April 15, 2026
அரசியல் கட்டுரைகள்

இலங்கைத்தீவில் சட்டத்தின் ஆட்சியும்-சட்டத்தின் முன் சமத்துவமும் சாத்தியமானதா?

இலங்கை அரசியலில் ஜே.வி.பி. அரசாங்கத்தின் ஜனநாயக பங்களிப்பு முதன்மை அடைவதாக உரையாடல்கள் காணப்படுகின்றன. உலக வரலாற்றில் கிரேக்க அரசியல் சிந்தனை முதல் இன்று வரையும் சட்டத்தின் ஆட்சி பற்றிய விவாதங்கள் முன்வைக்கப்படுவதும் உரையாடப்படுவதும் மரபான ஒரு பொறிமுறையாக நிலவுகிறது. ஒரு நாட்டின் சட்டத்தின் ஆட்சி என்பது அந்த நாட்டின் அரசியல் அமைப்பில் இருந்து தோற்றம் பெறுகிறது. அரசியல் அமைப்பை அரசாகவும் அதனை முன்னெடுக்கும் ஆட்சியாளர்கள் அரசாங்கமாகவும் அடையாளம் காணுகின்ற அறிவியல் ரீதியான வடிவம் பொதுவானதாகும். ஆனால் இவை எதுவும் இலங்கை போன்ற நாடுகளில் அறிவியல் வடிவமாக இருப்பதில்லை. மாறாக ஆட்சியாளர்கள் அவ்வப்போது ஜனரஞ்சக வசீகரத்திற்கு உரையாடிவிட்டு செல்வதைக் காணமுடிகிறது. இலங்கையிலும் ஜனாதிபதி அநுரகுமாரதிஸநாயக்கா 2026 ஆம் ஆண்டு சட்டத்தின் ஆட்சியையும் சட்டத்தின் முன் சமத்துவத்தையும் உத்திரவாதப்படுத்தும் ஆண்டென பிரகடனப்படுத்தியுள்ளார். இக்கட்டுரையும் சட்டத்தின் முன் சமத்துவத்தையும் சட்டத்தின் ஆட்சியின் உண்மையான பக்கங்களையும் தேட முயலுகின்றது.

இலங்கையின் ஜனாதிபதி சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தியடைந்ததில்லை. 2026 ஆம் ஆண்டு சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதையும் உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாறும் எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இத்தகைய உறுதியுரை அடிப்படையில் இலங்கை தீவுக்கு பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்வது அவசியமானது. அதனை விரிவாக நோக்குவது உள்ளார்ந்த அர்த்தங்களை அடையாளம் காண உதவுவதாக அமையும்.

முதலாவது சட்டத்தின் ஆட்சி என்பது சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பதும் ஜனநாயகத்தின் பிரதான அம்சங்களாக காணப்படுகிறன. அத்தகைய சட்டத்தின் ஆட்சி என்பது அல்லது சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பது அந்த நாட்டின் அரசியல் அமைப்பின் தன்மையை பொறுத்து காணப்படும். ஏனெனில் அரசியல் அமைப்பு அரசாகவும் அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்தும் விதிகளாகவும் காணப்படுகிறன. அத்தகைய விதிகளில் இருந்து ஆட்சியாளர்களையும் பிரஜைகளையும் சமமானவர்களாக ஆக்குகின்ற வடிவம் காணப்படுகிறது. உலக வரலாற்றில் அரசியல் அமைப்புகளே சமமானவர்களையும் சட்டத்தின் ஆட்சியின் வகிபாகத்தையும் உறுதிப்படுத்துகின்றது. அதனால் சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதும் சட்டத்தின் ஆட்சி என்பதும் அரசியலமைப்பிலே தங்கியிருக்கின்றது.

இரண்டாவது இலங்கை தீவில் அரசியல் அமைப்பு இரு வேறுபட்ட மரபுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. ஒன்று பௌத்த மத பாரம்பரியத்துக்கூடாகவும் சிங்கள மொழி கூடாகவும் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு உலகதளத்தில் பின்பற்றப்படும் பொருளாதாரத் மாதிரியான தாராள பொருளாதார பொறிமுறையையும் கொண்தொன்றாக நிலவுகிறது. இரண்டுமே ஒன்றுக்கொன்று வேறுபட்டது என்றும் முரண்பட்டது என்றும் அவதானிக்க முடிகிறது. தாராளவாத பொருளாதார முறை சுதந்திரம் சந்தை வர்த்தகம் என்ற மாதிரிக்குள்ளால் கட்டமைக்கப்பட்டது. அத்தகைய கட்டமைப்பு உருவாக்குகின்ற மாதிரிகளும் உலக நாடுகளின் நியமங்களுக்குள் இலங்கை தீவில் உள்ள மக்களை இசைவுப்படச் செய்யும் மார்க்கமாக விளங்குகிறது. ஆனால் சிங்கள-பௌத்தமயப்படுத்தப்பட்ட நெறிமுறையானது இலங்கைத் தீவின் அரசியல் பொருளாதார சமூக இருப்புக்களை கட்டமைப்பதிலும் தீர்மானம் எடுப்பதிலும் முக்கிய இடம் பெறுகிறது. இங்கு தான் சட்டத்தின் ஆட்சி மீதான கேள்விகளும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்ற விவாதமும் காணப்படுகிறது. இது காலம் காலமாக நிலவும் இன மத மொழி ரீதியான முரண் நிலைக்கு வித்திடுகின்றது. இதன் முன் சட்டத்தின் ஆட்சியையும் சட்டத்தின் முன் சகலரும் சமத்துவம் என்பதையும் உறுதிப்படுத்துவது என்பது கேள்விக்குரியது.

