ஈழத்தமிழர் அரசியலில் கடந்த 78 ஆண்டுகளாக உரிமை கோரி போராடிக் கொண்டிருக்கின்ற இனமாக காணப்படுகின்றனர். ஆரம்பத்தில் அகிம்சை வழி முறையிலும் பின்னர் ஆயுதவழிமுறையிலும் போராட்டினர். 2009களுக்கு பின்னர் ஜனநாயக ரீதியில் உரிமைக் கோரிக்கையை நீடித்த போராட்ட வழிமுறையாக கொண்டிருக்கின்றனர். அடிப்படையில் இலங்கை ஆட்சியாளர்களிடம் இருந்து எத்தகைய அதிகாரமும் பெற முடியாத நிலையில் தமது போராட்டத்தை நிகழ்த்தி வருபவர்களாக ஈழத்தமிழர்கள் விளங்குகின்றனர். ஈழத்தமிழர்களது உரிமைப் போராட்டத்தை பிரிவினைவாதம் என்றும் பயங்கரவாதம் என்றும் வடிவமைத்து பிரச்சாரப்படுத்தி ஈழத்தமிழர் மீதான அழிப்பினை தென்னிலங்கை ஆட்சியாளர்கள் நிறைவேற்றிக் கொண்டனர். அதன் நீட்சி புதிய பயங்கரவாத தடைச்சட்டம் நில ஆக்கிரமிப்பு உரிமையும் அதிகாரமுமற்ற நடைமுறை என பல அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அத்ததைய ஒடுக்குமுறையை ஆட்சியாளர்களுக்கு அடையாளப்படுத்தவும் தெரியப்படுத்தவும் ஈழத்தமிழர்களின் ஜனநாயக வழி போராட்டங்கள் நிகழ்கின்றனர். இக்கட்டுரையும் தென்னிலங்கையில் இடதுசாரி ஆட்சியாளரின் ஆலோசகர்கள் பிரிவினைவாதம் வடக்கு கிழக்கில் மீண்டும் தலை தூக்குவதாக குறிப்பிட்ட ஆரம்பித்துள்ளநிலையில் அதன் உண்மையான பக்கங்களை தேடுவதற்கு முயலுகிறது.
முதலாவது பிரிந்து செல்லல் என்பது உலக வரலாற்றில் இடதுசாரிகளால் முன்மொழியப்பட்ட தேசிய இனங்களுக்கான பிரச்சனைகளுக்குரிய தீர்வாக காணப்படுகிறது. சுயநிர்ணயம் என்பது பிரிந்து செல்வதற்கான அடிப்படை நியமமாகவே மாபெரும் புரட்சியானன் விளாடிமிர் லெனினால் முன் முடியப்பட்டது. அத்தகைய முன்மொழிவு உலக வரலாற்றில் தேசிய இனங்கள் மோதிக் கொள்கின்ற போது பிரிந்து செல்வதற்கான வழிமுறையாக காணப்பட்டது. ஆனால் ஈழத்தமிழர்கள் எல்லா காலங்களிலும் தமது அரசியல் ரீதியான உரிமைக்காகவும் அடிப்படை உரிமைக்காகவும் மனித உரிமைக்காகவும் பொருளாதார உரிமைக்காகவும் வாழ்வாதார உரிமைக்காகவும் கடந்த வரலாறு முழுவதும் போராடி உள்ளனர். அதனை தென்னிலங்கை ஆட்சியாளர்கள் பிரிவினை வாதம் என பலவீனமான உரையாடலுக்குள் கடந்த காலங்களில் நகர்த்திருந்தனர். அத்தகைய உரையாடலை இடதுசாரிகள் பின்பற்றுகிறார்கள் என்பது இலங்கையின் இடதுசாரிகளின் காத்திரத்தை அடையாளப்படுத்துகிறது. துற்போது தென்னிலங்கையின் ஆட்சியாளர்கள் போராட்டங்களினால் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள். ஆனால் அவர்கள் போராடும் பிற சக்திகளை பிரிவினைவாதத்தின் ஊடாக அளவீடு செய்வதையும் உரிமைக்கான கோரிக்கைகளை பலவீனப்படுத்துவதையும் காணமுடிகிறது. இது உலக வரலாற்றில் பிரிந்து செல்வதற்கான உரிமையை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. இடதுசாரிகள் ஈழத்தமிழரின் உரிமைகளை அங்கீகரிப்பார்களேயானால் ஈழத் தமிழர்கள் அரசுக்கு எதிராக உரிமை கோரி போராட வேண்டிய அவசியம் ஏற்பட வாய்ப்பு இருக்காது.
