March 17, 2026
அரசியல் கட்டுரைகள்

ஈழத் தமிழரின் ஜனநாயக ரீதியான போராட்ட வழிமுறைக்கூடாக கட்டமைக்க வேண்டிய அரசியல் தீர்வுக்கான கோரிக்கை?

ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாகவும் நிலைத்திருக்கக் கூடியதுமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிவரும் இனமாக காணப்படுகின்றனர். கடந்த கால வரலாறு முழுவதும் நமது அரசியல் உரிமையை அடைவதற்கான அகிம்சை வழியில் ஆயுத ரீதியிலும் மீண்டும் ஜனநாயக வழிமுறை ஊடாகவும் போராடும் மனோநிலையை கைவிடாது பின்பற்றி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் காலத்துக்கு காலம் போராட்டத்திற்கான முனைப்பினை வெளிப்படுத்துவதோடு, மரபுகளை கைவிடாத நவீன அணுகுமுறைகளை உள்வாங்கிக் கொள்ளுகின்ற எண்ணத்தை பிரதிபலிப்பவர்களாகவும் விளங்குகின்றனர். இவ்வரிசையில் தமிழ்த் தேசியப் பேரவை தலைமையில் சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்  ஒன்றிணைந்து தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி உள்ளனர். இக்கட்டுரை அதனைமதிப்பீடு செய்ய முயலுகின்றது.

தமிழர் பேரவையின் தலைமையில் கூடிய தரப்புகள் திம்பு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டும் தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுக்கான வரைபினையும் அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வுக்கான முன்வரைபை முன்மொழிய திட்டமிட்டுள்ளது. ஜே.வி.பி அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு வரைவு தொடர்பில் உரையாடப்படும் இனப்பிரச்சனைக்கான தீர்வு பொறுத்த விடயங்களை எதிர்கொள்கின்ற விதத்தில் வரைவின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. ஆனால் இதுசார்ந்து ஏற்பட்டுள்ள அவசியப்பாட்டையும் அதன்மீது முன்வைக்கப்படும் விவாதங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை தவிர்க்க முடியாதது ஆகும். அதனை விரிவாக நோக்குவது அவசியமாகும்.

முதலாவது, திம்பு கோட்பாட்டில் இருந்து தமிழ் மக்கள் பேரவையின் வரைவு வரையான தாயகம் – தேசியம் – சுயநிர்ணய கோட்பாடு பொருத்த பிரகடனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் பேரவை முன்மொழிந்த அதிக உடன்பாடுகள் கொண்ட சமூக ஒப்பந்த பரிமாணத்தில் சமஷ்டிக்கான உள்ளடக்கத்தையும் அங்கீகரித்து தீர்வுக்கான வரைவு உரையாடப்பட்டுள்ளது. திம்பு கோட்பாடு முன்னையது, பழமையானது என்பதை கடந்து, அது ஈழத்தமிழரின் அரசியல் இருப்புக்கான ஆதாரமாக கொள்ளப்படுகின்றது. அத்தகைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதற்காக அதனை கைவிட்டு செயல்பட முடியாது என்பது உணரப்பட்டுள்ளது. எப்போதும் ஈழத்தமிழர்கள் தமது இருப்பின் மீது கவனம் கொள்வதில் திம்பு கோட்பாடு முதன்மையானது. அதுமுன்மொழிந்த கோட்பாட்டு நியதிக்குள்ளேயே கடந்த கால ஈழத்தமிழர் வரலாறு தக்கவைத்துக் கொள்வதற்கு முயன்றுள்ளது. இது போராடுகின்ற அனைத்து தேசிய இனங்களின் மூல ஆதாரமாகவே தெரிகின்றது. சமகாலத்தில் அதன் போதனைகள் பற்றி பேசுவதை விட அதன் அடிப்படையிலிருந்து ஈழத்தமிழரின் இனப் பிரச்சனைக்கான தீர்வு முன்மொழியப்பட வேண்டும் என்பது நிராகரிக்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. அன்றைய கோரிக்கை என்றும் அடையப்படவில்லை என்பதற்காக பலவீனமானதாக கருத முடியாதுள்ளது.

இரண்டாவது, தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சிகளையும் சிவில் அமைப்புகளையும் கொண்ட கூட்டின் பெறுமானம் உடைய உடன்பாடாக காணப்படுகிறது. ஈழத்தமிழர்கள் முன்வைத்த தீர்வு திட்டங்களில் ஒப்பீட்டு அடிப்படையில் காத்திரமான புரிந்துணர்வை கொண்ட, தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் பரஸ்பரம் புரிந்துணர்வை தரக்க கூடிய தீர்வு திட்டமாக காணப்படுகிறது. அதனால் அதனை முன்னிறுத்திக் கொண்டு சமகாலத்தில் எழுந்திருக்கும் வாய்ப்புகளையும் தேவைகளையும் முன்னிறுத்துவதோடு தீர்வுக்கான முன்மொழிவு கட்டமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. அதனை நோக்கி சிவில் தரப்பு அரசியல் கட்சியும் இணைந்து பயணிக்க திட்டமிட்டு இருப்பது ஆரோக்கியமான அரசியல் பயணமாக தெரிகின்றது.

