சமகால உலக ஒழுங்கின் அரசியல் தெளிவற்ற தோற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. உக்ரையின்-ரஸ்சியப் போரும் ஈரான்-அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டு போரும் தவிர்க்க முடியாத எல்லையில் திணறிக் கொண்டும் நகர முடியாத சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு பின்னால் இருக்கும் வலுவான அரசியலாக அதிகாரப் போட்டி முதன்மைப்படுகிறது. பொருளாதார அதிகாரத்தின் நெருக்கடி வன் அதிகாரத்தின் எல்லையை பாரிய சிக்கலுக்குள் தள்ளியுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு தலைகீழான மாற்றங்களும் முரணியக் கொள்கைகளும் எதிர்த்துருவங்கள் இசைந்து கொள்வதும் இசைந்து பயணித்தவை எதிர்த்துருவங்களாக காட்சிபடுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. ஏகாதிபத்தியங்கள் தமது நலனில் காத்திரமான இலக்கை அடைவதற்கு திட்டமிடுகின்றன. ரஸ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப்க்கும் இடையிலான நெருக்கத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பத்தையும் அதன் விளைவுகளையும் தேட இக் கட்டுரை முயலுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புவிசார் அரசியல் கோட்பாட்டை வரைந்த சிந்தனையாளர் வரிசையில் மைக்கிண்டரின் (Halford John Mackinder) கோட்பாடு தனித்துவமானதாக அடையாளப்படுத்தப்பட்டது. அவரால் முன்வைக்கப்பட்ட இருதயநிலக் கோட்பாடு(Theory of Heartland) 21ம் நூற்றாண்டையும் ஆக்கிரமித்து இருக்கின்றது என்பதை உலகம் தொடர்ச்சியாக அனுபவித்து வருகிறது. ரஸ்சியா உலகத்தில் இருதய நிலம் என்பதை மீண்டும் ஒரு தடவை புரியவைத்துள்ளது. அமெரிக்காவின் இடைக்கால தேர்தல் குடியரசு கட்சியையும் அதன் ஜனாதிபதி ட்ரம்ப்ன் தலைமையும் அரிசியல் பொருளாதாரம் நோக்கி அமெரிக்காவின் அணுகுமுறைகளை மாற்றி இருக்கின்றது. ரஸ்சியாவை அனுசரித்து செயல்பட வேண்டிய நிர்பந்தத்துக்குள் உள்ளாக்கப்பட்டு இருக்கிறது. இரு தலைவர்களும் நண்பர்களாக விளங்கினாலும் கடந்த காலம் முழுவதும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் ரஸ்சியாவுக்கு எதிராகவே கொள்கைகளை வகுத்து வந்தனர். அதற்கான அடிப்படையை புவிசார் அரசியலே ஏற்படுத்தியிருந்தது. தற்போது தவிர்க்க முடியாமல் இடைக்கால வரவு செலவு திட்டம் போன்று அல்லது இடைக்கால அமைதி போன்று ரஸ்சியாவின் பெற்றோலியத்தை அமெரிக்கா கம்பனிகளும் நிறுவனங்களும் கொள்ளளவு செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்குள் அந்த நாட்டின் பொருளாதார சுமை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய நெருக்கம் அமெரிக்க ரஸ்சிய நெருக்கமாகவோ அல்லது எதிர் துருவங்களும் இடையிலான நெருக்கடியாகவோ அடையாளப்படுத்த முடியுமா என்ற கேள்வி மிகப் பிரதானமானது. அதனை ஆழமாக புரிந்து கொள்வது அவசியமானது.