இரண்டாவது பிரிந்து செல்வதை முடிவுக்கு கொண்டு வர தென்னிலங்கை புத்திஜீவிகள் சரியான தீர்வுகளை நோக்கி நகர முயலாதவர்களாகவே காணப்பட்டனர். அதிகாரத்தை வழங்கும் விதத்தில் அரசை வலியுறுத்தும் எந்த வலியுறுத்தலையும் மேற்கொள்ளாதவர்களாகவே கடந்த காலங்கள் முழுவதும் காணப்பட்டனர். துற்போது மட்டும் ஏன் திடீரென மாகாண சபை முறைமை அதற்கான தேர்தலையும் முன்மொழிகின்றனர் என்பது அதிக சந்தேகத்தை தருகிறது. ஆனால் அத்தகைய தரபப்புக்கள் அதிகார பகிர்வின் அவசியப்பட்டை தற்போதாவது அடையாளம் கண்டு இருக்கிறார்கள் என்பது சிறந்த வழிமுறையாக தெரிகிறது. ஈழத்தமிழர் கூறும் அதிகார பகிர்வை நோக்கி தென்னிலங்கை ஆட்சியாளர்கள் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமின்றி தென்னிலங்கையின் புத்திஜீவுகளுக்கும் ஊடகங்களுக்கும் உரியதான விடயமாகும். இது ஒரு ஆரோக்கியமான ஆலோசனையாக அமைந்தாலும் ஈழத்தமிழரின் பிரதான கோரிக்கையான சமஸ்டி கோட்பாட்டின் அடிப்படையில் அதிகார பகிர்வின் செய்முறை சாத்தியப்படுத்தப்பட வேண்டும்.
மூன்றாவது தென்னிலங்கையின் இடதுசாரிகள் அவ்வப்போது தமிழர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதும் பின்னர் கைவிடுவதும் மனமார்ந்த இடதுசாரி மனோ நிலையாக காணப்படுகிறது. என்.எம். பெரேரா, கொல்வின் ஆர் டி சில்வா போன்றவர்கள் 1956 களில் ஒரு மொழியெனில் இரு நாடு இரு மொழி எனில் ஒரு நாடு என்று கூறியவர்கள் 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பை வரைகின்ற போது சிங்கள பௌத்த பாரம்பரியத்தை முன்னிறுத்தினார்களே அன்றி ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைக்கு எத்தகைய தீர்வையும் முன்வைக்கவில்லை. அவகையான மனோநிலையோடு தென்னிலங்கையின் இடதுசாரி ஆட்சியாளர்களும் புத்திஜீவிகளும் காணப்படுகிறார்கள் என்ற அவதானிப்பு ஈழத்தமிழர்களிடம் உண்டு. கடந்த கால வரலாறுகளில் இருந்து ஈழத்தமிழர்கள் இடதுசாரிகள் பற்றிய மதிப்பீடுகளை செய்ய வேண்டியவர்களாக உள்ளனர். பிரிவினைவாதத்துக்குரிய எத்தகைய எத்தனமும் இல்லாத ஒரு சமூகத்திடம் அல்லது ஒரு இனத்தின் மீது பிரிவினைவாதத்தை கோருகின்றனர் என்று உருவாக்கம் செய்வது தென்னிலங்கை மக்கள் மீதும் தீவிர அரசியல் உணர்வாளர்கள் மீதும் பௌத்த பீடங்கள் மீதும் செல்வாக்கு செலுத்தக்கூடிய உரையாடல் என்பதை மறக்க முடியாது. வடக்கு கிழக்கு அதிகாரம் வழங்கப்படுதல் என்றது நியாயமான விவாதமாக