April 15, 2026
அரசியல் கட்டுரைகள்

இஸ்ரேல் பிரதமரின் அமெரிக்க விஜயமும் ஈரான் மீதான அமெரிக்காவின் போரும் சமாதானமும்!

ஈரான் மீதான அமெரிக்கா போர் மற்றும் சமாதான நிகழ்வுகள் தயார் நிலையில் நகர்கிறது. இரண்டுமே பிராந்தியத்தில் ஏற்படுத்தக்கூடிய நெருக்கடியின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு நிகழ்வதாக தெரிகின்றது. நெருக்கடியான சூழலை அவசியம் வலியுறுத்துகின்ற நாடாக இஸ்ரேல் காணப்படுகிறது. இஸ்ரேல் பிரதமரின் வெள்ளை மாளிகைக்கான பயணம் அதிகமான குழப்பங்களை ஏற்படுத்த முனைகின்றது. அத்தகைய குழப்பம் அமெரிக்காவின் போருக்கான அடிப்படையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. இக்கட்டுரையும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அமெரிக்க விஜயத்துக்கான அடிப்படைகளை தேடுவதாக உள்ளது.

முதலாவது, அமெரிக்கா ஈரான் மீது நிகழ்த்தும் திட்டமிடல் மற்றும் போருக்கு பின்னால் இஸ்ரேலின் நலன் அடிப்படையானது. இவ்வகை போரை நகர்த்துகின்ற தேசமாக அமெரிக்கா விளங்குவதை விட இஸ்ரேல் பிரதான பங்கை வகிக்கின்றது என்பது தெரிகின்றது. 2024ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஈரான் நிகழ்த்திய தாக்குதலின் விளைவுகளை நோக்கிய தற்போதைய அமெரிக்க போர் பதட்டத்துக்கு அடிப்படை காரணமாக விளங்குகிறது. இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் தீவிரமாக நிகழ்த்தியதோடு, பிராந்தியமும் இஸ்ரேல் நிலப்பரப்பம் அதீத அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தது. அத்தகைய தாக்குதல் யூதர்களை அச்சத்துக்கு உள்ளாக்கியதோடு அயல் நாடுகளுடன் நட்புறவை விட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளும் தள்ளி இருந்தது. ஈரானின் தாக்குதலை இஸ்ரேலின் இராணுவ வல்லமையால் மற்றும் புலனாய்வு புத்திகளால் எதிர்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. இதன் விளைவு அமெரிக்கா ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நிகழ்த்துவதற்கு காரணமாக அமைந்தது.

இரண்டாவது, அத்தகைய காரணங்களை கடந்து ஈரானின் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலின் நிலப்பரப்பை முற்றாகவே தகர்க்கும் அளவுக்கு வலிமை பெற்றதாக காணப்படுகிறது. அமெரிக்கா ஜனாதிபதி போர்க்கப்பல்களை ஈரானின் கடல் பரப்பில் நிறுத்திவிட்டு சமாதான உரையாடலை முன்னெடுப்பதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்திலும் அணு ஆயுதம் மட்டுமின்றி, ஏவுகணை தொழில்நுட்பத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என முதன்மைப்படுத்துகின்றனர். அவ்வாறெனின் அத்தகைய ஈரானின் ஏவுகணைகளும் ஆளில்லாத விமானங்களும் இஸ்ரேலின் இராணுவ பலத்தை தகர்க்கக் கூடியதாக இருப்பதோடு, அதுவே போருக்கான முக்கிய காரணம் என தெரிகின்றது. அமெரிக்க இஸ்ரேல் கூட்டின் பிரதிபலிப்பு அதுவாகவே காணப்படுகிறது. போரின் மூலமும் சமாதானத்தின் மூலமும் அமெரிக்க தரப்பு ஈரானிடம் எதிர்பார்ப்பது அணு ஆயுதம் மட்டுமல்ல என்பதையே நெதன்யாகுவின் அமெரிக்க விஜயம் வெளிப்படுத்துகின்றது. அமெரிக்க ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சுடனும் இஸ்ரேலிய பிரதமர் உரையாடுகின்ற போது ஈரானுடன் மேற்கொள்ள இருக்கும் சமாதான உடன்படிக்கையின் உள்ளடக்கங்களை அதிகம் வலியுறுத்துவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய உள்ளடக்கம் ஈரானின் அணு ஆயுதத்தை விட ஏனைய தொழில்நுட்ப ஆயுதங்களின் பிரயோகம் சார்ந்ததாகவே காணப்படுகிறது. ஈரானின் ஏவுகணைகளும் ஆளில்லாத விமானங்களும் இஸ்ரேல் அழிவடையாமல் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவே தெரிகின்றது.