மூன்றாவது 1978 ஆம் ஆண்டு வரையப்பட்ட அரசியல் அமைப்பு முரண்பாடுகளை அதிகம் பிரதிபலிப்பது மட்டுமின்றி முரண்பாடுகளுக்குள்ளால் ஆட்சியை நகர்த்துகின்ற இயல்பினைக் கொண்ட அரசியலமைப்பாக விளங்குகிறது. அந்த அரசியல் யாப்பில் ஒரிடத்திலேனும் இலங்கை பலலின சமூகத்தை கொண்ட நாடு என வரையறுக்கப்படவில்லை. மாறாக பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்துகின்ற விதிகளை உள்ளடக்கப்பட்டுள்ளது. பௌத்தத்திற்கும் சிங்கள மொழிக்கும் கொடுத்துள்ள முக்கியத்துவம் மட்டுமே தெளிவான வரையறையையும் நடைமுறையையும் கொண்டுள்ளது. ஏனைய தேசிய இனங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்கக்கூடிய அல்லது பங்கெடுக்கக்கூடிய எத்தகைய விதிகளும் விசேடமாகவோ தனித்துவமாகவோ வரையப்படவில்லை. சிறுபான்மை தேசியங்களைக் கொண்ட உலக நாடுகள் எல்லாவற்றிலும் அரசியல் அமைப்பு அத்தகைய தனித்துவத்தையும் விசேட பங்கையும் வழங்கி உள்ளது. இலங்கையில் ஜனாதிபதியும் பிரதமரம் அதன் அதிகார கட்டமைப்பின் பிரிப்புகளில் ஏனைய தேசிய களுக்கான வாய்ப்புகள் எதனையும் ஒப்படைக்கவில்லை. இதன் முன் சட்டத்தின் ஆட்சியையும் சட்டத்தின் முன் சமத்துவத்தையும் எப்படி உரவாக்க முடியும்.

நான்காவது அரசியலமைப்பில் காணப்படும் பாரபட்சங்களை கொண்டும் முரண்பட்ட வடிவங்களைக் கொண்டும் சிங்கள மக்களது மரபுக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவத்தை பொறுத்தும் சட்டத்தின் ஆட்சியும் சட்டத்தின் முன் சமம் என்ற வாதமும் சாத்தியமற்ற செய்முறைக்கான வடிவமாகவே தெரிகின்றது. கடந்த 78 வருடங்கள் அத்தகைய முரண்பட்ட சூழலுக்குள்ளே இலங்கை தீவின் அரசியலும் பொருளாதார வீழ்ச்சியும் சமூகங்களுக்கிடையிலான ஒருங்கிசைவற்ற தன்மையும் காணப்படுகிறது. அவ்வாறெனில் இத்தகைய அரசியல் அமைப்பை மாற்றத்திற்கு உள்ளாக்குவது மூலம் மட்டுமே அதனை சாத்தியப்படுத்த முடியும். மகாசங்கங்களை திருப்திபடுத்தாமல் ஆட்சியாளர்களும் அரசாங்கமும் நிலைத்திருக்க முடியாது என்பதை கடந்த காலங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கை தீவின் புதிய கல்விக் கொள்கை பொறுத்து விளக்கத்தையும் கருத்துக்களையும் மகா சங்கங்களுடன் பகிர்ந்த பிற்பாடு இலங்கை மக்களுக்கு ஆட்சியாளர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். மகாசங்கங்களே இலங்கை தீவின் அரசியல் பொருளாதார இராணுவ கல்வி சுகாதாரம் போன்ற அனைத்தினதும் தீர்மானம் மிக்க சக்திகள் என்பதை இடதுசாரி அரசாங்கத்திலும் கண்டுகொள்ள முடிகிறது.

எனவே சட்டத்தின் முன் சமம் என்பதும் சட்டத்தின் ஆட்சி என்பதும் ஜனாதிபதி குறிப்பிடுவது போல் இலங்கை தீவில் ஏற்படுத்தி விட முடியாது. அவ்வாறான ஒரு செய்முறை மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அதற்கு அமைவான அரசியல் அமைப்பையும் அதற்கு உட்பட்ட விதிகளையும் சரி செய்துவிட்டு மட்டுமே சட்டத்தின் ஆட்சி பற்றி உரையாட முடியும். இடதுசாரிகள் சட்டத்தின் ஆட்சி பற்றி உரையாடுவதும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்று விவாதிப்பதும் அத்தரப்பின் சமத்துவம் பற்றிய அல்லது சோஸலிஸம் பற்றிய எண்ணங்களின் பலவீனங்களை பிரதிபலிப்பதாகவே தெரிகிறது. இலங்கைத் தீவின் அரசியல் கலாசாரத்தின் முன் சட்டத்திழன் ஆட்சியோ அனைவரும் சமமானவர்கள் என்பதுவும் அரசியல் வசீகரத்திற்கான சொற்களாக காணப்படுமே அன்றி நடைமுறைக்குரியதாகாது. குடந்தகால ஆட்சியாளர்கள் போன்று இடதுசாரிகளும் உரையாடிவிட்டு செல்லலாமே அன்றி சாத்தியமாக்க முடியாது. 2026 அல்ல 2096 ஆனாலும் சாத்தியமாகாது. அரசியல் அமைப்பும் அதற்கான அரசியல் கலாசாரமும் கட்டமைக்கப்படும் போதே அதற்கான நடைமுறைகள் சாத்தியமாகும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: தினக்குரல்)