காணப்பட்டாலும் பிரிவினைவாதம் என்பது தென்னிலங்கையில் அதிருத்தியையும் எதிர்ப்பு உணர்வையும் தூண்டக்கூடியது என்பது மறக்க முடியாது. ஈழத்தமிழர்கள் ஒருபோதும் பிரிவினைவாதத்தை முன்மொழியவில்லை. சுயநிர்ணயம் என்பது பிரிந்து செல்வதற்கான அங்கீகாரமே அன்றி பிரிவினைவாதம் என்ற மெலினப்படுத்தப்பட்ட கோட்பாட்டு பிரயோகத்திற்கான வடிவம் கிடையாது. பிரிவினைவாதம் மீது வைக்கப்படும் சொல் பிரயோகம் அல்லது கோட்பாட்டு பிரிவுகள் பிரிந்து செல்லும் சுயநிர்ணயத்துக்கு ஈடானது ஒன்றும் கிடையாது. உலகில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் தமது கோரிக்கைகள் உரிமைகள் அங்கீகரிக்கப்படுகின்ற நிலை ஏற்படாத போது அந்த தேசிய இனம் பிரிந்து செல்ல முடியும் என்பதை சுயநிர்ணய உரிமை கோட்பாடு சொல்லும் விவாதமாகும். அதனை அங்கீகாரம் மிக்க நாடுகளாலும் நிறுவனங்களால் ஏற்படுத்த முடியும் என்பதும் சுயநிர்ணயத்தை கோரும் மக்கள் ஏனைய தேசங்களின் ஒப்புதலோடு அவ்வகையான செய்முறை ஒன்றை மேற்கொள்ள முடியும் என்றும் கோட்பாடு விவரணப்படுத்துகிறது.
எனவே கடத்த கால வரலாற்றிலும் ஈழத்தமிழர் மீது போலியான விவாதங்களை ஏற்படுத்தி அவர்கள் மீது தென்னிலங்கை மக்களும் ஆட்சியாளர்களும் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வழிவகுத்திருந்தனர். அத்தகைய உரையாடலை தென்னிலங்கை தரப்புகள் மீளவும் தொடங்கியிருக்கின்றனர் என்ற சந்தேகம் எழுகிறது. சுதந்திர தினத்தில் தமிழர்கள் தமக்கும் சுதந்திரத்தில் பங்கு இருக்கவில்லை என்றும் சுதந்திரத்தில் உண்மையான பக்கங்களை அவர்கள் அனுபவிக்கவில்லை என்றும் அந்த நாளை கரிநாளாக கருதி போராடியது பிரிவினைவாதம் என இடதுசாரி நோக்கு நிலையில் இருந்து விவாதிப்பது அசிங்கமான அரசியல் விவாதமாகும். இது அதீதமான அரசியல் அறிவாக பார்க்கப்பட்டாலும் நடைமுறையில் அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. ஜனநாயக வழிமுறையில் ஈழத் தமிழர்கள் தமது உரிமைக்காக போராடுகின்ற சுதந்திரத்தை நிராகரிப்பதாகவே தெரிகிறது. ஒரு தேசிய இனம் தனது நிலத்தையும் தனது பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக போராட்டங்களை முன்னெடுத்துகின்றது. அதனை பலவீனப்படுத்துவது அதன் சுதந்திரத்தின் மீதும் உரிமை மீதும் நிராகரிப்பை செய்வதாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
-பேராசிரியர் கே. ரீ.கணேசலிங்கம்-
(நன்றி: தினக்குரல்)