மூன்றாவது, இஸ்ரேல் பிரதமர் ஈரானின் ஆயுத தளபாடங்களை மட்டுமின்றி பிராந்தியத்தில் ஈரானால் வழிநடத்தப்படும் ஆயுத குழுக்களையும் அவற்றின் வலுவான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வரும் தாக்குதல் முயற்சிகள் ஒரு பக்கம் அமைய மறுபக்கத்தில் ஈரான் அமெரிக்க சமாதான முயற்சியின் முக்கியம் வருகிறது. அத்தகைய அமைப்புக்களுக்கு ஈரான் வழங்குகின்ற ஆயுதங்களும் பொருளாதார வாய்ப்புகளும் இஸ்ரேலின் இருப்பை கேள்விக்கு உட்படுத்துதல், தொடர்ச்சியாக இஸ்ரேல் அவ்அமைப்புகள் மீது போரை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்குள் ஈரான் தள்ளியுள்ளது. இவற்றை ஈரான் தனது போர் தடுப்பு வளையங்களாக கையாண்டு வருகின்றது. அவற்றின் மீளமைப்பும் ஒருங்கிணைப்பும் ஈரானின் இராணுவ உத்திகளில் தங்கியுள்ளது. இதனால் ஈரான் அத்தகைய அமைப்புக்களின் மீது செலுத்தப்படும் முக்கியத்துவத்தை முடிவுக்கு கொண்டு வருதல் அவசியம் என நெதன்யாகு கருதுகின்றார். அதனையே அவர் அமெரிக்காக்கூடாக மேற்கொள்ள முயல்கின்றார்.

நான்காவது, இஸ்ரேலிய பிரதமர் போருக்குரிய நகர்வு ஒன்றையும் திட்டமிடுகிறார் என்பது தெளிவாகவே தெரிகின்றது. ஈரான் மீதான போரை நிகழ்த்துவதற்கான திட்டம் இஸ்ரேல் தரப்பிடமே காணப்படுகிறது. ஒரு வகையில் ஈரான் மீதான போரை அல்லது சமாதானத்தை அமெரிக்கா நிகழ்த்துகின்ற போதும் இஸ்ரேலுக்காகவே அத்தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுக்க திட்டமிடுகின்றது. அத்தகைய திட்டமிடலின் விளைவுகள் உடனடியாக யூதர்களுக்கும் எதிர்கால நிலைமை அமெரிக்கர்களுக்கும் கொடுக்கும் என்பதை இஸ்ரேலிய பிரதமரது அமெரிக்க பயணம் உறுதிப்படுத்துகிறது. அமெரிக்காவை உலகில் பல நாடுகளை முன்னிறுத்தி ஆள் யுத்தங்களை நிகழ்த்தி வந்தது. தற்போது அமெரிக்காவை அத்தகை ஆள் யுத்தத்தை நிகழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளி உள்ளது. இஸ்ரேலில் அமெரிக்காவை வழி நடத்தும் பிரதான சக்தியாக மாறி இருக்கின்றது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலப் பகுதி இஸ்ரேலின் நலன்களுக்கு நேரடியாக பங்களிப்புற்றம் நாடாக அமெரிக்காவை மாற்றி உள்ளார்.

எனவே, உலகம் ஒரு குழப்ப சூழலுக்குள்ளும் புதிய உலக ஒழுங்கை அடையாளம் காண்பதற்கும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பத்தில், ஈரான் மீதான போரையும் சமாதானத்தையும் அமெரிக்க-இஸ்ரேல் தரப்பு திட்டமிட்டு இருக்கின்றது. இப்போரின் அல்லது சமாதானத்தின் விளைவு பிராந்திய அரசியலை மட்டுமின்றி உலக அரசியலையும் புதிய வடிவத்துக்குள் நகர்த்துவதற்கு திட்டமிடுகிறது என்பது தெளிவாகின்றது. அத்தகைய உத்திகளை முன்னிலைப்படுத்திக்கொண்டு இஸ்ரேலிய பிரதமர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார். ஒரு நீண்ட ஆள் யுத்தத்தை நிகழ்த்திய அமெரிக்கா அத்தகைய ஆள் யுத்தத்துக்குள் ஈடுபடுத்துகின்ற நிலையை உலக அரசியல் தந்துள்ளது. ஈரானின் ஏவுகணைகளும் ஆளில்லாத விமானங்களும் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை தடுக்கும் யுக்தி ஆகவே அமெரிக்க போரும் சமாதானமும் முன்னெடுக்கப்படுகிறது.

-பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினகரன்)