முதலாவது புட்டின்-ட்ரம்ப்க்கு இடையிலான உறவு என்பது பொருளாதார அடிப்படையில் ஏற்பட்ட நெருக்கடியின் பிரதிபலிப்பாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது. இரு நாடும் பொருளாதார ரீதியில் நெருக்கடிக்குள் உட்படுத்தப்பட்டிருக்கின்றன. ரஸ்சியா தனது பெற்றோலிய பொருட்களை விற்பனை செய்ய அமெரிக்கா விதித்த தடைகளை எதிர்கொண்டிருந்தது. அமெரிக்கா உள்நாட்டு பெற்றோலிய பொருட்களின் விலை ஏற்றத்தினால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதும் முக்கியமான பொருளாதார நெருக்கடியாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதிலிருந்து பரஸ்பரம் மீள்வது இரு நாடுகளின் அல்லது ஏகாதிபத்திய சக்திகளின் நலன்கள் சார்ந்த புரிதலாகவே இருக்கின்றது. இரு நாட்டுக்கும் இடையிலான சமரசம் என்பது பொருளாதார அடிப்படையில் எழுந்தது ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால் இது தற்காலிகமானதாகவே அமையும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாகவே உள்ளது. ட்ரம்ப் ஒரு போதும் நிரந்தரமான கொள்கைகளை கடைப்பிடிப்பவர் அல்ல என்பதும் அது சார்ந்து ரஸ்சிய ஜனாதிபதி புட்டின் தெளிவான புரிதலை கொண்டிருக்கிறார் என்பதும் கவனத்திற்கு கொள்ளப்படக் கூடிய அம்சமாகும்.
இரண்டாவது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நலன்களுக்காக முன்னெடுக்கப்பட்ட உக்கரையின்-ரஸ்சிய போர் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. ரஸ்சியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கம் இப்போரை பாதிக்க கூடிய ஒன்றாக அமைவதோடு உக்ரையினை அமெரிக்கா கைவிடுமா என்ற கேள்வி அதிகம் எழுப்பப்படுகிறது. ஆனால் நடைமுறையில் உக்ரையினுக்கும் ரஸ்சியாவுக்குமான போரின் பின்புலத்தில் அமெரிக்காவையும் விட ஐரோப்பிய நாடுகளே முதன்மையானவை என்ற அடிப்படையில் இப்போர் நிறுத்தத்துக்கு அல்லது அமைதிக்கான வாய்ப்பு குறைவானதாகவே தெரிகிறது. அமெரிக்கா ஈரான் மீதான போரின் ஆரம்பகால பகுதியில் இருந்தே உக்கரையினை பெருமளவுக்கு கைவிட்டுவிட்டது. இதனால் உக்ரையின் போரை கைவிடாத நிலையை அவதானிக்கின்ற போது ஐரோப்பாவுக்கே உக்ரையின் ரஸ்சியப் போர் அவசியமானதாக பார்க்கப்படுகிறது. இப்போர் ரஸ்சியாவினதும் புட்டினதும் கொள்கைளையும் இலக்குகளையும் கணிசமான அளவு பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்ற என்ற அடிப்படையில் ஐரோப்பிய நாடுகள் வெற்றி கண்டிருக்கின்றன. மறுபக்கத்தில் அமெரிக்கா போன்று ஐரோப்பியர்களும் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இப்போரின் விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர். அதனாலேயே இப்போர் நீடிப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் ஒத்துழைப்பும் இராணுவ உதவியும் உக்ரையினுக்கு முழுமையாக நிறுத்தப்படுகின்ற போது அல்லது ரஸ்சியா பலப்படுத்தப்படுகிற போது போரில் தலைகீழான மாற்றங்களுக்கான வாய்ப்பு ஏற்படக் கூடியதாக இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியும்.