மூன்றாவது, ஈழத் தமிழர்களின் அரசியல் ரீதியான தீர்வு காண முன்மொழிவு என்பது அவர்களது இனப்பிரச்சனையின் தீர்க்கப்படாத உள்ளடக்கங்களை உரையாடுவதற்கான களமாக உள்ளது. அறியப்படவில்லை என்பதற்காக ஓரினம் தனது போராட்ட எண்ணத்தையோ வழிமுறைகளையயோ மேற்கொள்ளாது இருக்க முடியாது. இயங்கு தளம் கொண்ட எத்தகைய தேசிய இனமும் தனது அபிலாசைகளை தொடர்ச்சியாக முன்வைக்க தவறும் போது தேசிய இனம் காணாமல் போவதற்கான வாய்ப்பை அதிகம் கொடுக்கக்கூடியது. அதனால் சமகாலத்தில் ஏற்பட்டிருக்கும் சவால்களையும் எதிர்கொண்டு தமது கோரிக்கைகளை அடைவதற்கான வழிமுறையை நோக்கி பயணிப்பது அவசியமானது.

நான்காவது, அரசியல் கட்சிகளாலும் சிவில் தரப்புகளாலும் முன்மொழியப்பட்டுள்ள தீர்வுக்கான வரைவு சார்ந்த கோரிக்கைகள் வெற்றி பெற வேண்டுமாயின், அதற்கான போராட்டங்களும் பொறிமுறைகளும் விரிவாக்கப்பட வேண்டும். கடந்த 16 ஆண்டுகள் ஈழத்தமிழரின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதற்கான போராட்டங்கள் எதுவும் கருத்தாக்கமாக முன்னெடுக்கப்படவில்லை. அதனை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடும் காலமும் அதிக கட்டளைகளை ஈழத்தமிழர்களுக்கு வெளிப்படுத்தி வருகிறது. காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான ஜனநாயக வழிமுறை சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு எழுந்திருக்கின்றது. அதுவே சந்திப்பின் ஆரோக்கியமான விளைவாக அமையும். மீளவும் தீர்வுக்கான வரைவுகளை முன்மொழிவது மட்டும், சாத்தியமான அல்லது முன்வைக்கப்பட்ட தீர்வை அடைய முடியாத நிலை ஏற்படும். தீர்வுக்கான வரைவுகள் முன்வைக்கப்படும் அதே சந்தர்ப்பத்தில் அதற்கான ஜனநாயகப் பொறிமுறைக்குட்பட்ட போராட்டங்களும் ஈழத் தமிழர்கள் மத்தியிலான உரையாடல்களும் அறிவுமயப்படுத்தலும் அவசியமானது. இதனை நோக்கி சிவில் அமைப்புகள் அரசியல் கட்சிகள் தொழில்படு திறன் உடையதாக தம்மை மாற்றிக் கொள்வது தேவையான ஒன்றாக காணப்படுகிறது.

ஐந்தாவது இத்தகைய தீர்வு முயற்சிக்கான உரையாடல் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்டு மேலும் தனித்தனியான உரையாடல்களை கைவிட்டு அத்தகைய உரையாடல்கள் மேற்கொள்ளும் ஏனைய தரப்புகளையும் இணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. வடக்கு கிழக்காக இத்தகைய உரையாடல் எட்டப்படாத போதும் வடக்கும் கிழக்கும் தனித்தனியே சமகாலத்தில் தீர்வு குறித்த உரையாடல்களை முன்வைத்துள்ளனர். ஆனால் அவற்றை ஒன்றிணைத்து முன்னெடுப்பதற்கான செய்முறையே அவசியமானதாக தெரிகின்றது. அவ்வாறே ஏனைய அரசியல் கட்சிகளும் இத்தகைய இலக்க அடைவதற்கான கோட்பாட்டு ரீதியான புரிதலை கொண்ட சிவில் தரப்புகளையும் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டிய தேவைப்பாடு அத்தகைய தரப்புக்கு உரியதாகும். ஆனால் அத்தகைய தரப்புகள் மீதான பலவீனமான விமர்சனங்களை கைவிட்டு அவற்றின் முக்கியத்துவத்தை எவ்வாறு இணைத்துக் கொண்டு செயல்படுவது என்பது பற்றிய உரையாடலை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் இத்தரப்புக்கு உண்டு.

எனவே, தமிழர் பேரவையின் தலைமையில் கூடிய அனைத்து தரப்புகளும் ஆரோக்கியமான பயணத்தை ஈழத்தமிழர்களுடைய அரசியலில் முன்வைப்பதற்கு மறந்துள்ளனர். அதனை தொடர்ச்சியானதாகவும் நிலையானதாகவும் ஆக்குவதற்கு அதன் மீது முன்வைக்கப்படும் ஆரோக்கியமான விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்டு எதிர்கால ஜனநாயக முறையிலான போராட்டங்களையும் அதற்கான வழிமுறைகளை கட்டமைத்து செயல்படுவது அவசியம். அரசியல் தீர்வுக்கான கோரிக்கை மிகத் தெளிவாகவே திம்பு கோட்பாட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்பால் கட்டமைக்கப்படும் தீர்வு வழிமுறைகள் ஜனநாயக ரீதியான போராட்ட வழிமுறைகள் ஊடாக அடையப்படுவதே அவசியமானதாக தெரிகின்றது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

(நன்றி: யாழ் தினக்குரல்)