்களையும் விரோதிப்பவர்களையும் சதிக்; கூட்டத்தையும் வைத்துக் கொண்டு ஓர் இனத்தின் விடுதலையை அல்லது சுதந்திரத்தை திட்டமிடவும் முடியாது அதில் வெற்றி பெறவும் முடியாது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி:யாழ்.தினக்குரல்)