மூன்றாவது ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இஸ்ரேல் நிகழ்த்திய போரும் ரஸ்சிய அமெரிக்க நட்பினால் ஈரானை பாதிக்கும் என்ற விவாதம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் இதில் ஆழமான ஒரு விடயம் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா அல்லது டொனால்ட் ட்ரம்ப்; புட்டினிடம் சரணடைந்தாரே அன்றி புட்டின் அமெரிக்காவிடம் சரணடையவில்லை என்று தெரிகின்றது. அதனால் போரை அமெரிக்கா ரஸ்சியாவினது அணுகுமுறைகளுக்கேற்ற வகையிலே நகர்வுகளை செய்ய திட்டமிட்டு இருக்க வாய்ப்பு அதிகம் உண்டு. மறுபக்கத்தில் ஈரான் போருக்கான இராணுவ வலுவை தனது தொழில்நுட்பத்தையும் இராணுவ தளவாடங்களையும் சுயமாகக்; கட்டமைத்துக் கொண்டு ரஸ்சியா போன்று சீனா வடகொரியா போன்ற நாடுகளிடம் தொழில்நுட்ப அம்சங்களையும் ஆயுத தளபாடங்களின் நவீன தொழில் நுட்பத்தையும் சமதளத்தில் பெற்றுக் கொண்டு நகர்கிறது. ஈரான் ஒரு தேசிய உணர்வூடனான கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளது. ஏறக்குறைய 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உக்ரையின் போரில் கொல்லப்பட்டும் நாட்டை விட்டு வெளியேறியும் உள்ளனர். ஆனால் ஈரானியர் தமது தேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தேசிய உணர்வோடு செயல்படுபவர்களாக காணப்படுகின்றனர். இதனால் ரஸ்சியாவின் அமெரிக்க நெருக்கம் ஈரானை பெருமளவுக்கு பாதிக்கும் என்பது கேள்விக்குரியது.
நான்காவது புட்டின்-ட்ரம்ப் நெருக்கம் உலகளாவிய அரசியலும் முரண்பாடான கற்பிதங்களை தந்திருக்கிறது. ஆனால் அதுவே யதார்த்தமானது. நலனுக்கு முன்னால் உக்ரையினும் இஸ்ரேலும் ஈரானும் ஒன்று என்பதை இரு ஏகாதிபத்தியங்களும் நிறுவியுள்ளன. அத்தகைய முரண்பாடான அணுகுமுறைகள் மேற்குலகத்தின் இருப்பை அதிகம் கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறது. அமெரிக்காகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்ம் தமது ஆட்சி காலம் முழுவதும் இவ்வாறு குழப்பகரமான ஆட்சியாளனாக தம்மை அடையாளப்படுத்தி இருப்பதன் விளைவுகள் அமெரிக்காவுக்கு சாதகமானதாக இருக்கின்றது என்பதை விட அமெரிக்காவின் எதிரிகளுக்கு சாதகமானதாக அமைந்திருக்கின்றது என்பதை இதன் சாரம்சமாகும். இதனால் உலக ஒழுங்கில் ரஸ்சியாவின் நிலை பிரிக்ஸ் கட்டமைப்பினால் பலப்படுத்தப்பட்டது போல் அமெரிக்காவுடனான நட்புறவினாலும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. இது ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நிகழும் சமரசமாக இருந்தாலும் நடைமுறையில் அத்தகைய சமரசமானது ஏதோ ஒரு ஏகாதிபத்தியத்தின் வெற்றிக்கு வித்திடுவதாக அமையும். இச்சூழல் ரஸ்சியாவுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியது.
எனவே புட்டின்-ட்ரம்ப் நெருக்கம் என்பது தற்காலிகமானது. இது ஏகாதிபத்தியங்களின் சமரசத்துக்கான வழிமுறையாக உள்ளது. உக்ரையின் மீதான போருக்;கான வாய்ப்புகளை அதிகப்படுத்தக் கூடியது. உலகளாவிய எதிர்கால ஒழுங்கில் ரஸ்சியாவின் நிலைப்பாடு பலமானதாக அமைவதற்கான வாய்ப்பை கொடுத்திருக்கின்றது. ஈரான் தனது கடல் படையை பாதுகாப்பதற்கும் தனது நிலத்தின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கும் தற்காலிகமான ஒரு வாய்ப்பை அமெரிக்க-ரஸ்சிய நெருக்கம் ஏற்படுத்தக் கூடியதாக அமையும். அதே நேரம் அத்தகைய உறவை உடைப்பது அதிக கவனம் கொண்டு இஸ்ரேல் செயல்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
நன்றி:தினகரன்)
